அன்புள்ள ஜெ சார்,
நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்னனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான்.
என் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்ல்விட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்? அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா? அப்போதே ராதைக்குத்தெரியும். அது வெறும் குழந்தை கிடையாது என்று. ஆனால் வெறும் குழந்தைமாதிரி வந்து படுத்து மாயம் காட்டுகிறது.
இங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன்.
என்றுதான் குழந்தையை முதலில் பார்த்ததுமே ராதை நினைக்கிறாள். அவள் கடைசிவரை ஏங்கியதும் கடைசியிலே வந்து சேர்ந்ததும் அங்கேதான் என்று கடைசி அத்தியாயங்களை வாசிக்கும்போது தெரிந்தது. சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன் என்ற வரியை வாசிக்கும்போது கடைசி அத்தியாயத்தை முதலில் எழுதிவிட்டு அங்கே சென்றீர்களோ என்ற பிரமிப்புதான் வந்தது
செவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். அந்த இடத்தை ஆரம்பத்திலே வாசித்தபோது ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ பொற்பூர வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற ஆண்டாளின் ஏக்கம் தான் மனதில் இருந்தது. ஆனால் கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது தெரிந்தது அந்தத் துளிதான் அவளுக்கு வந்த அந்த நாத ஆராதனை என்று
மனுஷ உடல் ஒரு அற்புதம் என்று சொல்வார்கள். அதில் ஒவ்வொன்றும் மற்ற எல்லா உறுப்புகளுக்குமானது. பிரிக்கமுடியாதது. அப்படி நீலம் ஒரே அமைப்பாக இருக்கிறது. தனித்தனியாக எழுதியதுபோல இல்லை. வரிசையாக எழுதியதுமாதிரியும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு விஸ்வரூபமாக நாவலை ஒரே நிமிஷத்தில் பார்த்து எழுதியதுமாதிரி இருக்கிறது
நன்றி சார்
சாரங்கன்