Sunday, September 21, 2014

ராசலீலா





ஜெ

கண்ணன் பல கோபியருடன் ஆடிய ராசலீலாவை எப்படி நீங்கள் கொண்டு வரப்போகிறீர்கள், எப்படிக் காட்சிப்படுத்துவீர்கள் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். இன்றைய வெண்முரசு நீலம் [32] நாவலில் அதை நுட்பமாகச் சாதித்துவிட்டீர்கள். அதேபோல கையில் எடுத்த குழந்தையை காதலாக ராதை நினைப்பதை எப்படிக் கொண்டுவருவீர்கள் என்று கண்காணித்துக்கொண்டிருந்தேன். அதையும் ராதையின் பித்து வழியாகத்தாண்டிவந்துவிட்டீர்கள்.

ராசலீலா மனித உறவுகளிலே இப்போதும் நடப்பதுதான். அம்மா தோழி மனைவி மகள் என்று எல்லா வேசமும் போட்டு பெண் ஆணைச் சூழ்ந்துகொள்கிறாள். அதேமாதிரி ஆண் பெண்ணை விதவிதமான கண்ணாடிகளில் பலராக பார்க்கிறார். அப்படி பார்க்கமுடியாத பெண்ணை அடைந்தவன் பல பெண்களைப் பார்க்க ஆரம்பிக்கிறான் .
“எத்தனை பெண்கொண்டால் நிறையும் ஓர் ஆண்மனம்?’
 “ஒற்றை மனம் கொண்ட ஒருகோடி உடல்.”

--அற்புதமான கேள்விபதில்.. ராசலீலா என்பது மனித மனம் சாதாரணமாக ஆடுவதையே ஒரு யோகமாகப் பயில்வதுதான் இல்லையா?

அருண் எம்.


அன்புள்ள அருண்,

பாலுமகேந்திராவுக்கு நெருக்கமான ஒரு நடிகர் சொன்னார்.  அவர் வாழ்க்கையில் ஏராளமான பெண்கள். ஆனால் அவர் தேடியது ஒரே பெண்ணை. ஒரே நிறம் கொண்டவர்கள். ஏறத்தாழ ஒரே முகமும் உடலும் குரலும் கொண்டவர்கள். அவர்களுக்கு அவர் தெரிவுசெய்யும் உடைகளும் ஏறத்தாழ ஒன்றே. சொல்லப்போனால் அவர் தேடியது ஒரே ஒரு பெண்ணைக்கூட இல்லை. ஒரே ஒரு கணத்தை. பக்கவாட்டில் தெரியும் முகம். பின் ஒளியில் கூந்தல் மின்னிச் சரிந்திருக்கும் ஒரு காட்சி. ஒரு கிளிக். அதைத்தான் வாழ்நாள் முழுக்க விதவிதமான பெண்களில் நிகழ்த்தி ரசித்துக்கொண்டிருந்தார்

வியப்பாக இருந்தது

ஜெ