Saturday, September 27, 2014

குலதெய்வம்
அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
இறைவன் மூத்தவனா? பக்தன் மூத்தவனா? என்ற கேள்வியை எழுப்பியது நீலம்.
பக்தன் மூத்தவன் இறைவன் இளையவன் ஆனால் இறைவன் முடியாதவன் பக்தன் முடிந்தாலும் முடிவில்லாதவன் என்றது நீலம்.
ராதை கன்னியானபின்பு பிறந்தவன் கண்ணன். நெடியோன் கண்ணனுக்கு அவன் கிழவனான பின்பும் வேண்டும் பொழுதெல்லாம் குழல்கொடுக்கும் குழந்தையும் ராதைதான்.  
கனியும், பூவும் ஒன்றுதான் என்பதுபோல் கன்னியும், குழந்தையும் ராதைதான் என்று காட்டி நீலம் தன் படைப்பால் அழகுக்கொள்கின்றது அல்லது பிரபஞ்சசொருபமாக காட்சித்தருகின்றது.
கண்ணனின் குழல் ஓசைக்காக ஏங்கி பர்சானபுரி பித்தியாகி, கண்ணனின் குழல்லோசை ராதை ராதை ராதை என்று ஏங்கும்போதெல்லாம் நீலக்கடம்பின் பின்மறைந்து இதழ்பொத்தி நகைப்பவளும் ராதைதான். காட்சியே ஒரு நாவலே கவிதையாக மாறும் படிமம், ஒரு நூலே ஓவியமாகும் சித்து.
ஆடை நெகிழ அனைத்தும் இழந்து ஓடுபளும் ராதைதான், பாவாடைப்பூவாய் எங்கும் பூத்திருப்பவளும் ராதைதான்.

//வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யா உனக்கு
மகனலனோ நீயெனக்கு வாய்ந்ததந்தை யலையோ
கோழையுலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருளொளியைக் கொடுத்தருள் இப்பொழுதே// என்கின்றார் வள்ளலார்.
காலம் காலமாய் வாழையடி வாழையாய் பக்தன் பிறந்துக்கொண்டே இருக்கிறான்பக்தனால் இறைவனும்இருந்துக்கொண்டே இருக்கிறான். ராதைக்காக கண்ணனும் கண்ணனுக்கா ராதையும் மண்ணில் மலராகவும், இசையாகவும் நிறைந்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
//வெண்மணல் விரிந்த முற்றமெங்கும் வண்ண மலர்களென ராதை மலர்ந்துகொண்டே இருப்பதைக்கண்டாள்அவள் அமர்ந்து படைத்த மலரெல்லாம் அவ்வண்ண இதழ்களுடன் கண்களிலும் காற்றிலும்எஞ்சியிருந்தன//
//தனிமை சூழ்ந்ததும் குழலை இதழ்சேர்த்தார் கிருஷ்ணர்விரல்கள் துளைகளில் ஓடினஇதழில் எழுந்தகாற்று இசையாகாது வழிந்தோடியதுசிரிப்பை அடக்கி சிறுகைகளால் இதழ்பொத்தி அமர்ந்திருந்தாள்ராதை.
குழல் மொழி கொண்டதுகுயில்நாதம் ஒன்று எழுந்தது. ‘ராதே’ என அது அழைத்ததுகாற்றில் கைநீட்டிப்பரிதவித்து ‘ராதேராதேராதே!’ என மீளமீளக் கூவியதுகண்டடைந்து குதூகலித்து. ‘ராதைராதைராதை!’என கொஞ்சியதுகல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள்//

