Friday, September 19, 2014

இருளின் நிறைவு




ஜெ,

இந்த ஒருநாளின் வரிகள் அற்புதமாக நீலம் நாவலைத் தொகுத்துக்காட்டிவிட்டன. காம்யகங்கள் வழியாகப் போகக்கூடிய யாத்திரைக்கும் கண்ணனைச் சென்று அடையமுடியும். விரக்தியும் அங்கேதான் கொண்டுசெல்லும். கம்சன் முதல் வழியைத் தேர்ந்தெடுத்தான். ராதை இரண்டாவது வழியை என்று காட்டியது இந்த அத்தியாயம்

காலைமுதலே கம்சனுக்குத் தெரிந்துவிட்டது அதுதான் அவனுடைய கடைசிநாள் முக்திநாள் என்று. அவன் கண்ணனைக் கொல்ல ஆசைப்படுகிறானா கண்ணாரக் காண ஆசைப்படுகிறானா என்றே தெரியவில்லை. சாயங்காலம் மேடையிலே அவனைப் பார்க்கிறேன் என்றுதான் சொல்கிறான். அவனுடைய தேவியரோ கண்ணன் நினைப்பாகவே இருக்கிறார்கள்

கம்சனின் மனம் தேடுவது எதை?

மிச்சமில்லை மிச்சமில்லை என்று தொட்டு எரித்துச் சென்றபின்னும் எச்சமென்றே எஞ்சுகிறது என் அகமெழுந்தவை எல்லாம்

கம்சன் கண்ணனைப் பார்க்கும்போது பாதாதிகேசம் காட்சி அளிக்கிறது.

நீலம் எழுந்து நடந்ததுபோல் பாதங்கள். செண்பகச் செம்மை மண் தொட நீலமென்மை விண்நோக்கி மலர தொட்டுத் தொட்டு அருள்செய்து இருள் நீக்கி நடந்து வரும் நீலக்கதிர் குழவிகள்

 என்று தொடங்கி தலையில்சூடிய சகஸ்ரபத்ம மலராகிய பாரிஜாதம் வரை பார்க்கிறான்

விழிதிறந்த பீலி. விரிந்தெழுந்த பாரிஜாதம்

ஆனால் கண் பார்த்த பிறகும் கருத்து பார்க்கவில்லை. அதற்கான ஞானத் தருணம் வாய்க்கவில்லை.

.அள்ளி அள்ளி நான் விட்ட ஆழ்கலம் நிறையவில்லை. அங்கே எழுந்த இருளின் விடாய் தீரவில்லை

அதன்பின் அவனே முன்னால் வந்து நின்றான். நேருக்கு நேராக பார்க்கும் பார்வை. தெய்வ தரிசனம்

இன்னும் முலைமறக்காத இதழன். விழி ஒளியன். அருள் மலர்ந்த கையன். அஞ்சலென்ற அடியன். ஆயிரம் பல்லாயிரம் கைகள் அகத்தே குவிவதைக் கண்டேன்

 இங்கே கேசாதிபாத தரிசனம். பாதத்தைத் தரிசித்ததுமே முக்தி. உள்ளே இருந்த இருட்டெல்லாம் கண்ணீராக மாறி தீபோல வழிந்துசெல்கிறது

ஐந்து புலன்களும் அவன் முன் அழிகின்றன. காமகுரோதமோகம் என மூன்று மலங்கள் அழிகின்றன. எட்டு தம்பிகள் இறக் இங்கேகிறார்கள்.

 என் குருதியில் குடிகொள்ளும் முளைக்காத விதையா நீ? கண்ணீரில் நோன்புகொண்டு என் குலமகள்கள் காத்திருந்த குழவிமுகம் நீதானா?

என்ற தரிசனம்தான் அவனுக்கு முக்தி. ஆயிரம் ஜென்மத்து பிள்ளைக்கலி தீர்ந்தது. கண்ணன் அவனுக்கு மருமகனாக ஆனான்.

அங்கிருந்தேன் பின் இங்கிருந்து அவனைக் கண்டேன்

என்ற இடத்தில் பரிபூர்ணம்

இங்கே மானசீகமாக நீலம் நிறைவுபெற்றுவிட்டதாக ஒரு உணர்ச்சி.

சுவாமி