Tuesday, September 23, 2014

இரு பாடுபொருட்கள்





 ஜெ,

இன்றைய நீலம் 35 உணர்வுகளின் இன்னொரு உச்சம். ஊடலின் அந்த உச்சத்தில் இருந்து வேண்டுமென்றே கீழே கொண்டுவந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தூக்குகிறீர்கள். காலையில் வந்து எழுப்புகிறது அந்த நீலப்பறவை. ராதையும் கிருஷ்ணனுமாக ஆன பறவை [கீழே பொன்னிறம், மேலே நீலம்]  அதுவரை அவள் நீலநிறமான யமுனையில் ஆடையில்லாமல் ஆடிக்கொண்டிருந்த கனவில் இருந்தாள் என்ற இடம் மிகச்சரியான தொடக்கம்.

இளந்ததளிர்மேல் விழுந்த இடிமழை இந்நாள். நிறைந்த சிமிழ்மீது பொழியும் பேரருவி போல மனசு நிறைந்து வழியும் நாள்.

அப்படியே பறவைகள் வழியாக செல்கிறது அநநாள். இனி அவளுக்கு எல்லைதாண்டிபோவது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை

நீ சொல்லும்போது மட்டும் என் பெயருக்கு சிறகு முளைப்பதேன்? நீ நோக்கும் இடத்தில் என் தோல்சிலிர்ப்பதேன்? உன் விழி தொட்ட இடத்தை என் விரல் சென்று தொடும் விந்தைதான் என்ன? உடலே ஒரு விழியாக உனைப்பார்க்கிறேன் 

-என்னும் வரிகலில் உள்ள பெண்ணைப்பற்றிய observation அற்புதம். அதிலும் விழிதொடும் இடங்களில் அவள் கை சென்று தொடுவதை எத்தனை முறை பார்த்திருப்போம் இல்லையா?

வெள்ளை யானையின் துதிக்கை அவன் இடையை வளைக்கும் இடம். நுனிக்காலில் நின்று அவள் படரும் இடம். நீலத்தோளில் அமர்ந்து அங்கே சிவந்த சிறகுத்தடம் விட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி. அசையாத நிழலாக அதைக்கண்டு திகைப்பது. அசையும் நிழலைக் கண்டு அதில் அமர்வது. குங்குமம் அணிந்தது குங்குமம். அந்த புறாக்களை வெண்புறா என்று சொல்லியிருக்கலாமே ஏன் மணிப்புறா? அதன்பிறகுதான் மணிப்புறாவின் கழுத்தின் நிறத்தை நினைத்துக்கொண்டேன். அழகு.

கவனமில்லாமல் போட்டுச்செல்லும் [செல்வதுபோன்ற] வரிகளில் தான் உச்சமே நிகழ்ந்திருக்கிறது.  முலைதவழ்ந்த முத்தாரம் முத்தமிட்டு நீக்கினான்.மேகலை அகற்றிய மெல்விரல் தீண்டி பொன்புனல் சுனையொன்று புதுச்சுழி கண்டது. 

திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருக்கையிலே ஒன்று தோன்றியது. இரண்டு விஷயங்களை எழுதுவதுதான் இலக்கியத்துக்கே சவால். ஒன்று சாவு இன்னொன்று காமம். இரண்டுமே யதார்த்தங்கள். அதை கனவாக ஆக்குவதற்குத்தான் இலக்கியம். இரண்டுக்கும் பெரிய அர்த்தமெல்லாம் இல்லை. எல்லா அர்த்தங்களுக்கும் அதை குறியீடாக ஆக்குவதற்குத்தான் காமம். காமம் ஒருவகையான சாவுதான். கிளாஸிக்குகள் இந்த இரண்டு விஷயங்களையும்தான் பேசுகின்றன. காமம் வீரம். வேறு ஒன்றுமே முக்கியம் கிடையாது

சண்முகம்


அன்புள்ள சண்முகம்

உங்கள் பூனை வழக்கம்போல கடைசியில் நாலுகாலில் ஓஷோமேல் போய் விழுந்துவிட்டது ))). வாழ்த்துக்கள்

ஜெ