Saturday, September 20, 2014

கஜேந்திரமோட்சம்





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நீலம்-31யை நீலம்-32 வெளிவிடும்நேரத்தில்தான் படித்தேன்.
இன்று சில அரிதான நினைவுமலர்களை இறைவன் பரிசாக தந்ததான். அந்த நினைவு மலர் வடிக்கும் தேனில் வெண்முரசு இனிப்பது ஒரு தனிச்சிறப்பு.
சௌதி அரேபியாவின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, அல்-கோபர் கிளாசிக் ஹோட்டல் அறைகளில் மூடியக்கதவுகளுக்கு பின்னால்தான் இன்று பொன்ணோணம்-2014 சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாப்பட்டது.செப்டம்பர்-19-2014. இன்றைய வாரவிடுமுறைநாளில்தான் அறைப்பதிவுக்கிடைத்தது.  கொண்டாடியது மலையாள நண்பர்களின் சினேகவேதி என்னும் நட்புவட்டத்தினர். நண்பர் முகமது ஹபீப் அழைத்தார் சென்றார். அதனால் நீலம்-31யை படிக்க முடியாமல் ஆகிவிட்டது. ஆனால் முதற்கனில் வந்த பக்தியால் சிரஞ்சீவியாக  நிற்கும் மாவலியின் பெயரால் கொண்டாடப்படும் விழா என்பதால் ஆனந்தம். நண்பர் ஒருவர் மாவலி வேஷத்தோடு வந்தபோது எனக்கு வெண்முரசு நடந்துவந்ததுபோல் இருந்தது. காரணம் வண்ணக்கடலில் வரும் இளநாகன் காணும் பொன்மணல்காணல் பதிவில் அசுரர்கள் எழுந்துவரும் காட்சியில் நானும் ஒருவனாக நிற்பதுபோல் இருந்தது. ஓணம் திருவிழாமுடிந்து விருந்துண்டு, இரத்ததானம் செய்துவிட்டு அறைக்கு வந்து நீலம்-31 வாசித்தால் இடதுபுறம் மாவலி வலதுபுறம் கம்சன் என்று காலம் பின்னுக்கு இழுத்து  எங்கோ கொண்டுசென்றுவிட்டது.    இன்று கண்ணனின் லீலையா இது? லீலைகள் இல்லாத கணங்கள் ஏது?  அந்த கணத்தில் வாழ்வாகி வந்து நின்றது வெண்முரசு.

நீலம்-31
கண்டது முருகதரிசனம்
கொண்டது கஜேந்திரமோட்சம்.

மருக என்ற நீலத்தின் ஒற்றைச்சொல் வானுக்கும் மண்ணுக்கும் பறக்க வைத்து என் சென்னிமீது மதுமலர் தெளித்தது.
அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பது மேர்மேனியாக
கருணைக்கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய-என்ற கந்தபுராணமாகி நின்றது.

மண்ணும் விண்ணும் உள்ளவரை, மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைவருக்கும் மாமன் என்ற பெயர் கொண்டு நிற்பவர் நெடியோனாகிய கரியோன். நீலநிறங்கொண்ட பெரியோன்.

அரவனைமிசை துயில் நரகரி நெடியவர்
மருகனெனவே வரும் அதிசயம் உடைய-சரவணபவநிதி-திருப்புகழ்

நவநீதமும் திருடி உரலோடு ஒன்று
அரிரகுராமன் சிந்தைமகழ் முருகோனே-சிவனார் மனம்குளிர-திருப்புகழ்

முருகன் திருப்புகழில் தொட்டவிடமெல்லாம் மருகன் மருகன் என்று முருகன் நின்று இனிக்கும் அழகும் இனிமையும் நீலம்-31ல் கம்சன் “மருக” என்று அழைக்கும் அழகில் இனிமையில் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.  

முருகன் நினைவால் குளிர்ந்தாலும் இங்கு மருகன் என்ற சொல் கொண்டுவரும் உணர்வும் காட்சியும் நெகிழ வைக்கின்றது.

