வாலெயிறு ஊறிய நீர்-திருக்குறள்.
பாலொடு தேன் கலந்தால் பெருகும் இனிப்பை பாத்திரத்தில் வைத்து தந்தார் வள்ளுவர். அதை உடலுக்கு மாற்றிவைத்து விருந்துவைத்தார் அ.முத்துலிங்கம் பாரம்-சிறுகதை //அன்றைய மாலை முடிவுக்கு வந்தபோது ஒரே ஒரு முத்தம் மிஞ்சியது. அதை இருவரும் சமமாக பங்குப்போட்டுக்கொண்டார்கள்//
நீலம்-32ல் ஜெ அதை உடலிருந்து பிய்ந்து எடுத்து உயிரில் ஏற்றி வைத்துவிட்டார் //உன் முகம் நீண்டுவந்து என் முகம் தொட்டது. இருளுருகி ஒன்றான அம்முத்தத்தின் இருபக்கமும் இரு தனிமையெனநின்றிருந்தோம் நாம்// முத்தமே ஒரு ஆயுதமாகி இருவரையும் கொன்று தான் வென்று நிற்கும் ஒரு முத்தயுத்தம் இன்று. இருவரையும் இல்லாமல் ஆக்கும் ஓரு முத்தமா? ஐயோ..செத்தேன் அல்லது ஏன் இத்தனை நாள் நான் இட்ட முத்தமெல்லாம் முத்தமென்று எண்ணி எண்ணி இருந்து என்னை நான் ஏமாற்றி வாழ்ந்தேன்.
பேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றின்பம்போல் இருக்கும் என்றார்கள். கடலை துளியில் காட்டும் அழகு.
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!-திருமூலர்.
பேரின்பத்தை சிற்றின்பத்தில் காட்டி நம்மக்கள் முக்தியை என் என்பார்கள். முக்தியை என்ன என்பார்கள்? முத்தம் என்பார்கள். முத்தம் என்றால் முத்து, முக்தி, முத்து என்றால் ஒளி, முக்தி என்றால் விடுதலை. ராதை இன்று கண்ணனுடன் கொண்ட முத்தமெல்லாம் அவள் கண்ட முக்திதானா?
//பாம்புண்ணும் பாம்பாகி பருத்து நெளிவேனா? ஒளியுண்ணும் விழி என்று உள்நிறைவேனா? இன்றுஒன்றுக்குள் ஒன்று என்று சுருண்டு அமைவேனா? எரிமீன் மண்புதைகிறது. மலரிதழ் நிலம்சேர்கிறது. என்னஇது இக்கணமும் என்னுடன் ஏன் இருக்கவேண்டும் காலம்? நானென்று எனைக்காட்டும் மாயம்?நானில்லை என்றால் எங்குவிழும் இம்முத்தம்? என் உளமறியாவிடில் எவ்வண்ணமிருப்பான் இவன்?நானில்லை இவனில்லை என்றால் எவ்வெளியில் நிகழும் இந்த இன்கனிவாய் தித்திப்பு? முத்தமொருகணம். முத்தமொரு யுகம். முத்தமொரு வெளி. முத்தமொரு காலப்பெரும்பெருக்கு. முத்தமென்பது நான்.முத்தமென்பது அவன். முத்தமென்பது பிறிதொன்றிலாமை//
முத்தத்தை முக்தி என்றுதான் கண்ணனின் வாய்ச்சொல் வழங்குகின்றது.
//உன் வீடு இதுதான். அங்குளது நீ விட்டுவந்த கூடு” என்றான்// கூட்டையும் கூண்டாக்கி வாழும் மனிதர்கள் முன் வந்துவிழும் ஜெவின் வீடு என்ற சொல். முத்தத்தில் நினைந்து இருக்கையிலும் ஒளிவீசுகின்றது.
எத்தனை எத்தனை உடலெடுத்து ராதை கண்ணனுடன் முத்தாடுகின்றாள். எந்த ஆடை உடுத்தி வந்தாலும் அந்த ஆடைக்குள் இருப்பது ராதை என்று கண்ணன் அறிக்னிறான். ராதை பிரிந்துக்கிடக்கின்றாள். ஆடைக்கு கண்ணிருந்தால் ஒவ்வொரு ஆடையும் தன்னை வேறு வேறாகத்தான் எண்ணிக்கொள்ளும். வேறுவேறாக எண்ணி கடவுளுடன் பொய்கோபம்கொண்டு பிளவுப்பட்டு பிரிந்து நிற்கும். அநாதியாய், பலவாய், ஒன்றாய் ஆகி நிற்கும் அனைத்தும் அதுதான். சிற்றின்பமோ பேரின்பமோ ஆடைகள்தான் தடை.
//என் உள் நின்று எழுந்தது அவன் குரல் “ஒற்றை மனம் கொண்ட ஒருகோடி உடல்.” தலையை கையால்அறைந்து “சீ!” என்று கூவி எழுந்தேன். “கோடி உடலேறி ஆடும் ஒரு காதல்.” என் குழல் பற்றி இழுத்து “மூடுஉன் வாயை” என்றேன். “ஆடிப்பாவையென எனைச்சூழும் ஓர் அகம்.” பற்களைக் கடித்து கைநகம் கொண்டுகைகுத்தி இறுக்கி நின்றேன். பின் உடல் தளர்ந்து அமர்ந்தேன்//
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கின்றார். //மருத்துவமனையில் பெயரைப்பதிவு செய்தப்பின்பு நோய்தீராமல் எப்படி வெளியேறுவது//
ராதையின் நோய்தீர கண்ணன் முத்தமென்னும் மருந்துதருகின்றான். அம்மா தந்தாலும் ஆண்டவன் கொடுத்தாலும் மருந்துக்கொடுத்பவர்கள் மேல் கோபம் கோபமாகத்தான் வருகின்றது. ஜெ முத்தத்தை ராதைக்கு கொடுக்கிறார். என் உதட்டில் தித்திப்பு.
//வட்டஉடல் சிலிர்த்து வளையல்களாயிற்று என் காலடி குளிர்ச்சுனை// அற்புதமான கவிதைஜெ.எண்ணும்தோறும் எண்ணும்தோறும் அலைகளை பரப்பிக்கொண்டே இருக்கும் அந்த குளிச்சுனை. இனி எந்த குளத்திலும் இந்த சொல்லின்று கால்நினைக்கமுடியாது.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஆர்.மாணிக்கவேல்.