அன்புள்ள ஜெ,
நீலத்தின் முழுமை தரும் அத்தியாயம், கொடி, மனதில் ஏற்படுத்திய உணர்வுகள் வெகு அந்தரங்கமானவை. இதில் மாமன்னர் கிருஷ்ணரைப் பார்க்கிறோம். மகாபாரத யுத்தம் முடிவடைந்து விட்டது. தன் முடிவுணர்ந்த ஞானியாகவே கிருஷ்ணர் வருகிறார். அவரின் கண்ணசைவிலேயே கருத்தறிகிறார் பேரமைச்சர். ஆனால் அவருக்கும் தெரிவதில்லை கிருஷ்ணரின் இளமை. அங்கே யாருக்குமே தெிரவதில்லை, அனங்க மஞ்சரியைத் தவிர. 90 வருடங்களுக்கு முன்னர் ராதை பிறந்த தினம் என்கிறார்கள். அவள் கன்னியாகவே வாழ்ந்து காதலருக்கு அருள்கிறாள் என்கின்றனர். தங்கள் குலதெய்வம் என்கிறார்கள்.
ராதை மலர்ந்தது மனதிலல்லவா. குறிப்புணர்த்தியிருக்கிறீர்கள் . கிருஷ்ணுருக்கு 81 வயது. நீங்களே வேண்டாமென்றாலும் தர்க்கம் உங்களை விட்டு போகாது ஜெ.!!!!
அப்படியென்றால் இங்கு ராதை முன் நிற்கும் கிருஷ்ணன் யார்? இவன் யாதவ அரசன். உலகின் அனைத்து பற்றுகளையும் துறந்தவன். ஞானி. தன்னைச் சுற்றி நடப்பவற்றை எல்லாம் எங்கோ இருந்து பார்ப்பதைப் போல இருந்தவன் ராதை என்ற பெயரைக் கேட்டதும் இங்கே வருகிறான். திரும்பும் வைரம் என திருவிழிகள் கொள்கிறான். அவளிருக்குமிடம் நோக்கிச் செல்ல விழைகிறான். பொதுவாக நாம் நினைக்கும் ஒன்றை உடல் செய்வதற்கு சற்று முன்னரே மனம் அதைச் செய்திருக்கும். சில விஷயங்களில் மட்டுமே உடலும் மனமும் ஒரே கதியில் செயல்படும். இங்கே ராதையின் பெயர் கேட்டவன் கிருஷ்ணன். எழுந்தவன் கண்ணன். ஜெ இவ்விடம் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. பெயரைக் கேட்டு திரும்பிய கிருஷ்ணர் சொலழொமல் எழுகிறார். மனமுணர்த்துவதற்கு முன உடல் உணர்ந்து விட்டது.
ராதை என்பவள் யாதவ மன்னனுக்கு யார்? அவன் பருவம் எய்துவது வரை அவனைத் தூக்கி சுமந்த ஓர் 'அக்கா'.
சங்குக்கள் கடல் உரையில் ஜெ நீலியை நேரில் பார்த்த ஓர் அனுபவத்தை சொல்லும் போது, மேலாங்கோட்டு கோவிலுக்கு ஓர் அக்கா(சுகாசினி அக்கா என்று சொன்னதாக நினைவு) கையைப் பற்றி சென்றதை சொல் லியிருப்பார். கூடவே இளம்பிராயத்து பையன்களுக்கு வயது வந்த அக்கா என்பது மிகவும் பிடித்த ஒன்று என்பார். அவள் ஓர் இளமையான அன்னை. அவள் கையைப் பிடித்து நடப்பதும், அவளைச் சிரிக்கச் செய்து, தேடச் செய்து விளையாடுவதும் மிகப் பிடித்த விளையாட்டுகள். எனக்கும் அப்படி இரு அக்காக்கள் இருந்தார்கள்.
இங்கே யாதவ கிருஷ்ணனுக்கு பர்சானபுரியின் ராதை அப்படி ஓர் அக்காவாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் முன்பு தான் கண்ணன் முதன்முதலாக குழலூதினான். இதோ இப்போது நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் முன் குழலூதி மெய்மறக்கிறான் கண்ணன்.
ஜெ இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து கிருஷ்ணர் கிருஷ்ணர் என்றே அழைக்கிறார். எல்லாம் ராதையின் பெயரை அவர் கேட்கும் வரை தான். அதன் பிறகு அவன் கரிய தருமேனியனாகிறான். இறுதியில் கண்ணனாகிறான்.
மிக உணர்ச்சிகரமான முடிவு இது. மனது மறந்த பழைய நினைவுகளைக் கிளறி விட்டது இந்த அத்தியாயம். மனதுக்கு மிக அணுக்கமான நூலாகி விட்டது நீலம்.
நன்றி ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
அருணாச்சலம், நெதர்லாந்து