Thursday, September 25, 2014

கங்காளி




அன்புள்ள ஜெயமோகன்

ராதை பேரழகுடன் மலர்களில் இருந்து மரமாகி பருவங்களாகி வானாகி விண்மீன்களாகி கடைசியாக காளியாகி விட்டாள். நீலக்கடம்பு, நீலமுகில்வண்ணன் இப்போது நீலி. ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த தத்துவமும் மானுட உறவுகளின் அறுபடாத தொடர்ச்சியும் நீலமணிவண்ணனும் ராதையும் இணையும் இடத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அழகான ஒழுக்குள்ள தமிழ். அற்புதம்

ஒரு வினா அத் 36 ல் காளி காளி கங்காளி என்று வரிகிறது. கங்காளி என்றால் என்ன. என் குறைவான தமிழறிவில் நான் அந்த வார்த்தையை அறிந்ததில்லை. காளியைச் சொல்ல அந்த வார்த்தையைக் கேட்டதுமில்லை. நேரமிருந்தால் விளக்கமுடியுமா?

ஷோபனா அய்யங்கார்

அன்புள்ள ஷோபனா,

கங்காளம் என்பது ஒருவாத்தியம். உடுக்கைவிட பெரியதாக, முழவை விட சிறியதாக ஏறத்தாழ அதே வடிவில் இருக்கும். நடுசிறுத்திருக்கும். கையால் மீட்டப்படுவது வழக்கம். சிறிய கோலால் மீட்டப்படும் கங்காளம் கேரளத்து சக்தி ஆலயங்களில் உண்டு. 

கங்காளத்தை ஏந்திய சிவன் கங்காளர், கங்காளநாதர் எனப்படுவார். தென்னக ஆலயங்களில் கங்காளரின் அழகிய பெரிய சிலைகள் பல உள்ளன. கங்காளத்தை கீழ்க்கைகளில் ஏந்திய சிவன் மேலிரு கைகளிலும் மானும் மழுவும் வைத்திருப்பார் 

கங்காளத்தின் ஒலி சிம்மம் கர்ஜிப்பது போன்றது. சிவன் ஆட தேவி கங்காளம் இசைக்கிறார் என்பது சாசக்த மரபின் முக்கியமான படிமங்களில் ஒன்று [இதையே henpecked கணவர்களைச் சுட்ட மனைவியின் ‘தாளத்துக்கு துள்ளுகிற’ ஆள் என்ற வசையாக கேரள வாய்மொழி சொல்கிறது]

கங்காளி என்பது கங்காளம் ஏந்திய காளி. கங்காளனின் துணைவி. சிவனை ஆடவைக்கும் மூலாதார தாளம்


சங்கார காலமென அரிபிரமர் வெருவுற சகல லோகமும் நடுங்க
சந்திர சூரியர் ஒளித்து இந்திராதி அமரரும்ச ஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்தபோது அந்தகாரம் பிறண்டிட நெடும் 
ககன கூடமும் மேலை முகடு முடிய பசுங்க்கற்றை கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர மிருகமத யுகளசித்ரப் பயோதர கிரி
தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்திருத்தணி மகீதரன் இருங்
கங்கா தரன் கீதம் ஆகிய சுராலய கிருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே

அருணகிரிநாதரின் மயில் விருத்தம் சிவனை கங்காளர் என்கிறது. முந்தையவரியில்

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபிநய துல்ய சோம வதன
துங்க திரிசூலதரி கங்காளி சிவகாமசுந்தரி பயந்த நிரைசேர்
ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவுங் கொடுஞ் சிறகினால்
அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே 
                   அணைக்குங் கலப மயிலாம்
நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி  நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியாகுலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன் மாதவன் முராரி திருமால்
மதுகைடவாரி திருமருகன் முருகன் குமரன் வரம் உதவு வாகை மயிலே

என்கிறார் அருணகிரிநாதர்

சிவனுடன் காளி கொண்ட கொடுகொட்டி என்றும் அண்டப்பேரண்ட் நடனத்தை தாளத்துடன் சொல்லும் பாடல் இது. மாயூரநிருத்தம் [மயில்நடை] சந்தம் கொண்டது. கங்காளம் இந்தச் சந்தம்தான்.  

இதில் அண்ட பகிரண்டங்களை தன் முட்டைகள் [பேடை அண்டங்கள்] என அணைக்கும் கலாபமயில் என்று அன்னையை சொல்லும் வரி அற்புதம். எங்கோ அறிவியலும் வானியலும் அறியாத சிற்றூரில் வாழ்ந்த ஒரு மனம் மெய்ஞானம் கொண்டு எப்படி விரிந்திருகிறது!.  


ஜெ