தாய்மாமன் தந்தைக்கு நேரானவர் அல்லது தந்தைக்கு ஒருப்படி மேல் என்றுக்கூட சொல்லலாம். காரணம் தான் உயிருடன் இருக்கும்வரை கணவனை நம்பும் மனைவி. தனக்கொன்று நடந்துவிட்டால் பி்ள்ளையை தனது அண்ணனைத்தான் பார்த்துக்கொள்ளச் சொல்வாள். தாய்மாமன் இதயம் தாயாகி இருப்பதை தாய் மட்டுமே அறிந்து இருப்பதாள் இருக்கலாம்.  தந்தையின் நெஞ்சம் கல்லாகிவிடும் தருணம் உண்டு அல்லது பிறழ்ந்துவிடும் கொடுமையும் உண்டு. தங்கைகளைக்கொண்ட அண்ணன் எல்லாம் அன்னைகள்தான். எவ்வளவுத்தான் கொடியவனாக இருந்தாலும் கம்சன் ”மருக” என்று சொல்லும் அந்த ஒற்றைச்சொல்லில் யாரை மாமன் என்று வையமும் வானகமும் கொண்டாடுகின்றதோ அவனுக்கு நான் மாமன். மாமாவாக என்றும் இருப்பனே நான் உனக்கு மாமன் என் கால்கும்பிடடா என்று சொல்லும் இடத்தில் ராதையை அவன் மிஞ்சுகின்றான். உலகில் உள்ள அனைத்தையும் மிஞ்சுகின்றான். ராவணன்பெறாதபெறும்பேறு. மாவலி பெறதபெறும்பேறு. இரணியஹசிபுபெறாதபெறும்பேறு. நாளை சிசுபாலனும்பெறாதபெறும்பேறு. கம்சனை இந்த அளவுக்கு ஜெயைத்தவிர மற்றவர்கள் உயர்த்தி இருக்கின்றார்களா? ஜெதான் சொல்லவேண்டும். கம்சனின் பிம்பமே மாறிவிட்டது. கண்ணன் உடன் சேர்ந்து எல்லோரும் மாமா என்று அவனை அழைக்காலாம்போல் செய்துவிட்டார்.  
//விரிந்த இதழ்ச்சிமிழில் எழுந்தது ஒரு சொல். “மாமா” என அதைக்கேட்டேன்மெய் விதிர்த்து சொல்திகைத்தேன். “மருகாசிறுமூடாஎன் கால்தொட்டு பணிகஉன் சிரம் தொட்டு வாழ்த்துகிறேன்” என்றேன்.//

ராதையைவிட கம்சன் எப்படி பெரியவன் என்றுப் எண்ணி நிற்கின்றேன்.  
கண்ணனின் சிறுபாதம் வயிற்றில்பட வாழ்ந்தவள் தேவகி. கண்ணன் பொற்பாதம் மடியில்பட வாழ்ந்தவள் யசோதை. கண்ணன் மலர்ப்பாதம் மலர்முலைக்குவையில் பட வாழ்ந்தவள் ராதை. இந்த மூவரும் ஒரு புள்ளியில் தங்களை கண்ணனின்  தாய் என்று உணர்கின்றார்கள். கம்சன் கண்ணனைப்பற்றிக் கேட்டது பிறர்சொல்லி. கண்ணனைக்காண்டது பிறர்க்கண்கொண்டு. கண்ணை அறிந்தது கனவில் கற்பனையில் ஆனாலும் அவன் மாமன் என்ற உணர்வை ஒரு நொடியில் அடைகின்றான் என்பது எத்தனைபெரிய ஆச்சர்யம். ஜெ தனித்து நிற்கும் அற்புதம் இங்கு. அந்த கணத்தில் மாமனாகி. தாயாகி நிற்கின்றான். அரபி மொழியில் மாமா என்றால் அம்மா என்று பொருள்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கின்றார். //ஆயிரம் வருடங்கள் இருள் சூழ்ந்த அறையாக இருந்தால் என்ன? ஒரு சிறு விளக்கை அந்த அறைக்குள் கொண்டு சென்றால் அந்த கணத்தில் அனைத்து இருளும் விலகும்//
ஆணவனம் மாயை கன்மம், காமம் குரோதம் மோகம் என்னும் பெரும் இருள்கள் ஜென்மஜென்மாய் திரண்டு ஒரு உருவமாகி வந்து ஒரு யானைபோல் நிற்கும் கம்சன் ஒரு நொடியில் ஒளியாகின்றான். எப்படி? // அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டு கனன்றது// அடுக்கிய விறகை வானளாவ குவித்து வைத்தாலும் ஒரு சிறுதீ கொளுத்தி நீறாக்கும் அதுபோல் நமச்சிவாய என்னும் நாமம் வினையை பொசுக்கும் என்கிறார் நாவுக்கரசர்.
அதைபே பாரதி இப்படிச்சொல்கின்றான்.

