Friday, September 19, 2014

குவலயபீடம்




அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயத்தில் [கம்சன் மரணம்] வரும் யானை என்னை என்னவோ செய்தது. யானையை நாம் ஒரு சாதுவான பிராணியாகத்தான் அறிந்திருக்கிறோம். பழங்காலத்தில் கொலைசெய்ய பயிற்சி கொடுப்பப்பட்ட யானைகள் உண்டு என்று அறிந்திருக்கிறோம். போர்களில் யானைகளைக் கொல்வதும் சாதாரணம். ஆனால் கண்ணன் கையால் யானை சாவது பலவகையான உணர்ச்சிகளை உருவாக்கியது.

குறியீட்டுரீதியாக அது கம்சனின் ஆணவம்தான் இல்லையா? யானை வேங்கையை கண்டு அஞ்சுவதும் அழகாக இருக்கிறது. அதன் தாளின் தடைகள் எல்லாம் உடைகின்றன. ஆனால் அந்ததுதிக்கையை கண்ணன் வளைத்தபோது ராமனின் கையில் வளைந்த வில்லின் நிறைவை அடைகிறது.

எப்போதுமே எடையை உணர்ந்துகொண்டிருந்தது அது. எடையை பற்றிய கவனம் இருந்தது. நீரில் மட்டும் எடையில்லாமல் இருந்தது. அகங்காரத்திற்கான எல்லா அர்த்தமும் இந்தவார்த்தைகளில் இருந்தது.

மத்தகம் மீது கண்ணன் அமர்ந்ததும் கை நீட்டி துழாவி இருட்டைத்தான் அறிகிறது. நாகத்தின் நஞ்சு போல துதிக்கை வழியாக குருதிகொட்டி சாகிறது

மொத்த அத்தியாயத்திலும் தனித்து நிற்கிறது இது

சண்முகம்