Friday, November 23, 2018

மழைவேதம்



இனிய ஜெயம் 

அங்குலம் அங்குலமாக இலை ஒன்றினில் நடை பழகும் கண்ணாடிப் புழு ,அப்படியே நடந்து நடந்து இந்த வனத்தை முற்றரிய கிளம்பியது போல , ஒரு நிலை . அத்யாயம் அத்யாயமாக வாசித்து உரையாடலாம் என வெண் முரசு சார்ந்து புதுவை நண்பர்கள் முடிவு செய்த போது, அப்டின்னா இது மாதிரி வாசிச்சி  முடிய ஒரு கால் நூற்றாண்டு ஆகும் என்றொரு நண்பர் கிண்டல் செய்தார் . கால் நூற்றாண்டு என்ன அரை நூற்றாண்டு கூட ஆகட்டுமே ,வெண் முரசு போன்றதொரு புனைவு  வனத்தை , ஒவ்வொரு இலையிலும் ஒளிரும் வாழ்வை கொண்ட , இந்த வனத்தை இப்படி வாசித்து ,உரையாடி சுவைப்பது எத்தகையதொரு பேரானந்தம் என்பது ,இங்கே எங்களில் ஒரு பத்து பேர் இந்த இரண்டு வருடங்களில் உணர்ந்திருக்கிறோம் . இதோ மழைப்பாடல் இறுதிப் பகுதி மீது  இன்று மாலை உரையாடல் நிகழ்த்தப் போகிறோம் .

கடந்த மாதம் முழுதும் போர் போர் போர் என்றே குருதிக் குளத்தில் நீந்திக் கிடந்து விட்டு சட்டென அச்தினாபுர்யின் அரண்மனைக்குள் ,அன்னையர் முன் நிற்கையில் எல்லாமே நிலைபெயர்ந்து உதிரத் துவங்கி விட்டது போல ஒரு உணர்வு . ஐவரையும் தனது மகன்கள் மைந்தர்கள் என தோளில் போட்டு கொஞ்சிய ,அவர்களை கரங்களை விட்டு இறக்கிவிடாமலே வைத்திருந்த பாண்டு , அன்று குழந்தைகளை விட்டு விட்டு எங்கோ செல்கிறான் .  பாண்டு தோளில் அன்றி குழந்தைகள் தனியே காணப்படும் அக் கணமே குந்தி மனதின் ஆழத்தில் அத்தனையும் உணர்ந்து விடுகிறாள் .

அத்தனையும் கடந்து பாண்டுவின் ஆழத்தில் உறைந்து நின்ற  தனது குருதி வழியே ஒரு வாரிசு வேண்டும் என்ற விழைவுதான் பாண்டுவை அக்கணம் நோக்கி செலுத்தியதா ?  சிதையில் எரியும் பாண்டுவை பார்த்தபடியே நிற்கும் தருமனின் துயர் ,அங்கிருந்தே தருமனின் துயரக்கதை துவங்குகிறது . பாண்டு இறந்தது அறிந்து திருதா கொள்ளும் கொந்தளிப்பு ,இதோ அங்கு துவங்கி இந்த பாரதப்போரின் இரவு வரை அழுது கொண்டே இருக்கிறார் .பாண்டு எனும் பெயருக்கு பதில் பெயர்களும் ,தம்பி எனும் உறவுக்கு பதில் உறவுகளும் மட்டுமே மாறுகின்றன .

நான் சொன்ன எதற்கும் , நான் செய்த எதற்கும் இனி நான் பொறுப்பில்லை .மிக மிக எளிதாக புன்னகையுடன் சொல்லிவிட்டு , அனைத்தயும் துவங்கிய சத்யவதி  ,துவங்கிவிட்ட அனைத்திலிருந்தும் எளிதாக விடுவித்துக்கொண்டு  அம்பிகை அம்பாலிகயுடன் வனம் புகுந்து விட்டாள்.  இந்த சித்திரம் வருகையில் கண்ணீரை அடக்க இயலவில்லை . இன்று போரில் இரவில் அன்னையரைப் பழிக்கும் வீரர்கள் போல ,மனம் தன்னியல்பாக சத்யவதியை பழித்தது.  பாவி பாவி இன்று சர்வவல்லமை கொண்ட பீஷ்மன் ,நாயினும் கடையன் என்று களத்தில் ,கொன்றொழித்து சீரழிந்து கொண்டு இருக்கிறான் .  அவரை இந்த நிலையில் இன்று கொண்டு வந்து இருத்திய அவள் ,எந்த இடரும் இன்றி ,புன்னகையுடன் விடை பெற்று செல்கிறாள் .இவள் மயிர்க்கால்கள் தோறும் சுமக்க வேண்டிய அம்புகளை ,பீஷ்மர் சுமக்கப் போகிறார் .  

எல்லாமே ஒரே பயித்தியக்காரத் தனமாக இருக்கிறது .அபத்தத்தின் உச்சம் . தவளைப்பாடல் ஒலிக்கிறது .இதோ வெளியே இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது . 

கடலூர் சீனு