Monday, September 15, 2014

பூவின் நடனம்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

நீலம்-26 முல்லைத்திணையால் பெரும்காதலால், பெருகும்காதலால் என்னை மூழ்க அழுத்தி முழுதும் அழுத்தி மூச்சுத்திணறத்திணற அடித்து துவைத்து கிழித்து உப்புபோட்டது என்றால் நீலம்-27 பாலைத்திணையில் காயவைத்து , நெய்தல்திணையில் ஊறவைக்கின்றது. நீலம் என்னும் பெரும் உப்புக்கடலில் ஊறும் ஊறுகாய்தான் நான்.

ராதையை என்ன சொல்வேன்?. விளையாட்டாய் பிச்சி என்றும் பேதை என்றும் அறியா சிறு மழலை என்றும் அன்னை உள்ளத்தால் கொஞ்சி மிஞ்சி திட்டினாலும். அவள் இருக்கும் உலகம் என்ன என்பதை அறியமுடியாதபோது யார் பேதை என்ற கேள்வி எழாமல் இல்லை. ராதையின் தந்தை தலைப்பாகையால் முகம் மறைத்து செல்லும் காட்சியில் யாரிடம் இருந்து அவர் தன்னை மறைத்துக்கொள்கின்றார். ஊர் உலகத்திடம் இருந்தா? இல்லை தன்னிடமிருந்தே தன்னை மறைத்துக்கொள்கின்றார். தலையில் இருக்கும் ஆடையால் முகம் மறைத்துக்கொள்ளுதல். பார்க்க முடியாத இடத்தில் இருக்கும் அறிவால். பார்க்கும் விழியுிருக்கும் முகம் மறைத்துக்கொள்ளுதல் காணமுடியாத உலகத்தில் சஞ்சரிக்கும் தன்மகளை காண விழிக்கொண்டு காணமுடியாது என்பதை காட்டுவதுபோல் உள்ளது. அகம் மட்டுமே கண்ணாகி காணும் உலகம்.// தலைப்பாகை கொண்டு முகம் மறைத்து எழுந்து நடந்தார் தந்தை//


தான்பெற்ற மகள், மெய்யை பூவாய் தீண்டிய மகள், கண்ணில் கவின்சோலையாய் நின்ற மகள், செவிக்கு தேனாக சொல்தந்த மகள், நாசியில் மணமாகி நின்றமகள், நாவில் முத்தமாய் இனித்த மகள் ஐம்புலன்களையும் ஆண்ட மகள் இன்று யார்? என்று கேட்கும் உலகில் இருக்கின்றாள் என்றால் பித்தியாகியது யார்? இந்த புலன்களை பொய்யாக்கிவிட்டு தான் மெய்யென்று நிற்கும் மகளைப்பார்க்கும்போது கீர்த்திரதை நிஜமா? ராதை நிஜமா? 


கிளையில் இருந்து உதிர்ந்து காற்றில் மிதந்துபோகும் மலரைப்பார்க்கும் மரத்தின் நிலையில் மரம் என்ன நினைக்கும்? காற்றோடு ஆடவும் அசையவும் காற்றை எதிர்க்கவும் மட்டுமே அறிந்த மரதிற்கு,காற்றோடு போகும் பூவின் நடனம் எத்தனைபெரிய திகைப்பை ஏற்படுத்தும். தன் முனைப்பு என்னும் எதிர்ப்பால் மட்டுமே அசைந்துக்கொண்டு மட்டும் இருக்கும் மரம் உதிர்ந்துபோப்போகும் பூவை பேதை என்றும் பலமிலி என்றும் வாழத்தெரியாதவள் என்றும் திட்டிக்கொண்டே இருக்கும். வாழ்தல் என்பது இதுதானா? காற்றில் மிதந்துபோகும் பூ அறிந்தது வாழ்வில்லையா? காற்றில்போகும் பூவால் சொல்லாமுடிவதில்லை. அவற்றின் புன்னகையையும் கண்ணீரையும் விளக்க முடிவதில்லை, ஆனால் மரமாகி நிற்கும் அன்னையரிடம்  கண்ணீரோடு சொற்களும் திரண்டு வந்து விழுந்துவிடுகின்றது. அவள் காணும் உலகத்தை நான் காணமாட்டேனா? அங்கு எழும் அப்பழிகாரனின் முகம் கண்டு ஒரு மொழி உரைத்து மீள்வேனே. என் பேதை அவன் கைகளுக்கே அடைக்கலம். இனி அவள் வாழ்வெல்லாம் அவன்செயல்.”


