Friday, January 16, 2015

குருதிகொள் கொற்றவைஇன்றைய அத்யாயம் வாசித்து முடித்ததும் இன்றும் திரௌபதி குறித்து எழுத வேண்டுமா என்று சிறிய தயக்கம். [பிரயாகை 88  ]அதிகாலைக் கனவில் , ............சாதியை சேர்ந்த,...........பிரிவை சேர்ந்த,............வகையறாவை சேர்ந்த,............தாயாதியை சேர்ந்த ,  செத்துப்போன என் தாத்தா கனவில் தோன்றி ''பேராண்டி பேராண்டி  ஒன்னும் பெறச்கன இல்ல அந்தப்பிள்ள ஒன்னியும் 'தமிழ்' பொண்ணு இல்ல நீ ஏது'' என அனுமதி வழங்கினார். ஆனால் அவர் கூடவே உடன்கட்டை ஏறிய என் பாட்டி [பாவிப்பயலே அத நீயுமா நம்புறா? குண்டு கட்டா கையக் கால கட்டி 'ஏத்திப்' பிட்டாங்கடா மக்கா] கூடவே கனவில் தோன்றினார். அவர் தாத்தா போல அல்ல விவேகி . அவர் சொன்னார் 'பேராண்டி அந்தப் பொண்ணாவது பரவா இல்ல. இந்தப் பொண்ணு 'இந்தியப்'பொண்ணு  பாத்து சூதானமா நடந்துக்கோ'' என அன்பாக மட்டுறுதினார்.

தமிழனை தாக்கும் வடக்கு என சொல்லி சமாளிப்போம், அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்ற மாபெரும் முடிவுடன் வெண் முரசு குறித்து தொடர்ந்து உரையாடலாம் என முடிவெடுத்து விட்டேன்.

இனிய ஜெயம், சோ எழுதிய மகாபாரதம் பேசுகிறது நூலின் பீடிகையே  திரௌபதி மணம் அன்று எத்தனை சர்ச்சைகள் நடுவே 'ஏற்றுக்'கொள்ளப்பட்டது எனும் நீண்ட விவாதம் வருகிறது. எனில் வியாசன் இதை எழுதுகையில் அவரே தன் அகத்தில் இத்தனை சர்ச்சைகள் வழியேதான் திரௌபதி மணத்தை வகுத்துக் கொண்டிருப்பார்.

சுயம்வரத்தில் நிற்பது திரௌபதி. 'உங்கள் சுயம்வரம் முடிந்தது இளவரசி. இப்பொது நீங்கள் அரசி '' என அவள் வசம் சொல்லி அதை முடித்து வைப்பது கிருஷ்ணன்.[என்ன ஒரு குறும்பு] .

பின் நிகழ்ந்தவை அனைத்தும் விதுரன் ஒற்றன் குரல் வழியே  அறிவது, மொத்த நிகழ்வையும் செறிவாக முன் வைத்து விடுகிறது.

எப்போதும் பாலியம் அதைக் கடந்து இளமை எனும் பயணத்தில் இந்த இரண்டு பருவத்துக்கும் 'இடையே' ஒரு வகுத்துரைக்க இயலா பருவம் உண்டு. அதில் இருக்கிறார்கள் நகுலனும் சகாதேவனும். அவர்கள் 'பபுள்கம்' மெல்லும் சித்திரத்தை கேட்டு விதுரன் புன்னகைப்பது அழகு. எந்த ஆணும் மனதில் தங்கி வாழும் திரும்ப இயலா பருவம் அல்லவா அது.

மீண்டும் திரௌபதி அலைக்கழிக்கிறாள். நகுல,சகாதேவன் இருவரையும் ஒன்றாக அழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறாள்.  'விஷயம்' அறிந்த பார்த்தனும் பீமனும் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைக்கிறார்கள்.

கிழவன் சேதுபதி  சாகும்போது, ஒரு உடன்கட்டை திருவிழாவே நடக்கிறது. கிட்டத் தட்ட 'பொண்டாட்டி பண்ணை'வைத்து நடத்தி இருக்கிறான். அதில் எல்லாம் அதிர்ச்சி ஆகாத மனது. திரௌபதி என்றால் மட்டும் துனுக்குருகிறதே ஏன் என யோசித்தேன். இதுதான் ஆண் ஆதிக்காமா ?

அதுவும் இல்லை என்று சுருதியின் தயக்கத்தில் இருந்து புரிகிரது. ஆக திரௌபதி 'குருதி கொள் கொற்றவை' அவள் அவ்வாறுதான் இருப்பாள். அவளை அவளது செயலை,ஆளுமையை வேறு வகையில் வகுக்க வழியே இல்லை.   

கடலூர் சீனு