 "க்கினிக் குஞ்சொன்று கண்டேன்அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடுதழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'
இதைத்தான் ஜெ இப்படி சொல்கின்றார். // அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டுகனன்றது// இப்படி இவர் சொல்வதாலேயே அந்த கரி ஒரு படிமமாகி எழுந்து வந்து சிந்தை நிறைக்கின்றது. வெள்ளத்தால் இயற்கை சீற்றத்தால் அழிந்துபடும் காடு, விலங்குகள் மண்ணோடு மண்ணாக கலந்து மக்கி கரியாகின்றன. அந்த கரி ஒரு துளி நெருப்புக்காக தவித்துக்கொண்டு இருக்கின்றது. பட்டதும் பற்றிக்கொள்கின்றது. கம்சனும் கரியாகி கண்ணன் என்னும் நெருப்புக்காகத்தான் தவம் இருக்கின்றான் என்பதை சொல்லாமல் சொல்கின்றார்.

ராதை பாரிஜாதமலரின்  பெண்வடிவாக வந்தவள் அவள் அலைந்து அலைந்து வாசமாய் கண்ணனை அடைந்து மேல் எழுகின்றாள். கம்சன் கரியானவன் எரிதல் மூலமே எழமுடியும் விண்தொடமுடியும். கரியால் நகர்ந்துசென்று தீயை அடையமுடிவதில்லை தீதான் வந்து கரியை அடைந்து கொளுத்தவேண்டும். அலைந்து கண்ணனை அடைந்த ராதையைவிட, கரியாகி இருந்து இருந்த இடம்நோக்கி கண்ணனை கம்சன் இழுப்பதால் ராதையைவிட உயர்கின்றான். ராவணன்கூட ராமனை தன்னைநோக்கி இழுத்தவன்தான். அவனால் பெரியவன் என்று சொல்லிக்க்கொள்ளமுடியவில்லை. கம்சன் தன்னை பெரியவன் என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால்அல்ல. இருளுக்குள் உள்ள ஒருதுளி ஒளிபோல அவன் வன்மத்திற்குள் உள்ள அன்பு. மருக என்பதில் அதைக்காட்டுகின்றான்.

மண்ணில் பிறந்த அனைவரும் கண்ணன்மீது மோகம் மட்டும் கொண்டு இருக்க, ராதை காமம் கொண்டால். காமம் என்னும் ஒற்றைப்பாதையில் ஓடி அவள் கண்ணனை அடைந்தாள்.
இதுவரைப்பிறந்த தாய்மாமன்களில் கண்ணன்பிறந்ததால் பழிச்சுமந்தவன் கம்சன்போல் வேறு ஒருதாய்மாமன் மண்ணில் இதுவரை இல்லை. ஏன் இந்த கொடுமை? காமமா? குரோதமா? மோகமா? என்றால் மூன்றும்தான்.  மூன்றும் அவனிடம் சம அளவு உள்ளது. எதை அவன் இழப்பது. எந்தவழியில் அவன் பயணப்பட்டு கண்ணனை அடைவது. எதையும் இழக்க முடியாமல் கண்ணன் என்னும் நீலத்தை காமக்கோரமோகம் என்னும் முப்பட்டகத்தில் போட்டு உருட்டி உருட்டிப்பார்க்கின்றான் தீரவில்லை திகைக்கின்றான். அவன் குழந்தைகளைக்கொன்றான் என்றுதான் இன்று வரை நினைத்தேன். அவன் கொன்றது எல்லாம் கண்ணனைத்தான். அவனுக்குள் பெருகி நிற்கும் கண்ணனைத்தான். கண்ணாடி அறைக்குள் மாட்டிக்கொண்ட பாம்பு எண்ணற்ற பாம்பு காட்டுக்குள் மாட்டிக்கொண்டதுபோல் கோபம் கொல்வதுபோல் உள்ளது அவன் நிலை. பலவாய் நிற்கும் கண்ணனை அழித்து ஒரு கண்ணனை மட்டும் கம்சன் கண்டுக்கொள்கின்றான்.
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்-கந்தகுருகசமாகி நிற்கின்றான் கம்சன்.

