Wednesday, September 17, 2014

இறைபீடம்




ஓம் முருகன் துணை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நீலம்-27ற்கு நான் எழுதிய “பூவின் நடனம்” பதிவை கூகுள்பிளசில் “ஒருமலர்” என்று கண்டேன்.

ஒரு மலர் என்ற சொல் மனதில் மலர்ந்து மணத்தது. ஆனால் அதன் வடிவம் பொருள் ஒன்றும் அறியா பெருவெளியில் நின்றேன். ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்விதான் எங்கும். “ஒரு மலர்” இன்று நீலம்-28ல் உணர்ந்தேன். உணர்ந்து அந்த கணம் நானே உங்கள் தோழியானதைபோல் கரைந்தேன். கரைந்ததின் மூலம் இருந்தேன்.

பூவின் நடனம் ஒரு கீற்றுதான்,ஒரு வரிதான், ஒரு கணம்தான் என்பதை இன்று நீலம்-28யைப்படித்ததும் அறிந்தேன். முழுதும் அறிந்துக்கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை திகைக்கிறேன். “ஒரு மலரின்” பெரும்வெளி, பெரும் கனம், தொடர் கணம், மணவெள்ளம் என்னை திக்கு முக்காட செய்கின்றது.

மலர் எனக்கு பிடித்த ஒன்று, எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான் ஆனால் எனக்கு ஏன் பிடிக்கின்றது என்று மட்டும் இன்னும் தெரியவில்லை. தெரிந்துக்கொள்ளமுடியுமா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் மலரைப்பார்க்க தொட அதன்கூட இருக்க மனம்வழிந்துப்போவதை எண்ணி எண்ணி வியப்பேன். தெரியாத ஒன்றில் மனமே நீ என்ன தெரிந்துகொண்டுவிட்டாய் என்று இப்படி என்னை இழுத்துப்போகின்றாய் என்று உள்ளுக்குள் பேசிக்கொள்வேன். கண்ணிருந்தும் குருடுபோல, உடலிருந்தும் உடலிலிப்போல ஆகும் அந்த தருணத்தில் ஏதோ ஒன்று நடக்கின்றது என்பதை அறிந்து, அறிய முடியாத அந்த வசிகரத்தில் உள்ளம் சலித்துப்போவேன். அதுகூட ஒரு ஆனந்தம்தான்.

மலைப்போல குவிக்கப்பட்ட ஒரு கூடை ரோஜாவில் இரண்டு ரோஜாமலரை தேர்வு செய்யமுடியாமல் அந்த மொத்த கூடைப்பூவையும் புரட்டிப்புரட்டிப் பார்த்து சலித்த அன்று காலமும் கூச்சமும் கிள்ள இரண்டு ரோஜாவை எடுத்தேன். அன்றும் அதன்பின்பும் பூவறிந்தேன் இல்லை. இன்று நீலம்-28ல் அறிந்தேன். வழிவது மலைஅருவி பிடித்தது என் சிமிழ்கைளவு.

//இன்னொரு மலர் உதிர்ந்து என் தோள் தொட்டு விழுந்ததுஅஞ்சி எழுந்த சிறுமுள்தொகை.அல்லியெழுந்தகுறுஞ்சிமிழ்இம் மெல்லிதழ் அடுக்கை எத்தனை முறைசெய்து பயின்று அமைத்தது மலர்களின் தெய்வம்?நுண்ணிய நரம்பின் பின்னல்கள்புல்லிவட்டத்தின் மலர்வைஅல்லிக்கொத்தின் மலர்பொடியை ஊதிஊதிப்பொருத்திய உலைமூச்சு எதுஅந்தப் பொன்னுலைக் கனல் இன்று எங்கேஇங்கே வீணுக்கு உதிர்ந்துவெறுமைகொண்டு மட்கி மீண்டும் உப்பாகையில் எங்கு சென்று நின்று ஏங்கி விம்முகிறது இம்மலரின் எழில்?//

தெய்வங்கள் வந்தமரும் பீடங்களாய் இருக்கும் மலர்களை, புலன்கள் உணரும் சித்திரக்கோலங்கள் என்று மட்டுமே அறிந்து வசிகரிக்க நின்று இருக்கின்றேன் பொருள் உணரவில்லை என்பதை இன்று நன்கு உணர்கின்றேன்.

கோட்டையின் சுற்றுச்சுவரைத்தாண்டி உள்ளுறையும் பொக்கிஷம் என்ன என்பதை வெளிச்சமிட்டுப்போகும் இன்றைய சொற்களின் மின்னல் சாட்டை சொடுக்கில் வெளிச்சம்பெற்று வலியில் துள்ளிவிழுகின்றேன். சொல்லெல்லாம் திறந்து அதன் பொன்னெல்லாம் வழிந்து நதியாவதுபோல் உள்ளது.

