Tuesday, September 23, 2014

அம்புபட்ட பறவை





ஜெ சார்

காமத்தின் முகங்களை மாறிமாறிச் சொல்லிச்செல்கிறது நீலம். ஊடுவதும் கூடுவதும் இரண்டுமே அதன் இரண்டு பாவனைகள் என்பதை பல வரிகளில் சொல்லிவிட்டீர்கள். திரும்பத்திரும்ப ‘இது என்ன லீலை’ என்ற எண்ணம்தான் மனசுக்குள் வந்தபடியே இருந்தது. கண்ணனைக் காண அவ்வளவு ஏங்கியவள், கண்டதும் ஏன் சண்டைபோடுகிறாள்? அதுதானே மனுஷமனசின் இயல்பு என்று உடனே நினைத்தேன்


ஆனால் இன்றைய அத்தியாயம் மிக நுணுக்கமான ஒரு மர்மத்தைத் தொட்டுக்கொண்டு போனது. ராதையின் அந்தக் கோபம் உண்மையானது. அது காமத்தின் பாவனை கிடையாது. எனக்கு என்ன தோன்றியது என்றால் அது அகங்காரத்தின் வெளிப்பாடு என்று. அதாவது கடைசி அகங்காரம் விலகுவது. சுடர் அணையும்போது எழுந்து மேலே நிற்குமே அதைமாதிரி

பெண்ணுக்கு அவளுடைய அழகின் பரிசுத்தி ஒரு virtue. அது அவளுக்கும் தெரியும். அவள் அந்நிலையில் காமத்தைவிட மேலானவள். ஒரு பூ கரு அடைந்து கனியாகி மாறுவதற்குத்தான் அத்தனை அழகைக் கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது தானே? 

காமத்துக்கு ஆட்படுகிற அந்த சமயத்திலே அவள் ஒரு வீழ்ச்சியையும் அறிகிறாள். The great fall என்றே சொல்லலாம். பெண் வாழ்க்கையில் அதுதான் பெரிய வீழ்ச்சி. அதன்பிறகு அவளுக்கு அந்த தெய்வீகம் இல்லை. 

அதனால்தான் தன்னை ‘அனுபவிக்க’ வருபவம் மேல் அவளுக்கு கடுமையான கோபம் வருகிறது. அது தன் மேலே உள்ள கோபம். தன்னுடைய காமத்தை பயப்படுகிறாள். அதன்பிறகு அந்த பயத்தை அவன்மேல் கோபமாக ஆக்கிக்கொள்கிறாள்

கற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.

என்று ராதை உணர்கிறாள். அந்த வெளிப்படையான காமம்தான் அவளையே கூச்சம் அடையவைக்கிறது. ஒரு divine entity அவள். ஒருவகையிலே அவள் ஒரு deity . காமம் அவளை வெறும் சரீரமாக ஆக்கிவிடுகிறது ஆகவேதான் கோபம்

எங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை.

ரத்தம் சிந்த விழும் அந்த பறவை என்ன? அந்த அம்பு என்ன?


சாமிநாதன்