ஊரும் உலகமும் தான் அறிந்த எல்லையையே உலகம் என்று சொல்கின்றது. அறியா எல்லையில் சென்று நிற்போரை ஏதோ ஒரு புள்ளியில் பைத்தியம் என்று சொல்லி தன்னை சமன்செய்து கொள்கின்றது. பைத்தியம் என்று சொல்லவும் முடியாத ஒரு முடிவிலி தோன்றும்போது இறைவனை பெரும் கொடுமைக்காரன் என்று விடுகின்றது.
//ஒருமகளை ஈன்றேன். திருமகள்போல் வளர்த்தேன். ஆழிவெண்சங்கு அணிந்தபிரான் அவளைக் கொண்டான் என்றெண்ணி நிறைகின்றேன். அன்னை வேறென்ன செய்வேன்?” என்றாள் கீர்த்திதை. அவள் சென்ற வழியெங்கும் விழிநீர் உதிர்ந்தது// பெண்ணைப்பெற்ற அன்னையர் அணைவரும் ஏதோ ஒரு புள்ளியில் விஷ்ணுசித்தர்தான்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கின்றார். இறைவனை சிலநேரம் நல்லவர் என்றும் சிலநேரம் கொடுமையானவர் என்றும் நினைக்கின்றேன்.

பிரிவும் பிரிவு நிமித்தமும் கொண்டு பாலைத்திணையில் வாடியும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் கொண்டு நெய்தல்திணையில் தவித்தும் நிற்கும் ராதை இன்று அடையும் துயரத்தைப்பார்க்கும்போது

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்கும்மோ
மருப்பொசிந்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!-ஆண்டாள்

காதலின் உச்சதிற்கு செல்லும் ஒரு ஜீவன் அதன் மறுமனையாகிய பிரிவின் உச்சத்திற்குப்போகும்போது இப்படித்தான் ஆகவேண்டும்//விதைகோடி உறங்கும் வெண்பாலை நிலம் நான். விரிந்து வான் மூடிய வெறும்நீலப் பெருவெளி நீ. கருக்கொள்ளா அன்னையின் முலைததும்பும் அமுதம் நான். நெய்யுண்டு கனன்றாடி விண் எழுந்து விலகும் எரி நீ. ஒருமுறை நாதொட்ட இசைவெள்ளம் ஒழியாது நிறைந்திருக்கும் ஆலயமணி நான். கிளையசைத்து காற்றிலெழும் கருங்குருவி நீ. நீ சென்ற வழியெனத் தெரிபவை உன் பாதத்தடங்களல்ல. இமைப்பழிந்த என் விழிநீர்க்குளங்கள்//

கடவுளோ காதலனோ நல்லவன் கொடுமைக்காரன் என்பதெல்லாம் நமது மனதின் மயக்கா?

இந்த உடம்பு உண்மை இந்த உடம்பு காணும் உலகம் உண்மை. உலகில் காணும் இன்பமும் துன்பமும் உண்மை.இந்த கணம் உண்மையாக இருப்பதால். 

துன்பமும் இன்பமாவது ராதைகளுக்குதான்? ராதை அல்லாதவருக்கு அல்ல என்று சொன்னாலும் ராதைக்காக கண்ணீரும், ராதைபோல் உணரும் தருணமும் இந்த இடத்தில் எழுந்து உலகம் மறந்து போகசெய்கின்றது. என்னை //“என் இல்லம் மட்டும் சிறிதாகியது. சுவர்கள் வந்து என்னை சூழ்கின்றன.”//

கற்சிலைவேறு, கற்சிலையாவது வேறு. கற்சிலையாகும் தருணம் நீலம்-27 அதுவும் நீலக்கடற்கரையோரம் ஓடக்கராப்பெருமாளுக்காக.  

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.