Saturday, September 13, 2014

காதலன்அன்புள்ள ஜெ,


அதுவாதல் உண்மையில் ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. ராதை கண்ணனுடன் ஒன்றானாள் என்பதல்ல அதற்கு காரணம். உண்மையில் வேய்குழலோசை கேட்ட போதே ராதை கண்ணனனும் தானும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்து விட்டாள். ஆனால் ராதையைக் கண்ட கண்கள் என்ன ஆயின என்பது மட்டும் எனக்கு புரியவில்லை. அதற்கு இந்த அத்தயாயம் சரியாகப் பதில் சொல்லியிருக்கிறது.


'விழவில் வழிதொலைந்த மகவின் செவிதேரும் அன்னை மொழி நீ. கைநீட்டி கண்ணீர்வார ஓடிவந்து என்னை அள்ளி முலைசேர்க்கும் பெருங்கருணை. நான்குதிசைமுனையும் ஒளிநூலால் இணைத்து வலையாக்கி நடுவே உடலென்னும் விழிகொண்டு அமர்ந்திருக்கும் விஷச்சிலந்தி. விஷநீலம் விரியுமிந்த இரவில் விண்மீன்கள் நடுங்குகின்றன. யமுனை கருமைகொண்டு சுழித்தோடுகிறது. கூந்தல் பெருக்கில் எழுந்த விண்மீன்கள். அலைவளைவுகளிலாடும் நிலவொளி. நிலவு கரையும் நீரலைகள். நீரின் பேரொலி. குனிந்து முகமென்று இருள்நோக்கும் கரைமரங்கள். இந்த இரவு இனிநிகழாது. இது அறியும் சொல் இனி மீளாது. கரந்துறையும் ஒன்று கண்டுகொண்டது களவை.


ஆடும் மரங்களெனும் குவையிருள்கள். அதனூடே ஓடும் பாதையெனும் நீளவடு. என் கால்கொண்ட விழியறியும். என் விழிகொண்ட இருளறியும். நீலவிஷமெழுந்த இரவில் எங்கோ சுடர்ந்து உதிர்கின்றது ஒரு எரிவிண்மீன். யமுனையில் நிலவின்மேல் நீந்துவது யார்? ஆம், அவளை நானறிவேன். பித்தெழுந்த பாவை. ஆயர் குடிமுளைத்த பேதை. யமுனை சுருங்கி ஓர் கருநீல ஓடையாகியது. எந்தக்குழல் எழுப்பும் கருநாதம் நீ? எந்தப் பண்ணின் ஏழு சுரம்? அலையலைகள். ஆடும் நிலாமலரின் இதழலைகள். இன்றிரவில் நான் அன்னையை அணையும் கன்று.'


மேலே வந்த வரிகள் ராதையோடவை அல்ல. சாட்சாத் கண்ணனோடது தான். ராதையானவள் கண்ணனை என்ன செய்திருக்கிறாள் என்றுணர்ந்தபோது வந்த பெருமூச்சு, இப்போது நினைத்தாலும் புன்னகைக்க வைக்கிறது. உண்மையில் நான் இதைத் தான் எதிர்பார்த்திருந்தேனா? என்ன தான் யோகம் என்ற வகையில் ஜீவாத்மா, பரமாத்மா என்றெல்லாம் வாசித்திருந்தாலும், கண்ணனையும், ராதையையும் காதலர்களாகத் தான் மனது பார்த்திருக்கிறது. ராதையானவளின் திருமண ஒப்புதலை கண்ணன் மீதான ஊடலின் வெளிப்பாடாகத்தான் முதலில் புரிந்து கொண்டேன். இன்னும் அதன் மறைபொருள் பிடிகிட்டவில்லை. பின் ஏதேனும் ஒரு வாசிப்பில் கிட்டலாம்.


இங்கே பகதனுக்காக ஓடி வந்த பரமாத்மா என்பதை விட, ஒரு பெண்ணின் பெருங்காதலை உணர்ந்த, அப்பெருங்காதலுடன் தானுமிருப்பதையறிந்த ஒருவனாகப் பார்ப்பதைத் தான் மனமும் விரும்புகிறது. மீண்டும் பெண்களை எதிர்நோக்குபவர்களாக ஆண்களைக் காட்டிவிட்டீர்கள். எவ்வளவு பெரிய ஞானியானாலும் ஆண்கள் அன்னை முலையின் கதகதப்பைத் தான் விரும்புகிறார்கள். இங்கே ராதை தன்னுள் எழுந்த குழலோசையைத் தேடி, அதையிசைப்பவனைத் தேடி வந்தாலும், அவ்வோசையை எழுப்பும் குழலைக் கண்டுகொள்கறாள். அக்குழலை சுவைத்து தன்னில் தோய்ந்து, விரல் தொட்டாலதிரும் தந்தியென நிற்கும் அவளிடம் இணைய வருகிறான் கண்ணன். மனம் முழக்க ஒரு வித விடுபட்ட உணர்வே இருக்கிறது. வெகு அருமையான அத்தியாயம் ஜெ.


உண்மையில் யோகத்தைப் பற்றியும், ராஸலீலாவைப் பற்றியும், இந்திய ஞான மரபையும் அறியும் தோறும் நீலம் ஒவ்வோர் இதழாக விரிகிறது. உதாரணத்திறகு, கண்ணன் நீர் மருதங்களை வீழ்த்தும் அத்தியாயத்தில் யசோதையைப் பார்த்து சொல்கிறான், 'அம்மரம் இம்மரம், அம்மரம் இம்மரம்'. இந்த அத்தியாயம் படித்த போதே இவ்வரிகள் மனதிலேரிவிட்டன. ஆனால் பொருள் அமையவில்லை. இன்று தங்களின் தளத்தில் வாசிப்பைப் பற்றிய ஒரு கட்டுரையில் அறிவு என்பது இதம் அதம் இரண்டையும் அறிந்து அதையும் தாண்டுவது என்பது தான் என்றிருந்தீர்கள். அதைத் தான் கண்ணன் யசோதைக்கு சொல்கிறான்.நவில நவில நயம் கொள்கிறது நீலம்.

அனபுடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து