//மேலும் ஒரு மலர் என் மடியுதிர்ந்ததுஎன் கையில் எடுத்து கண்முன்னே நோக்கினேன்அதற்குள் உருக்கொளாதுகருக்கொளாது வெறும் நினைப்பென வாழ்ந்த காடு பெருமூச்சுவிட்டதுஅப்பசுமையில் மலரவிருந்த மலர்கள்கனியவிருந்த கனிகள் பாடவிருந்த பறவைகள் என்னிடம் சொல்லின “இருத்தலெனும் பேறு எய்தாதுஇருத்தலைப்போல் துயருண்டோ தோழி?”//

இரக்கத்தை, துயரத்தை, வேதனையை வடித்துப்போகும் “இந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்” என்று பாடலின் பிம்பத்தைப்பிடித்து ஒரு அழியா உயிரோவியாமாக நிறுத்தினால் எப்படி இருக்கும், அந்த ஓவியம் எத்தனை பெருவெளியை உச்சத்தை நமக்கும் காட்டும் என்பதுபோல் உள்ளது ஒரு மலர் இன்று கொள்ளும் பொருளில்.

வாழ்க்கை என்னும் பெரும்நதிப்பெருகி பெருகி ஓடி ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி மூங்கில்போல் உயர்ந்து மஞ்சல்போல் மணத்து என்று எல்லாம் பசுமையாய் தழைப்பாய் பெருக்கமாய் இருக்கும் காட்சியின் எதிர் திசை என்னவாக இருக்கும். மண்வெடித்து கால் உள்ளிழுக்கும் கொடும் பாலை. அங்கு காற்றுக்கூட இல்லை. வெறும் பாழ்வெளியன்றி வேறெதும் இல்லை. யமுனையின் படிமம் வழியாக ஜெகாட்டும் ஆன்மிக தரிசனம். நெஞ்சம் அறைந்து கண்ணீர்விட வைக்கின்றது. ராதைக்காக அழுவதா? ராதையின் நிலையில் நின்று அழுவதா? ராதைப்போல் ஆகிவிடுவோமே என்ற பயத்தில் அழுவதா? நேற்றுவரை ஒளியின் சிற்பமாக இருந்த ராதை இன்று ஒளிதொலைந்து அதன் நிழல்மட்டும் திரண்டு சிற்பமாக ஆனதுபோல் நிற்கும் நிலையில் மனம் கனக்கின்றது.

சுமை எல்லாம் சுமையாக தெரியாமல் வாழ்க்கை ஓட, சுமை இன்மை பெரும் சுமையாக மாறவதை ராதையின் வாழ்வில் உணரமுடிகின்றது. முற்றும் துறந்தவரின் பாதத்தில் தலைவத்து வணங்கும் பெற்றோரும் தனது பிள்ளை துறவறத்தில் செல்கின்றேன் என்றதும் பதறுவது ராதை செல்லும் கொடும்பாலையில் தன்பிள்ளை விழுந்துவிடுவானோ என்ற பயத்தால்தானா?  இல்லாறம் அல்லது நல்லறம் அன்று என்று சொன்ன துறவறத்தில் நடந்த ஓளவை ராதையாகி நிற்பதுபோல் தோன்றுகின்றது.

//தலையற்று துடித்தமைந்த பலியாட்டின் ஏனென்று பிரமித்துறைந்த வெறும்விழி நான்அதன் முன் இருளுக்குள்எழுந்தருளும் தேவனின் கல் நோக்கு நீ//
//ஒருபோதும் அழியாத பழிச்சொல் நீஒருவருமே கேளாத அபயக்குரல் நான்//

கண்ணா கடவுளே என்ன ஒரு கல்நெஞ்சக்காரன் நீ. உன்னை கல்லில் வடிக்க நினைத்தவன் வாழ்க. உன்னை நெருப்பில் விரல்வைத்து கண்டவன் வாழ்க. உன்னை விஷத்தின் நிறத்தில் வரைந்தவன் வாழ்க. உன்னை கனவாக்கியவன் வாழ்க. உன்னை சொல்லாக்கியவன் வாழ்க. இதயம்திங்கும் விஷக்கொடுக்கே பெரும்சுழியின் மையத்தில் நீயிருக்க நான் எங்கு செல்ல முடியும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கின்றார். தன்னை கொலைசெய்துக்கொள்ள சின்ன கத்தியே போதும். மற்றவரைக்கொலைசெய்யத்தான் பெரும் வாள்வேண்டும்.

கண்ணன் ஜெவின் கையில் ராதை என்னும் பொன்னைக்கொடுத்து பெரும் கொலைவாளை செய்யச்சொல்கின்றான். பழிகாரன் ஆனால் “கண்ணன் பாவம்” ஒரு பூவை வாளுக்கும்போது ஜெவை கண்ணீர்விட வைத்தது போதாது என்றல்லவா அவனும் கண்ணீர்விடுவான். அவன் கண்ணீரின் சுவை அறிந்த கண்மணி.


நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணி்க்கவேல்.