அன்புள்ள ஜெ சார்
நீலம் நாவலின் உச்சம் என்றால் இன்று வந்திருக்கக்கூடிய அத்தியாயம்தான். நம்முடைய புராண பாரம்பரியத்திலேயே அசுரர்களும் ராட்சசர்களும் பரம்பொருளை அறிந்துதான் முக்தி அடைகிறார்கள். வதம் என்பது மோக்ஷம் என்றுதான் அர்த்தமாகிறது. ஆனால் அதை இப்படி ஒரு ஆன்மீகமான இடமாக எவருமே எழுதியதில்லை என்று தோன்றியது
கம்சன் ஆரம்பம் முதலே கண்ணனை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறான். இந்தக்கதைக்கே இரண்டு கோடுகள் உள்ளன. ஒன்று ராதா. இன்னொன்று கம்சன். ராதை கண்ணனை நோக்கி போகிறாள். கம்சனும் போகிறான். ரெண்டும் வேறுவேரு பாதை. கம்சன் ரத்தம் வழியாக போகிறான். ராதா கண்ணீர் வழியாகப் போகிறாள் என்று நான் புரிந்துகொண்டேன்
நீலமணிப்பறவை வந்து உட்கார்கிற அந்த அத்தியாயத்திலேயே கோடி காட்டிவிட்டீர்கள். எனக்கு சமானமாக ராதைதான். நான் ஒரு படி மேல் என்று கம்சன் உணரக்கூடிய இடத்தை எண்ணியபோது கண்கலங்கினேன்
’கண்ணா’ என்று கூப்பிடுகிறான். பலமுறை நாக்கால் தொடாமல் மனசால் சொன்ன பெயர். சொன்னதுமே முக்தி. அந்த முக்தி என்பது பிள்ளைக்கனியமுதை மார்பு நிறையப்பெறுவதுதான்
அதன்பிறகு மாமன் என்று செம்மாந்து சொல்கிறான். மருகா சிறுமூடா என்னை கும்பிடு என்று. நானே நீ என்றும் என்றுமிருப்பாய் என்றும் அவன் உணர்வதே முக்தி. வேதாந்த ஞானத்தின் கடைசிப்படி
என்ன சொல்ல. கண்ணன் துணை இருக்கட்டும்
ஸ்ரீனிவாசன்