Sunday, September 28, 2014

கோதையின் வரிகள்




ஐயா,

உம் பணி பெரும் பணி.

அப்பெரும்பணிக்கிடையிலும், எனக்கும் பதிலளிக்கும் உம்மை வியக்கிறேன்.
பழந்தமிழை, செந்தமிழைப் புதுப்பித்து வாசகர் நெஞ்சங்களில் புழங்கச்
செய்கின்றீர்கள்.

"அது சேவலின் ஓசை என்று தோன்றியது கொக்கரக்க கொக்கரக்க கொக்க்ரக்கோ கோ
என்ற ஒலி. ஆனால் நான் விரும்பியது குயிலின் ஒலி."

கோதை குயிலைப் பாடும் முன் சேவலைத்தான் பாடினாள்.சேவல் கூவியபின்னும் கரியோனோடுடறங்கும்  நப்பின்னையைப் பாடினாள்.நப்பின்னையே ராதையென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கோதை பாடிய சேவலோசையே உமக்குக் கேட்டு,  ராதைக் கதைக்கு வித்திட்டதோ என
வியக்கிறேன்.பெரியாழ்வார் பித்தும், கோதைப் பித்தும் உம்மையும் பித்தராக்கியதோ?
பித்தின் உச்சம்தான் உண்மையான பக்தியோ? உமக்கும் பக்தி வந்ததோ?

கோதை வரிகள்.ராமானுஜரை மயக்கிய வரிகள்.

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பெரியாழ்வார் சொல்லும், திருமகளின்சொல்லும் உம் சொல்லாய் இன்னும் இன்னும்
விளையாடட்டும்.

நன்றிகள்.
டில்லிதுரை