Friday, September 26, 2014

இரு முழுமைகள்




அன்புள்ள ஜெ,


ராதையின் முழுமைக்குப் பிறகும் நீலம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை இன்றைய அத்தியாயத்தில் கோடிக்காட்டி விட்டர்கள். முடி என்பதை கண்ணன் அணியும் முடியாகவும் பார்க்கலாம் அல்லது தன்னறம் காட்டும் செயலைப் பற்றில்லாமல், விளைவை எதிர்பாராமல் முடிப்பவனாகவும் பார்க்கலாம். கீதையின் சாங்கிய யோகத்தைப் படிப்பதைப் போல உள்ளது.


சரியாகத்தான் வாசிக்கிறேனா?


அன்புடன்,

அருணாச்சலம், நெதர்லாந்து

அன்புள்ள அருணாச்சலம்,


‘சரியானவாசிப்பு என ஒன்று உண்டா என்ன? கவனமான வாசிப்புகள் எல்லாமே சரிதான். படைப்பு நம்முள் நுழைய நம் அகங்காரமும் நம் முன்கல்வியும் இடம் அளிக்கவேண்டும். படைப்பை நம் கற்பனையும் சிந்தனையும் தியானமும் மேலெடுக்கவேண்டும். அது நம்மில் ஒரு கனவாக நிகழவேண்டும், அவ்வளவுதான்


இரு சரடுகளாக வந்து கொண்டிருந்த்து நீலம். இருவகை யோகமுறைமைகள் என்று பார்க்கலாம். ராதையுடையது தன்னிலை அழியும் பிரேமை. கம்சனுடையது அகங்காரம் நிறைந்த உபாசனை. இரண்டும் இருவகைகளில் நிறைவடைகின்றன


இதுவரை வந்த உபதலைப்புகள் வழியாக தொகுத்துக்கொள்ளலாம். கம்சனின் முறை ஐம்பூதங்கள் வழியாக ஆணவம் வழியாக முழுமைநோக்கிச் செல்கிறது. ராதை தன் உலகை தானே உருவாக்கி அழித்து முழுமை அடைகிறாள்


ஜெ