Friday, September 26, 2014

கண்ணீர் வாள்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

உங்கள் எழுத்து சுடவிடும்போழுது இருமைகளின் அடியும் முடியும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து நெஞ்சம் நிறைகின்றது. அந்த அழகு தருணத்தில் மதியின் குளுமையும், கவிதைமணமும், கதிரின் வெம்மையும் வழிகின்றது. .
வான்வேறு, புவிவேறு ஆனால் வானும் புவியும் இல்லாமல் உலகில்லை வாழ்வில்லை. அந்த இருமையின் மையத்தை தொட்டு தொட்டு விரிகின்றது நீலம்.

வாகைசூடி நிற்கும் மன்னன் கண்ணன்தான் தேவகியின் கைக்குழந்தை. அங்கே வானம் இங்கே பூமி.

அக்ரூரர் கண்ணனை தழுவ நினைத்து, தாள்தொடும் கணத்தில் வானும் மண்ணுமாகி நிற்கும் கண்ணனைக்காண்கின்றேன்.

//கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனிதழுவ வந்தவர் நிலம் நோக்கி குனிந்து தாள்தொட்டு தலையில்//

//என் அன்னை தவமிருக்கும் அறை சுட்டுக என்றான்// -இங்கு மன்னன்
என் அன்னை விரும்பும் அணித்தோற்றம் இதுவே என்றான்-இங்கு குழந்தை
என் அன்னை விரும்பும் தோற்றம் இதுவே என்று சொல்லி இருந்தான் என்றாள். அன்று பிறந்தபோது குருதி மணம் கமழும் கைக்குழந்தையாய் இருந்த  கண்ணனை என் அன்னைப்பார்க்க விரும்புகின்றாள் என்று பொருள் வந்தது நிற்கும்.
என் அன்னை விரும்பும் அணித்தோற்றம் இதுவே என்று சொல்லியதன் மூலம் அவள் அகம்விரும்புவது கம்சனின் குருதியில் குளித்து பின்னும் பிறந்த குழந்தையாக இருக்கும் கண்ணனை. கண்ணன் மூலம் தேவகியின் இருவேறு அகத்தோற்றம் விளங்கி நிற்கின்றது. அன்னையின் வடிவும், காளியின் வடிவும். இந்த இடத்திலேயே கண்ணன் அறம் என்னவென்று சொல்லிவிடுகின்றான்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீ ரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

நெஞ்சுபிளக்கும் வாளாகவும், நெஞ்சத்தின் தாழ்திறக்கும் கரமாகவும் கண்ணீர் இருக்கும் என்பதை வள்ளுவர் சொல்கின்றார். அந்த கண்ணீர்தான் நீலத்தில் கண்ணனாகி வந்து உள்ளது. இத்தை கண்ணீருக்கு இடையில் கண்ணன் பிறப்பு எப்படி உள்ளது என்று ஆழ்நதியின் பெருவெளியில் மூழ்கி மூழ்கி போகின்றேன். நீலம் மூழ்கடிக்கின்றது. கண்ணன் ஒன்று ஒரு பெயர் இதுதான் என்று சுட்டி நின்றுவிடால் போய்கொண்டே இருக்கின்றது. முடிவிலியின் ஆழத்தில் வீழ்ந்து வீழ்ந்து உருண்டு உருண்டு போவதுபோல. அடி முடிகாண அழல்உரு என்பது இதுதான் என்பதுபோல் உள்ளது. கண்ணீர்தான் இங்கு கண்ணனாகி உள்ளான் போலும் உள்ளது. எத்தனை மென்மையோ அத்தனை கூர்மை.

விளக்கும் ஒளியும்போல் கண்ணன் இரண்டாகி நிற்கின்றான் இன்று. விளக்கென்றுப்பார்த்தால் மண்அகல், ஒளியென்றுப்பார்த்தால் வான்வெளி.

வசுதேவர் அருகு நிற்கும் குழந்தை, ஆதே நேரம் வசுதேவர் நெஞ்சுடைக்கும் வல்லமை. சிறுவேர் உடைவது பெரும்பாறை.

குழந்தைக்கு வலிக்கக்கூடாது என்று தோள்சுமக்கும் தந்தைதான், சுளுக்கு வழிக்கையில் மிதித்து வலிக்க வலிக்க இழுக்கின்றான். சுளுக்கு வழிக்காமல் சுமந்து செல்வதால் பயன் இல்லை அறமில்லை. 


//மென்மலர் வைரமென்றானது கண்டு மேனி அதிர்ந்தார் வாசுதேவர். விழியென ஒளிர்ந்தன வான்கதிர் இரண்டு. முகமென்றானது ஊழிநெருப்பு. கண்ணனென அங்கே நின்றது காலமென வந்த ஒன்று. இருமுனையும் மின்னும் கூர்வாள். யுகமழித்து யுகம் படைக்கும் யோகம். உதிர நதியிலெழும் பெருங்கலம். ஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்//


கண்ணன் அறத்தின் மென்மையையும் அறத்தின் வன்மையும் ஒரே நேரத்தில் காட்டுகின்றான். ஒரு கையில் சக்கரம் ஒருகையில் சங்கு அல்லது ஒரு கையில் தாமரை மறுகையில் கதை. அன்பும் வம்பும் கொண்ட தரசுத்தட்டின் முள்ளென்று உள்ளது அறம் என்கின்றான் கண்ணன். கண்ணன் ஒரு கண்ணீர்வாள். கண்ணனின் அறவடிவ தரிசனம் இன்று.

நன்றி
வாழ்க வளமுடன்.
அன்புடன்

ராமராஜன்மாணிக்கவேல்.