Saturday, September 27, 2014

அழியாதது




ஜெ

ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல கோணங்களில் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இடம் மிகவும் புதியது. இப்படி எதிர்பார்க்கவே இல்லை. கிரியேட்டிவிட்டி என்பது நாவல்ட்டியெதான் என்று புரியாமல் எத்தனை வாசித்தாலும் பயனில்லை

கண்ணன் வயதாகி இருக்கிறான். பாரதப்போர் முடிந்துவிட்ட்து. 80 வயதில் கிருஷ்ணன் 82 வயதில் சித்தியடைந்ததாக கணித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். 

நாண் தளர்ந்து மூங்கிலானது வில். 
மரமறிந்து சிறகமைந்தது புள். 
வினைமுடித்து மீள்கிறது அறவாழி. 
நுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி

என்று நிமித்திகன் சொல்வதை வைத்துப்பார்த்தால் கிருஷ்ணன் கூடிய சீக்கிரத்தில் மறையவிருக்கிறார். அது அவருக்கே தெரியும். அவர் காத்திருக்கிறார். அதற்குமுன் ராதையைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்

நீங்கள் காட்டும் இந்தக் கிருஷ்ணரிடம் விளையாட்டுத்தன்மை இல்லை. முதிர்ந்திருக்கிறார். அவரை சின்னவயது முதல் தெரிந்த சிலர்தான் இருக்கிறார்கள். அவர் தனிமையிலே இருக்கிறார். அவரது அமைச்சர்களுக்கு அவர் புல்லாங்குழல் வாசிப்பார் என்றே கூட தெரியவில்லை. ராதையை அவர்களுக்குத் தெரியாது

கதையை வைத்துப்பார்த்தால் அப்போதே யாதவர்களின் உட்சண்டைகள் ஆரம்பமாகியிருக்கும். கிருஷ்ணர் சலித்திருப்பது தெரிகிறது. அவர் ராதையைப் பார்க்கும்போது கடைசிக் கடமை முடிகிறது.

பிறந்து ஒருநாள் கூட ஆகாத கைக்குழந்தையாக இரண்டாம் அத்தியாயத்திலே வந்த கிருஷ்ணனை இப்படி பார்ப்பது ஒருமாதிரி மனசை கஷ்டப்படுத்த்னாலும் இதெல்லாம்தான் அறிந்துதானே அவன் வந்தான் என்றும் தோன்றுகிறது. கிருஷ்ணனைக் கொன்ற வேடன் பெயர் ஜரா. அப்படியென்றால் நரை. மூப்புதான் அவரை கொன்றது.

ராதையின் சன்னிதியில் குழலூதி நிற்கிற கிருஷ்ணனுடன் கிருஷ்ணனின் வாழ்க்கைக்கதை முடிந்த்து. பூத உடல் மறைவது மட்டுமே மிச்சம். அப்படியென்றால் தொடக்கம் முதல் முடிவு வரை சொல்லிவிட்டீர்கள்.

கிருஷ்ணனுக்கு வயதாகிறது. ராதைக்கு வயதே ஆகவில்லை. இப்போதுதான் ஐந்தாறு வயது ஆகியிருக்கிறது. இன்னும் பிரேமையையே ஆரம்பிக்கவில்லை. ராதை ஏகப்பட்டபேர். அவர்கள் பிறந்து வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் கிருஷ்ணன் ஒருவர்தான்.

இன்னொருமாதிரி முடித்துவிடமுடியுமா என்று ஒருநாவல் தோன்றுமென்றால்தான் அது உண்மையிலே நிறைவு அடைகிறது. சில கிளாசிக்ஸ்தான் அப்படிச் சொல்லமுடியும். இது அப்படிப்பட்ட நாவல்.

ஆசிகள்


சுவாமி