அன்புள்ள ஜெமோ,
நீங்கள் நீலத்தை எந்த மனநிலையில் எழுதுகிறீர்கள்? ஒருபுறம் இரு தனி உயிர்களின் உணர்வுகள். மறுபறம் ஒரு மக்கள் கூட்டத்தின் கதை. எப்படி கூடுவிட்டு கூடு பாய்கிறீர்கள்? அந்த வித்தை எனக்கும் கற்று தந்தால் உருப்படுவேன். பெரும்பாலும் காலையில் முதல் வேலையாக படிக்கிறேன். உடனை கனவு தான். உள்ளே
வேறு ஒரு வாழ்வு ஓடுகிறதே. முதல் பகுதியில் நீங்களே ராதையாகாமல் அந்த உணர்வுகளை எழுத முடியாது. நான் ராதை ஆகாமல் அதைப் படிக்க முடியாது. ராதையின் அனைத்து பகுதிகளையும் உணரத் தான் முடிகிறது. அதை மற்ற பகுதிகளைப் போல பகுத்தறிய முடிவதில்லை. அவ்வாறு பகுத்தறிய முற்பட்டால் தூக்கம் கெடுவதைத் தவிர வேறெதுவும் நடப்பதில்லை
. மாறாக புத்தியை ஏறக் கட்டிவிட்டு உணர்வால் மட்டும் படித்தால், என்னில் எங்கோ ஓர் இயைின் அசைவை, அது தன் முயற்சியில்லாமல் தானாக அசையும் உணர்வைப் பெறுகிறேன். உணர்ந்ததை வார்த்தைகளாக்கவும் முடிந்ததில்லை.
உண்மையில் ராதையின் பகுதிகள் எனது புத்திக்கு விடப்படும் சவால். என் மனம் புத்தியை விஞ்சும் இடம். இது எவ்வகை எழுத்து? இதுவரை இப்படி ஒரு வகையை இதற்கு முன் நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? நீங்கள் படித்தவற்றில் இதே வகையைச் சேர்ந்த ஓர் எழுத்தைச் சுட்ட இயலுமா?
நீலத்தை பல முறை பல விதங்களில் படிக்கலாம். இது போல் தமிழ் பெண்ணின் அனைத்து அழகுகளும் வெளிப்படும் மொழியாட்சியை சமீபத்தில் (என் வாசிப்பு அனுபவத்தில்) கண்டதில்லை. எதுகையும் மோனையும் பொருளோடு தழுவும் ஓர் எழுத்தைப் படித்ததில்லை. எத்தனை வார்த்தைகள், எத்தனை அர்த்தங்கள்?! இதோ இவ்வரி,
"நீரும் நிலமும் ஆகி நின்றது உரு. மேலே காற்றும் ஒளியும் வானும் ஒன்றாகி நின்றது அரு. நடுவே கைக்குழல் கொண்டு ககனம் அளந்தது திரு தழுவும் தரு."
இதை எவ்வாறு வாசிப்பது? அருவமும், உருவமும் இணைந்து வருவது தான் தரு என்றா அல்லது அருவும் உருவும் இணைந்த தருவின் துளியை ஆள்வதால் மொத்த கானகத்தையே அளக்கிறான் என்றா அல்லது அருவையும் உருவையும் இணைப்பது தான் தரு என்றா அல்லது அருவும் உருவும ஒன்றேயான தரு ஆதலால் தன்னைத் தழுவிய திருவோடு, பெரும் படையையும் அளக்கிறான் என்றா!!!!!
ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறு ஏதேனும் ஓரிரு வரிகள் தங்கி தூக்கமழிக்கும். அவை புலப்பட்டவுடன் அதை மையமாக வைத்து ஒரு மீள்வாசிப்ப செய்தால் வேறு ஒன்று தட்டுப்படும். அப்போது முடிவு செய்வேன், இனிமேல் மனதால் படிக்க வேண்டும் என்று. பிரசவ வைராக்கியம் போன்று புத்தி மீண்டும் எழுந்து முன் வரும், அடுத்த அத்தியாயம் வந்த உடன்.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
அருணாச்சலம், நெதர்லாந்து
அன்புள்ள் அருணாச்சலம்,
நீலம் எழுத தொடங்கியது முதல் ஒரு உச்சமனநிலையில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாட்களில்தான் மிக அதிகமாக வேலையும் செய்கிறேன். நாலைந்து சினிமாக்கள். கட்டுரைகள். இதற்குமேல் சில நாவல்கள் வாசித்தேன். கூடவே சினிமா படப்பிடிப்பிலும் கலந்துகொண்டென். இந்த ஒரு மாதத்தில் எட்டு பயணங்கள். ஒவ்வொருநாளும் சந்திப்புகள், நிகழ்ச்சிகள். பெரும்பாலும் விடுதியறைகளில் வைத்து எழுதப்பட்டது நீலம். இரண்டே நாட்கள்தான் வீட்டில்
நீலம் நேரடியாக எழுதப்படும் நேரம் ஒருநாளில் ஒருமணி அளவுதான். சிலசமயம் இரண்டுமணிநேரம். எஞ்சிய நேரம் முழுக்க அந்த உச்சத்தில் இருந்து இறங்கத்தான் முயல்வேன். வேலைசெய்து பேசி சிரித்து அலைந்து கொண்டிருந்தாலொழிய மனதை அடுக்கி நிறுத்தமுடியாது. அது ஏழு குதிரை இழுக்கும் ரதத்தை கடிவாளம் பிடித்து நிறுத்துவதுபோல. அதே விசையுடன் வேறு திசை நோக்கிச் செலுத்தவேண்டியதுதான்
ஜெ