Sunday, September 14, 2014

எந்தையும் தாயும்

காடும் காடுசார்ந்த இடமும் முல்லை. காதலும் காதல் நிமித்தமும். பெரும்பொழுது கார்காலம். சிறுபொது மாலை. தெய்வம் மாயோன்.

காதலை அனுபவித்தாலும், படித்தாலும், எழுதினாலும், கேட்டாலும் திகட்டுவதே இல்லை. காரணம் காதலுடன் கண்ணன் இணைந்து இருப்பதாலா?

மண்ணே ஒரு பெண்ணாகி அவளே கண்ணன்மீது காதல் கொண்டு காதல்நோயில் வாடி நம்மையும் வாட்டும் அழகிய கவிதை நீலம்-26.

காலம் காலமாய் காக்கும் கடவுளுக்கு இருதாரம் நிலமகள் திருமகள் என்று கேள்விப்பட்டு கண்டு தொழுது வழிப்பட்டு வந்திருந்தாலும் இன்று காலுக்கு கீழிருக்கும் மண் அன்னையாகி அழகு கண்ணன்மீது காதல் கொள்ளும் காட்சியை ஜெவின் வரிகளில் படிக்கும்போது மண்ணில் பிறந்ததெல்லாம் ஏன் இத்தனை பெரும் காதலில் திளைக்கின்றன, தவிக்கின்றன என்பதை அறிய முடிகின்றது.

தலைவன் தலைவிக்கு இடையில் காற்றுகூட தடை, மலரிதழ்கூட சுவர், அணிகள்கள்கூட முட்கள் என்பதை அறிந்து இருந்தும் இன்று நீலத்தின்தலைவியின் காதல் விரகத்தில் தோயும்போது மண்ணாய், மண்ணென்னும் பெண்ணாய் ஏன் பிறக்கவில்லை என்று தோன்றுகின்றது. பெண்ணின் ஒவ்வொரு அங்கமும் பூதான் என்றாலும், பூவையே அங்கங்களாகக்கொண்ட மண்மகளின் அங்கத்தை கற்பனையில் கொண்டுவந்து நிறுத்தும் நீலம் நெஞ்சை கிழித்து வையம் முழுவதும் பரப்பி வைத்து கைக்கொட்டிக்குதிகளிக்கின்றது.
//கண்ணனை அணிந்தன கானகத்துச் செடிகள்வெண்முறுவல் பூத்தது முல்லைகண்சிவந்தது அரளி.செம்முத்துகொண்டது தெச்சிபால்துளித்தது தும்பைபொன்கொண்டது கொன்றைபூத்து பட்டணிந்தது வேங்கை..நாணிக் கண்புதைத்தது செண்பகம்நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றைஅஞ்சி விழிதூக்கியது அனிச்சம்.குறுநகை எழுந்தது பாதிரிவழியெங்கும் விழிகொண்டது ஆவாரம்நானும் அவனே என்றது குவளைநானுமல்லவாஎன்றது நீலத்தாமரைகானகனே உனக்காக முகம் எங்கும் மலர்பூத்தது மதகளிற்றுக்கூட்டம்.
வந்தது வனவசந்தம்விழிபூத்து நின்றது விண்மீன்வெளிகீழே மலர் பூத்து கனத்தன மரக்குவைகள்இரவிலும்உறங்காது ஏங்கும் கருங்குயில்எழுநிலவு கண்டு கண்மலர்ந்த கானமயில்நீரோடைகளில் வழிகிறது நிலவு.சுனைகளில் சுழிக்கிறது அதன் ஒளிப்பொழிவுமுத்தமிடக் குவிந்த இதழே உடலானவன் நீமுத்தத்தின் களிவெறியேஒளியென்றானவன்//

என்னடா மானிடக்காதல் வெறும் வெங்காயம். துளியின் துளியில் அதன் துகளை நக்கி பெரிதென்று பீற்றிக்கொள்ளும் புல்வாழ்வு. பெரிதின் பெரிதாகாமல் சிறிதை எவர் பற்றினும் சிறிதும் சிறிதாகி இல்லாமல் ஆகும் என்பதை சொல்கின்றது. மண்மகள் கண்ணன்மீது கொள்ளும் காதல்.  

முல்லைத்திணையின் சிறுபொழுது மாலைநேரம். //அந்தி எழுகிறதுகுருதி தோய்ந்த வாளை மெல்ல மண்மீதுதாழ்த்துகிறது வானம்.// இது தெரிந்தே செதுக்கி எடுத்து வைத்த வைரமா? அல்லது தெரித்துவிழுந்த சொல் வைரக்காலாகி ஒளிசிந்தி தித்திக்கும் அமுதா? அறியேன். ஆனால் என்ன ஒரு அற்புதம். காதல் கொண்ட பெண்ணுக்கு மலர் குயில் கடல் தென்றல் எல்லாம் கொலைவாள்தான் அதுவும் அந்தியும்கூடும்போது காதல் நோயில் துடிப்பதைவிட சாவது இன்பம். மண்பெண்மீது அந்தி கூடும் நேரத்தில் வானமே குருதிதோய்ந்த வாளை வைப்பது அதுவும் மெல்ல வைப்பது எத்தனை கொடுமை. கொல்லாமல் கொல்லும், சாகவிடாமல் சாகடிக்கும் ஒரு காலத்தால் படுத்த  ஆனால் புதிய காதல் கவிதைதேன்.

குயிலொன்றுமொழிக் குயினின்று அலையக்
      கொலையின்ப மலர்க் கணையாலே
குளிருந்தவளக் குலசந்த்ர வொளிக்
      கொடிகொங்கையின் முத்தனலாலே

புயல்வந்தெறியக் கடனின்று அலறப்
      பொருமங்கையர் உக்கலராலே
புயமொன்ற மிகத்தளர்கின்ற தனிப்
      புயம்வந்தணையக் கிடையாதோ
சயிலங்குலையத் தடமுந்தகரச்
      சமனின்று அலையப் பொரும்வீரா
தருமங்கை வனக்குறமங்கையர் மெய்த்
      தனமொன்று மணித்திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
      பணியுந் தணிகைப் பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன்று அருளிற்
      பகர்செங்கழநிப் பெருமாளே-திருப்புகழ்.


காதலருக்கு இரவுபோல் இன்பமும் துன்பமும் செய்வது யாது. இரவுதான் அமுதம். இரவுதான் விஷம். அந்த துளி அமுதத்திற்காக கடலளவு விஷத்தையும் குடிக்க காத்திருக்கும் ஜீவனுக்கு பகல் வெறுமை திரண்டது மட்டும்தான். எத்தனைபெரிய கவிமுரண் இந்த சொல்லாடல். எல்லாம் விளங்கும் பகல் வெறுமையாய் ஆவது எத்தனை ஞானத்தின் திறவுகோல்.// இரவென்று ஒன்று எழுவதற்காக மட்டுமே உருவானது வெறுமை திரண்டபகல்//

பிறந்ததில் இருந்து மிதித்து நடந்து வெறும் மண்ணென்று நினைத்த மண்மங்கை இன்று உயிர்பெற்று எழுகின்றாள் காரணம் //என் வெறும்மேனிமீது புல்வெளிமீது தென்றல்போல் அவன் விழியோடியதுபின்பெருங்கடல்மீது புயல்போல அவன் மூச்சோடியது//

எந்ததையும் தாயும் மகிழ்ந்து குலவி இருந்ததும் இந்நாடே. தாய்மண்ணே வணக்கம்.

நன்றி


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.