Monday, September 29, 2014

அழியா இளமை



“எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்து சென்றார்.”

அவர் வேய்குழல் கேட்கக் குழப்பம் அடைகிறார்கள் அமைச்சர் முதலானவர்கள். அனங்கமஞ்சரி மட்டுமே அவருடைய பால்யம் அறிந்திருக்கிறாள். அவள் அந்த ஆடலின் ஒரு silent witness.
.
கீதை உரைத்து, போர் முடித்து,  மணி முடி தந்து திரும்பி வருகிற பெரும் அரசர் அவர். அந்த நீண்ட வாழ்க்கையில் எத்தனை கண்டிருப்பார், எவ்வளவு சலிப்பு இருந்திருக்கும். முதிர்ந்து  தளர்ந்து குழலூதும் அவர் அழைப்பது ராதையை மட்டுமே. அவளைக் கண்டடைந்து கண்ணனாவது அற்புதம். மாமன்னர் கிருஷ்ண தேவர் அன்னை முன் வந்தடைவது  பெரும் தனிமையை மனதில் ஏற்படுத்தி விட்டது.

அது அந்த உயிரின் தனிமையா, அல்லது நீலம் நிறைவுற்று என்னுள் ஏற்படும் வெறுமையா. வெறும் முப்பத்தேட்டே நாட்கள் தானா, இந்த நாட்களை வெறும் கணிதக் கணக்காகப் பார்க்க முடியாதல்லவா? யுகம் யுகமாக சுனையில், நதியில், கடலில், ஆழியில் மலர்களில், விண்ணில் ராதையாக கண்ணனாக ஆடி அலைந்து தரையில் விழுந்தது போலிருக்கிறது.

ரவிச்சந்திரிகா



அன்புள்ள ஜெ

நீலம் நாவலின் உச்சம் முதிய கண்ணன் வருவது. அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் கதைகளில்கூட கேட்டதில்லை. கிருஷ்ணன் முதிர்ந்து இறந்தார். யாதவர்களின் குலச்ச்ண்டையில் மனம் உடைந்துபோய் இருந்தார். அப்போது ஒரு வேடனால் கொல்லப்பட்டார். இதெல்லாம் தான் வாசித்தது. அதைச் சுருக்கமாகச் சொல்லி போய்விடுவார்கள். நீலத்தில் வரும் கண்ணனின் தளந்த தோற்றமும், வந்த பணி முடிந்தது என்கிற நிறைவு கலந்த சிரிப்பும் மனதைக் கலங்கவைத்தது.

கண்ணனுக்குத்தான் எல்லாம். ராதைக்கு என்றும் இளமைதான். அதை அவளே கண்னனிடம் கேட்டு வாங்கியிருக்கிறாள்

இப்புவியில் நீ ஆடுவதெல்லாம் அறிந்தவளல்ல நான். எளியவள். ஏதுமறியா பேதை. என் விழியறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடட்டும். அங்கு அழியாத பொய்வந்து குடியேறட்டும். இளமையெனும் மாயையில் என்றுமிருக்க அருள்செய்க. இளந்தளிராய் நான் உதிர என்னருகே நீ திகழ்க!


ஆகவே அவள் என்றும் அழியாத இளமையுடன் இருக்கிறாள். அவளுக்கு பிரேமைமட்டும்தான். ஞானம் விவேகம் ஒன்றுமே தேவை இல்லை. பிரேமைவழியாகவே முக்தி. ஆகவே முதுமையே இல்லை.

சண்முகநாதன்