Friday, September 26, 2014

வைரமலர்
இனிய ஜெயம்,
இன்றைய அத்யாயம்  மீண்டும்  என்னை உங்கள் படைப்புகளின்  அடிப்படை  உணர்சிகள் அவை கொள்ளும் வினாக்கள் நோக்கி  அழைத்துச் செல்கிறது.

தேவகி கண்ணனைக்  கண்டு கொள்கிறாள். பின்    கண்ணனாக மட்டுமிருந்த  அவளது  கைப்பாவை, ஒரு போதும் மீளாத  அவளது ஏழு  மதலைகளின்  துயரமாகிக் கனக்கிறது.
கண்ணனால் கூட ஈடு செய்ய இயலா தாயின் துயரம்.


தேவகிக்காவது  கண்ணன் ஒருவன் இருக்கிறான். ஆனால் என் பீஷ்மருக்கு?
கங்கைக்  கரையில்  தென்றலென  சுழலும்  அவரது சகோதரர்களின் மூச்சுச்  காற்றை  நுரைஈரலில் தேக்கியபடி  அவர் காக்கும் தனிமை. சுமக்கும் துயரம். தேவகியின் துயரைக் காட்டிலும் எடை கூடியது.


கண்ணன்  கர்ஜிக்கிறான் '' மண்ணில் கருணை கொண்ட அறமென்று எதுவுமில்லை''.

'' “குழவியர் குருதியில் கைதொட்ட எவரும் கழுவேறாது இங்கு எஞ்சலாகாது. இதுவே நீதியென இப்புவி அறியட்டும்!” ''

வெண் முரசு மட்டுமல்ல, உங்கள்  அனைத்து நாவல்களும்  எதோ ஒரு  துரியப் புள்ளியில் ஒன்றுதான்.


இந்த  வாசகத்தை  வாசிக்கும்போது  என் அடி மனதிலிருந்து  மின்னலென  ஒரு வாசகம்  எழுந்து வந்தது.


புகாரின் அஞ்சிப் பின்னடைந்தார். அவனது கண்களுக்குள் நீலச் சுடர் ஒளிர்ந்தது.


''தண்டம்தான்  எனது நீதி எனில். இந்த ஒவ்வொரு  குழந்தையின் பொருட்டும் இவ்வுலகை மும்முறை நான் அழிப்பேன் ''


என் ஏசு சொல்கிறான், கருணையும் அறமும் வேறு வேறல்ல.

எப்போதும் நான் உங்களிடம் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கையில்  அன் நிலைப்பாட்டின் மறுபக்கத்தை தர்க்கப்பூர்வமாக முன் வைத்து  என் அகத்தை  விசாலப் படுத்துவது உங்களது பாணி.

இனிய ஜெயம்  இவ்விரண்டு  சீற்றத்தும் இடையே நிகழ்ந்தது தான்  அறம்  எனும் விழுமியத்தின் பண்பாட்டு வளர்ச்சி இல்லையா?


மற்றொரு நாளின் இனிய துவக்கம். இன்றைய வாசிப்பு.

கடலூர் சீனு


அன்புள்ள சீனு,

கிருஷ்ணன், ஏசு என்னும் இரு முகங்களும் என்னைப்பொறுத்தவரை ஒன்றை ஒன்று நிரப்புபவை.

கிருஷ்ணன் நீதியின் வாளேந்தியவன். ஆனால் எல்லையற்ற கருணை கொண்டவனாகவும் அவனை அறியும் பல இடங்கள் உண்டு. ஜெயதேவரும் சைதன்யரும் கண்ட கிருஷ்ணன் ஒரு நீலமலர். யுகமுடிவில் கல்கியாக திரும்பிவரும் கிருஷ்ணர் ஒரு கைக்குழந்தை. 

ஏசு முடிவற்ற மன்னிப்பின் திருவுரு. ஆனால் ‘சமாதானத்தையல்ல பட்டாக்கத்தியையே கொண்டுவந்தேன்’ என்று அவரது கூற்று ஒன்று உள்ளது. செம்பழுப்பு ஆடையும் வைரமுடியும் மன்னிப்பற்ற வாளுமாகவே அவர் மீண்டுவருவார் என்கிறார்கள்

ஒரே  உண்மையின் இரு முகங்கள்.

ஜெ