Monday, September 22, 2014

ஆலைக்கரும்பு





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

மலையும் மலைச்சார்ந்த இடமும் குறிஞ்சி. சிறுபொழு இரவு. பெரும்பொழுது. முன்பனிக்காலம்.  உடல்கொள்ளும் உணர்வு கூடலும் கூடல் நிமித்தமும். தொழில் வேட்டையாடுதலும், தினைபுனம் காத்தலும். கடவுள் முருகன்.

நீலம்-34-குறிஞ்சித்திணை. ஜெவின் எழுத்துக்கள் எல்லாம் குறிஞ்சி நிலமாகி குறிஞ்சிப்பூத்து குலுங்குின்றது. இரவு எழுந்து விருந்தான மலைக்கு செல்லும் ராதை குறிஞ்சியின் காலத்தை அழகாக வடித்து வைக்கின்றாள். ராதையின் வாய்வார்த்தையில் நம்மை வந்து குளிர் மூடிக்கொண்டு விழிநிறைத்து கையுரசி சூடேற்ற வைக்கின்றது.

//எங்கிருக்கிறான்இத்தனை நேரம் என்ன செய்கிறான்பனித்துளி இலைநுனியில் பதறுவதைபார்த்திருக்கிறானா?// ராதையின் விரகமும், கண்ணனின் குழந்தைமையும் இங்கேயே வண்ணக்கோலம்போடுகின்றது.

இத்தனை பெரும் குளிர் இரவில் மண்ணும் குளிர்ந்து கொதித்து விண்ணோக்கி காதல்கொண்டு காமம்பரவி உருகி வழிந்தோடும். . ராதை என்ன செய்வாள். காலமும், இடமும் சூழலும் கல்லையும் கனியவைத்து கருகொள்ளவைக்கும் இயற்கையின் திருவிளையாடல். மண்ணே பெண்ணாகி மலைமுலையால் விம்மும் தருணம், முலைக்கொண்ட பெண் ராதை என்னாவாள்.

//நிலவெழும் இரவுமுகிலொளிர் குளிர்வுஇன்றென் தலைவீங்கி படமாகிறதுஇருபுறமும் எழுகின்றனஆயிரம் தலைகள்ஈராயிரம் விழிகள்பிளவுண்டு துடிக்கும் நாவுகள்முக்காலமும் ஆன மூன்றுகருஞ்சுருள்கள்என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன்என்வால் அளைகிறது பாற்கடலைஎனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி.மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன்என்மடியின் குழந்தை நீஎன் தொடையசைந்தால் விழித்தெழுந்துமுலைதேடும் மகவு//

காமத்தின் உச்சத்தில் தாயாகும் பெண்ணையும், மகவாகும் ஆண்மையும் தெய்வமாகும் வரம்பெற்றவர்கள் அந்த தருணம் மண்ணில்  சொர்க்கம் முளைத்தெழும் தருணம்.  பெரும் காமத்தில் உருகும் ராதையின் உள்ளத்தில்  தெய்வீகத்தை கொண்டு வந்த வைத்த ஜெ எழுத்தில் சொர்க்கத்தை படைக்கின்றார். சீச்சி..சீச்சி..அசிங்கம் என்று முகம்சுளிக்கும் காமத்தை அமுதே சுவையே ஆனந்தமே என்று ஆக்கி தெளிக்கின்றார்.

குறிஞ்சி நிலத்தின் தொழில் வேட்டையாடுதல், தினைபுனம் காத்தல். ராதை இங்கு தன்னைக்காத்து தானே ஒரு தினைபுன புறாவாகிக்  கிடக்கிறாள். கண்ணன் தானே ஒரு வேடுவனாகி வேட்டையாடுகின்றான்.என்ன ஒருபெரும் கொடும் வேட்டை அந்த குறிஞ்சி நிலத்தில் மலைவெளியில்.

//வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவைஅள்ளி என் ஆடைசுற்றி அவன் கைவிலக்கி அகன்றேன். “ஏன்?” என்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன்விரைந்தோடி புதரில் மறைந்தேன்.என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான்//

இறைவனை தாய்த்தந்தையாய் காண்பது சற்புத்தரமார்க்ம்.
இறைவனை எஜமானனாய் காண்பது தாசமார்க்கம்
இறைவனை நண்பனாய் காண்பது சகமார்க்கம்
இறைவனை கணவனாகக் காண்பது சன்மார்க்கம்.