//கொண்ட மூச்சையெல்லாம் மீண்டும் காற்றுக்கே அளித்தன என் மூக்கும் வாயும்என் நா உரைத்தசொல்லெல்லாம் நெஞ்சுக்குள் மறைந்தனஎன் நா அறியாத சொல் ஒன்றை என் இறுதி விழிசொன்னது.கண்ணா என கைகூப்பினேன்என் மேல் கால்வைத்து நின்றனர் ஆயிரம் இளமைந்தர்//

கம்சன் தன்னை யானையாக உணரும் தருணத்தில் வந்து நிற்கின்றான் கஜேந்திரன். //என் கைவைத்துநோக்காத எதிலும் என் கால் பட்டதில்லைசேற்றை அஞ்சினேன்//  சேறு என்ற இடத்தில் நிற்கின்றார் ஜெ. மலர்முளைக்க சேறு இல்லாமல் நடக்காது. சேறு இருந்தால் யானை நடக்காது. மீண்டும் வந்து ராதையும், கம்சனும் முட்டிநிற்கின்றார்கள் கண்ணன்மீது.
பாரிஜாததோட்டமாக இருக்கும் ராதை வளர சேறாக இருக்கிறான் வாழ்விக்க, வாழ்க்கையாக வந்த கண்ணன். யானையின் கூட்டமாக இருக்கும் கம்சனுக்கு புதைக்குழி சேறாக இருக்கிறான் வாழ்விக்க, வாழ்க்கையாக வந்த கண்ணன். ராதை தனது வாசத்தை கண்ணன்மீது தெளிக்கின்றாள் அவன்மீட்டும் குழலிசை கேட்கின்றாள். கண்ணன் என்னும் சேற்றில் கஜேந்திரன் என்னும் கம்சன் மாட்டிக்கொண்டுவிட்டான். அவனுடைய அரசியல் என்னும் முதலை அவனை விழுங்குகின்றது. கண்ணனின் பாதம் கமலம். கண்ணனின் வடிவாக இருக்கும் குழந்தைகள் பாதம் எல்லாம் கமலம். கம்சன் என்னும் கஜேந்திரன் கண்ணனை தன்னிடம் கொண்டுவர கமலங்களை பிய்த்து பிய்த்து எரிகின்றது. கம்சன் கொலைகாரனா? அர்ச்சகனா? ஆயிரத்தெட்டு செங்கமலங்களால் சிவனை அர்ச்சித்த நாராயணன் ஒரு மலர்குறைந்தது என்று தனது கண்ணைத்தோண்டி அர்ச்சனைசெய்து செங்கண்மால் என்ற நாமம் பெற்றான். அவன் தெய்வம் தன்னையே தனக்காக அர்ச்சித்தான். கம்சன் மனிதன் தனக்காக கண்ணனையே கண்ணனுக்கு அர்ச்சித்தான்.

நொதிவைத்த கராம் அலைந்திடு களிறுக்கு அளுளே புரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே-பகர்தற்கு அரிதான-திருப்புகழ்

யானை சேற்றில் மாட்டிக்கொண்டால், பூப்பிய்த்துபோட்டதா, பிள்ளைகளைப் பிய்த்துப்போட்டதா என்றுப் பார்க்காமல் வருவான் எங்கள் கண்ணன் என்பதைக்காட்டி ஒரு கஜேந்திரமோட்சத்தை கம்சன்மூலம் அரங்கேற்றி. மாமனுக்கு மாமனாய் நிற்கும் தகுதி கம்சனுக்கு உண்டு என்பதை எத்தனை அழகுபட சுவைபட சொல்லி சென்று உள்ளார் ஜெ. நீலத்தில் நீலம்-31 என்பது கண்ணன்சூடும் ஒரு நீலமணிக்கல்லே! எல்லாம் தருகின்றது. எல்லாம் அதில் இருக்கின்றது. இன்னும் நிறைய எழுத இருக்கிறது. அதுதான் நீலம்.

கம்சன் நெஞ்சில் கழல்வைத்த கண்ணனின் மருகன் கழல்போற்றி!

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.