நீலம் அடுக்கடுக்காய் மலர்ந்து உயரமாகிக்கொண்டு செல்லும் மலர் என்று முன்னமே அறிந்து இருந்தேன். அது இன்னும் இன்னும் அழகாக வாசம்கொண்ட இதழ் அடுக்குகளால் மலர்ந்துபோவதைக்கண்டு வண்டாகின்றேன்.
குழந்தைகளைக்கொஞ்சும்போது கண்ணே மணியே முத்தே பொன்னே பூவே என்று வார்த்தைகள் வந்துவிழும்போது நாக்கு மூக்கு என்று நாமீறி வந்து வார்த்தைகள் விழும்போது நகைக்சுவைாய் நாச்சுவையாய் இருக்கும். உண்மைகளை மறைக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை.
கண்ணால் உலகைக்கண்டு அனுபவித்து வாழ்கின்றேன் என்றுதான் நினைத்து இருந்தேன். அது இன்றோடு தீர்ந்தது. அதைத்தீர்த்தது நீலம் இருபத்தொன்பது.
கண்ணால் உலக்தை துளிதான் பருகுகின்றோம். அதிலும் துளிதான் புரிந்து பொருளாகி உணவாகி செரித்து சத்தாகின்றது. மூக்கு உலகத்தை அனுபவிப்பதுபோல, செவி உலகத்தை அனுபவிப்பதுபோல கண் அனுபவிக்கவில்லை என்பது வாசமும், இசையும் நிறைந்து நிற்கும் நீலம்-29 உணர்த்துகின்றது. இந்த உலகம் வாசத்தால் ஆனது. இசையால் ஆனது. தவம்கூடும்போது வாசமும் இசையும் கால்கை முளைத்து உருவெடுத்து வந்து தவத்தில் நிற்போரை கூடிக்களிக்கின்றது அல்லது கொல்கின்றது.
மேல்வானில் பழமாகிய பழையசூரியன் வானக்கிண்ணத்தில் மதுவாகும் நேரத்தில் தொடங்கி கீழ்வானில் பூவாகிய புதுசூரியன் வெளிச்சம் வடிக்கும் காலைவரை நீண்டும் செல்லும் காட்சியும் கனவும் ஓசையும் வாசமும் கணந்த நீலம் இன்று சொக்கவைக்கின்றது.
புலன்கள் ஐந்தில் கண்ணைப்பின்னுக்குதள்ளி, நாசியும் செவியும் முன்னேறி சென்று அனுபவகீதம் இசைத்து வாசவிருந்து வைக்கும் வண்ண வண்ணக்காட்சி. நீலம்-29யை கண்ணால் வாசித்தாலும் நாசியும் செவியும் மட்டும் எழுந்து களிக்கொள்ளும் தருணம். இந்த மண் இத்தனை வண்ணத்தால் வாசத்தால் ஆனதா? ஒவ்வொரு பூவும் தன் வண்ணத்தை தியாகம் செய்து வாசத்தால் மலர்ந்து நிற்கும் தருணம் இன்று.
முல்லை- பாலூறும் பைதல் மணம், கருவறை மணம்.
அந்திமந்தாரை- புளிப்பூறிய கள்மணம், புதுப்பால் மணம்.
அல்லி- சங்குக்குள் எஞ்சிய உயிர்மணம், சுண்ணம் சூடாகும் சிறுமணம்
மணிசிகை, பூவரசு- பச்சைத்தழை கசங்கும் மணம். புத்தரக்கு வழியும் மணம்
தாழம்பூ- முட்டை விரியும் முதல் மணம்
பிரம்மகமலம்- பச்சை உதிர மணம். இளநீர் வெண்மையின் குளிர்மணம்
நிசாகந்தி- புதுச்சீழ் மணம். குங்கிலியப் புகைமணம்
செண்பக மணம். தசைதிரண்ட இளங்காளையின் விந்தெழும் மணம், எரியும் கந்தக மணம்.
சம்பங்கி மணம்- இலைகள் தோறும் ஒளிர்ந்து சொட்டியது சம்பங்கியின் மணம்
மனோரஞ்சிதம்.- எண்ணுவதெல்லாம் தன் மணமாக்கிய பொன்மலர்.