சன்மார்க்கம் என்ற இந்த அன்புமார்க்கத்தில், காதல் ததும்பும் மதுரமார்க்கத்தில்தான் எத்தனைபெரிய வேட்டையாடுதல் இருக்கின்றது. சூழ்நிலைகள் எல்லாம் மலைகளாக மாற தலைவி மானாக,பறவையாக தலைவன் வேடுவன் ஆகி வில்லெடுத்து அம்பு எய்துக்கொண்டே இருக்கிறான். முடியாதபோது தன்னையே இழந்து யாசிக்கிறான். 

குறிஞ்சிக்கடவுள் முருகன் யார்? அறக்கிளிப்புதல்வன், அரவணைத்துயில் நெடியவன் மருகன், நமன் உயிர்கொளும் அழல்கழல் நதிசடை இறைவன் குருநாதன் அவன் மண்ணிடைவந்து குறவர்மடப்பைக்கொடி தனபெற்வை புணர அவள் அடிவிழுந்து கும்பிடுகின்றான். அவள் கிளியோட்டும் மான்வயிறு வந்து மயில் அங்கு வேட்டைத்தான் நடக்கின்றது. என்ன வேட்டை யாசிப்பு வேட்டை. அவளையே யாசிக்கும்வேட்டை. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, வைரத்ததை வைரத்தால் அருப்பதுபோல, சொல்லை சொல்லால் உடைப்பதுபோல, காமத்தை காமத்தால் அணைப்பதுபோல, நாணத்தை நாணத்தால் அழிக்கின்றான் முருகன்.  

சுவடுற்ற அற்புதக் கவலைப்புனத்தினிற்
துவலைச் சிமிழ்த்து நிற்பவள் நாணத்
தொழுதெத்து முத்த பொற்புரிசைச் செருத்தணிச்
      சுருதித் தமிழ்கவிப் பெருமாளே-கவடுற்ற சித்தர் -திருப்புகழ் 

பெண்ணின் பெரும்கோட்டை நாணம், பெண் நாணத்திற்குள் தன் உடம்பை, உடமையை வைத்திருக்கின்றாள். உடமைக்குள் மனத்தை வைத்திருக்கின்றாள். மனத்திற்குள் காமத்தை வைத்திருக்கின்றாள். காமம் ஏற, ஏற அவள் கல்லாகி மலையாகி உயர்கின்றாள். அவனின் நாணம் என்னும் கோட்டையை மேலும் ஒரு பெரும் நாணத்தால் உடைக்கின்றான் ஆண். கண்ணன் ராதையின் தாள்பணியும் இடம்தான் எனத்தனை நுட்பம்.

//கண்ணன் என் காலடியில் அமர்ந்து நெற்றி நிலம்படப் பணிந்தான். “ஆலமுண்ட காலனின் விரிசடைமுடித்தலைஅன்னையே இது நீ நின்றாடும் பீடம்” என்றான்அம்புபட்ட பன்றியென ஆகமெல்லாம்முள்ளெழுந்து உறுமித்திரும்பினேன்என் காலெழுந்து அவன் தலைமேல் நின்றதுஇரு கைதொட்டுஅதைப்பற்றினான்செவ்வான் ஏந்திய சிறகுகளாயின அவை//

காதலிமீது காதலன் கொள்ளும் அன்பு ஒருபுறம் கிடக்கட்டும். மண்ணுயிர் மீது இறைவன் கொள்ளும் அன்புதான் எத்தனை. நாம் கருப்பம்சாறு குடிக்க அவன் அல்லவா கரும்பாகி ஆலை சக்கரத்தில் அரைபடுகின்றான்.

கரும்பு கேட்கிறது “இன்னுமா சினம்”
கருப்பம்சாறு குடித்தவள் சொல்கிறாள் யார் சினந்ததுஎவரை?”

இன்பம் ஒரு சுயநலம்.



நன்றியுடன்
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.