Tuesday, September 23, 2014

பட்டாடை




ஜெ,

நம்முடைய மரபில் சிருங்கார ரசத்துக்கு ஒரு இலக்கணம் உண்டு. அது எங்கே நிற்கவேண்டும் என்று எவரும் சொல்லிவிடமுடியாது. சுகப்பிரம்ம ரிஷியே கொஞ்சம் அத்துமீறிப்போய்விட்டர் என்று வ.உ.சி சொல்லியிருக்கிறார். ஜெயதேவர் மிகவும் கடந்துபோனார் என்பார்கள்.

ஆனால் அது ஒரு குதிரை. அதற்கு கடிவாளம் என்பது அதை மறைப்பதுதான். அழகியவார்த்தைகளால் அதை மறைத்துகொண்டுசெல்கிறார் ஜெயதேவர் . இயற்கைவர்ணனைகளில் அதை மூடிவைக்கிறார் காளிதாசன். இரண்டுமே நிர்வாண உடல்மேல் பட்டு ஆடையைப்போட்டு மூடிவைப்பதுமாதிரி என்று எனக்கு வகுப்பு சொல்லித்தந்த ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த ஆடை இல்லாவிட்டால் சிருங்காரம் வெறும் அதிர்ச்சியை மட்டும்தான் கொடுக்கும் ரெண்டாமுறை வாசித்தால் அடச்சீ என்று இருக்கும். அதில் கற்பனையோ நுட்பமோ கிடையாது. துணிந்து எழுதிவிட்டார் ஆசிரியர் என்ற பாராட்டுமட்டும்தான் இருக்கும். கவிதை என்பது சொல்வதிலே கிடையாது. மறைப்பதிலேதான்.

அச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.


விதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.


கைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு

-பட்டு அணிந்து போகிற அழகி மாதிரி. நன்றி

சுவாமி