இந்நீலப்பெருக்கு என்றும் அழியாது. இன்றிருப்பாய், நாளை என்னுடன் இருப்பாய். அன்றும் இங்கு நானிருப்பேன். ஆயிரம் கோடி ராதையர் உடனிருப்பார்
என்னும் வரியில் முழுக்கமுழுக்க கிருஷ்ண ரூபத்தை ஒரு விராட தரிசனமாகவே ஆக்கிவிட்டீர்கள்.
காலாகாலமாக நாம் கேட்டுவருவதுதான். பக்தன் இறைவனுக்கு இனியவன் என்று. ஆனால் அதை உணர்ச்சிகரமாக வாசிக்கும்போது மனம் பொங்கிவிட்டது.
என் விழியறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடட்டும். அங்கு அழியாத பொய்வந்து குடியேறட்டும். இளமையெனும் மாயையில் என்றுமிருக்க அருள்செய்க.
என்ற வரியையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். இதுவும் நம் மரபிலே உள்ளதுதான். எப்போதெல்லாம் இறைவனின் விஸ்வரூபத்தை மனுஷன் பார்க்கிறானோ அப்போதெல்லாம் இறைவா போதும், எனக்கு இது வேண்டாம், என்னை சாதாரணமனிதனாக இருகக்வை என்றுதான் சொல்கிறான். கீதையிலும் இது வருகிரது. கொஞ்சநாள் முன்பு வைக்கம் முகமது பஷீர் பாலைவனத்தில் நிலவைக் கண்டதும் அல்லாவிடம் அதையே சொல்லி கூவியதாக எழுதியிருந்தீர்கள்.
ஆனால் ராதை உணர்ந்தும் இருக்கிறாள்
என் கண்ணன். என் உள்ளம் நிறைந்த மன்னன். எனக்கில்லாது எஞ்சாத எங்கும் நிறை கரியோன்
என்று தான் சொல்கிறாள். என்றும் நிறைந்தவனை தனக்கு மட்டுமாக அள்ளிக்கொண்டிருக்கிறேன் என்று அறிந்ததுதான் அவளுடைய ஞானம்
சுவாமி