பக்தனும் பகவானும் ஆடுவது ஊஞ்சல் ஆட்டம். அது  போவதும் இல்லை வருவதும் இல்லை ஆனால் ஓய்வதும் இல்லை. கண்ணனும் ராதையும்  மண்ணில் பிறந்துக்கொண்டே இருப்பார்கள் அந்த பொன்னூஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும்.
அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்கின்றார் தாயுமானவர்சுவாமிகள். இங்கு ராதையை தெய்வமாக்கிவிட்டு கண்ணன் பக்தனாகி அன்பர் பணிசெய்யக் கிளம்பிவிட்டான். என்ன என்ன செய்வான் எப்படி செய்வான், எப்படி இருப்பான் எங்குபோவன் என்பதை சுட்டும் இடத்தில் நீலம் மலருக்குள் ஒரு மலர்போல் மகரந்தமாகி மணக்கிறது.
//அவரது கரிய கைபற்றி கண்மூடி தியானித்து மருத்துவன் சொன்னான். “பாண்டவர் முடிமீட்ட கைகள்.பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள்பாரதப்போர் முடித்த கண்கள்அரசர்குழாம் பணியும் அடிகள்ஆற்றுவதுஆற்றி அமைந்த நெஞ்சம்.”
செவ்வரி ஓடிய கண்களால் நோக்கி “திருமகளும் நிலமகளும் சேர்ந்த மணிமார்புதிசையெல்லாம்வணங்கும் திருநாமம்யுகமெனும் பசுக்களை வளைகோல் கொண்டு வழிநடத்தும் ஆயன்” என்றான்.பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “நாண் தளர்ந்து மூங்கிலானது வில்மரமறிந்து சிறகமைந்தது புள்.வினைமுடித்து மீள்கிறது அறவாழிநுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி” என்றான்//
வாழ்வும் தத்துவமும் ஞானமும், பழங்காலமும் நிகழ்காலமும் வருங்காலமும் நிறைந்து மலர்ந்திருக்கிறது நீலம். யார் யார் எந்த காலத்தில் நிற்கின்றார்களோ அந்த அந்த இடத்தில் உள்ளத்தேனை உண்டு சுவைக்கின்றார்கள்.
தேன் நேற்றும் இருந்தது இன்றும் இருக்கிறது நாளையும் இருக்கும்.
வண்டும் நேற்றும் இருந்தது இன்றும் இருக்கிறது நாளையும் இருக்கும்
தேனும் வண்டுபோல் பகவானும் பக்தனும், நீலமும் வாசகனும் தேனும் வண்டும்போல்.
நீலம் நேற்று எங்கோ இருந்தது இன்று இங்கு இருக்கிறது நாளை எங்கெங்கோ இருக்கும்.
நீலம் என்னும் அமுதக்கடலில் இனி வருங்காலம் குதிக்கும், குடிக்கும், நீலத்தை துளித்துளியாய் குடித்து கடலலேன் என்னும் காலத்தில் நான் இருந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு. பரிஷித்காணாத ஒரு பக்திக்கடல் நான் கண்டது.
மண்ணில் நீலமான நதி நீரால் ஆனது மட்டும் இல்லை குருதியாலும் ஆனது. மண்ணில் உயர்ந்து நிற்பது கல்லால் ஆனது மட்டும் இல்லை சொல்லாலும் ஆனது.
முன்னது உறவு. பின்னது பெயர்.
//“ராதையெனப் பெயரிட்டது தாங்கள் அல்லவா?” என்றாள் கீர்த்திதை. “ஆம்என் இல்லத்தில் சுடராக என்தமக்கை என்றுமிருக்க விழைந்தேன்உனக்கு என் அன்னைபெயரிட்டேன்உன் வயிற்றில் அவள் வந்துபிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன்” என்றாள். “கையில் எடுத்து இவள் கண்களைக் கண்டபோதேநினைத்தேன்இவள் அவளேஎன் அரசிஎன் குலத்தெழுந்த தெய்வம்.”//
நீலம் தந்த ஜெ வாழ்க! நீலம் வாழ்க! நீலத்தில் மலர்ந்த ராதைபாதம் வாழ்க! ராதையின் பாதம் கும்பிடும் கண்ணன் பாதம் வாழ்க! கண்ணன் மகள் வள்ளிப்பாதம் வாழ்க! வள்ளிப்பாதம் கும்பிடும் முருகன் பாதம் வாழ்க வாழ்க! அவ்வழி சென்ற என் முன்னோர்கன் பாதம்வாழ்க! அவகள் சென்ற நல்லவழி செல்ல வைக்கும்  என் குலதெய்வம் வாழ்க!
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.