Monday, November 12, 2018

காட்சிகள்


அன்புள்ள ஜெ

போர்க்கள வர்ணனை சில இடங்களில் நேரடி ரிப்போர்ட் ஆக இருக்கிறது. சில இடங்களில் மிதமிஞ்சிய சாகசங்களைச் சொல்லும் வீரகதையாக ஆகிறது. சில இடங்களில் மனித உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருப்பதைச் சொல்லும் நவீன இலக்கியம்போல இருக்கிறது

ஆனால் சஞ்சயனின் பார்வையில் சட்டென்று அது குழந்தைத்தனமாக ஆகும்போதுதான் உச்சகட்ட கவித்துவம் வெளிவருகிறது. என் ஐந்துவயது மகளுக்கும் இந்தக்காட்சியைச் சொன்னேன். அவள் அப்படியே அதைக் கேட்டு கற்பனையில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டேன்

கடோத்கஜனின் உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் அமைந்த விலங்குகள் எழுந்து வந்தன. நெஞ்சிலிருந்து இரு மத்தகங்கள் எழுந்து யானைகளாயின. தொடைகளிலிருந்து இரு களிறுகள் எழுந்தன. கால்களிலிருந்து கரடிகள். அரசே, அவருடைய இரு கைகளும் விரைவுகொண்ட இரு சிறுத்தைகளாகி எழுந்தன. வளைந்து பதுங்கியும், விரிந்தும், சிலிர்த்தும், சீறியும் அவை தாக்கின. பத்து கைநகங்களும் பத்து கூரலகுகளாகி கழுகுகளாக மாறின. அவருடைய வயிற்றிலிருந்து செதில்நிரைகொண்ட உடலுடன் எழுந்தது முதலை.

இதை விழிகளால் ஒன்றைப்பார்த்து அதைக்கொண்டு அப்படியே காட்சிகளையும் அர்த்தங்களையும் உருவாக்கிக்கொள்ளும் குழந்தைகளின் உலகைச்சேர்ந்த கற்பனை என்று சொல்வேன்

ஜெயராஜ் ஆறுமுகம்