//முல்லையாகியது. அந்திமந்தாரையாகியது. அல்லியும் மணிசிகையும் ஆயிற்று. தாழையும் பிரம்மத்தாமரையும்தானே ஆயிற்று. நிசாகந்தியாயிற்று. செண்பகமும் சம்பங்கியும் ஆயிற்று. மனமெனும் மலரின் மணமாயிற்று. மதநீர்மணம். மத்தெழுந்த களிற்றின் சென்னி வழியும் மணம். புதுத்தேனடையின் மணம். நிலவு மட்டுமே அறிந்த மணம்.நாணம் துறந்த மணம். தெய்வங்களும் வெட்கி புன்னகைக்க வைக்கும் மணம்//
மணம் மணம் மணம் என்று எங்கும் மணமாகி உலகம் நிற்க அழகில் பித்தேறி ஆடத்தோன்றும்போது, நாணிதலைகுனிந்து நிலம் நோக்கி தன் குவி விரித்த மனோரஞ்சிதம் மலர்ப்பார்க்கும்போது நாணம்வந்து திங்கின்றது ராதையாகி நிற்கும் என்னை. காரணம். //என் நெற்றிமலர் எடுத்து நிலத்திட்டான். “அய்யோ அது வைரம்” என்றேன். “உன் நுதலொளிக்கு அது சிறுகல்லே” என்றான். குழல்முகில் தழுவிய பிறைநிலாவென்று இதழ்கொண்டுதொட்டான். முத்தாரம் மணியாரம் முலையழுந்தும் செம்பதக்கம் ஒவ்வொன்றாய் அகற்றி இதழொற்றினான்.கைவளை சிணுங்கக் கழற்றினான். மேகலை மட்டும் அறிந்த மலர்முகர்ந்தான்//-நீலம்-26.
கண்ணன் அன்று என் காணமலர் முகர்ந்தான், காணும் மலரெல்லாம் தான்கொண்ட வாசம் உருகொண்டு கால்கைகொண்டு உயிர்கொண்டு வருமென்று அன்று அறிந்தேன்இல்லை. என்உயிர்கொண்டு என்னையே கொண்டு போகும் என்று உணர்ந்தேன் இல்லை. காண மலர் முகந்து கண்ணன் என் கன்னிக்கழித்தப்பின்பு கற்பென்றும், காதல் என்றும், காமம் என்றும், முறைஎன்றும் நெறியென்றும், நூலென்றும், நீதியென்றும், ஒழுக்கமென்றும் பழக்கமென்றும், பெண்ணென்றும் பித்தியென்னும் நான் நின்றால் யாரை நான் ஏமாற்றுகின்றேன். என்னையா? உலகையா? அந்த கண்ணனையா?
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் என்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே-அபிராமிப்பட்டர்.
இத்தனைக்கும் பின்பும் தனது பெரும் காமத்தை யாரிடமும் பகராமல் தனது துன்பத்தையே ஒரு தோழியாக்கி பேசிக்கொண்டு இருக்கும் ராதையை நினைக்கும்போது நெஞ்சம் வெடிக்கின்றது. தன்னை தனக்குள்ளேயே சுருட்டி்க்கொண்டு எரியும் தவம் பெரியது.
கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்-திருக்குறள்.
//கால்மாற்றும் கரும்பசுவின் கனத்த குளம்போசை. கன்று கழுவில் முட்டும் ஓசை. வால்சுழற்றி சட்டத்தில் அடிக்கும்கன்னிப்பசுவின் ஓசை. சிற்றோடையென சிறுநீர் விழும் ஓசை. கொசுக்கள் ரீங்கரித்து சுற்றிவரும் ஓசை.அடுமனைக்குள் பூனை காலடி வைக்கும் ஓசை. அப்பால் மரமல்லி உதிர்க்கும் மலர்களின் ஓசை. அதற்கப்பால்மலைமுடிமேல் முகில்குவைகள் வந்தமரும் ஓசை
ஆநிரைகள் அவர்களை அறிந்து மூச்சிழுத்தனஅப்பால் ஒரு இளம்பறவை அன்னையிடம் ஏது என்றது. அன்னைசிறகணைத்து அது என்றது//
மலர்களின் நடனம் ஒருபுறம். இசையின் கட்சேரி ஒருபுறம். ராதை ஆடுகின்றாள் கண்ணனுக்காக கண்ணனாக.
கடவுள் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை. மண்ணில் எல்லாமும் ராதைதான். ராதைகள் கண்ணுக்கு தெரியும்போது கண்ணன்வேறு தெரியவேண்டுமா? கடவுள் தெரியவில்லை என்பது சரிதானா? உடம்பு தெரிகின்றது. கிழித்துப்பார்க்காமல் இரத்தம் சொட்டாமல் இதயம் எங்காவது தெரிவது உண்டா? ராதை சொல்லவில்லை, வாழ்ந்து காட்டுகின்றாள்.
நன்றி ஜெ.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.