Sunday, September 21, 2014

மருத மலர்


அன்பான ஜெயமோகன்

கைமுற்றி தோலாகி கால்முற்றி மண்ணாகி கண்சுருங்கி முகம் வற்றி உருமாறும் கண்ணன்.............

இளம் கண்ணன் முதிர்ந்து கணவன் ஆகும் கனிவு. முற்றி, வற்றி, சுருங்குதல்தானே கனிதல். முற்றிய கனியின் இனிமை எந்த இளம் காயில் உண்டு? ஒரே வீச்சில் காமத்துக்கு அப்பால் உள்ளே வாழ்க்கையின் நீளம் எவ்வளவு என்பதைச் சொல்லி விடுகிறீர்கள். ஆண்களின் அத்தனை முகங்கள், அத்தனை செயல்கள், எத்தனை சுமைகள். எவ்வளவு தாங்குகிறார்கள். அந்தக் காதல்தான் எவ்வளவு மகத்தானது.

ரவிச்சந்திரிகா

ஜெ

மருதம் என்றால் ஊடல். தலைவனின் பரத்தையாடல் கண்ட தலைவியின் சினமும் அதை அவள் ஏற்றுக்கொள்வதும்தான். 

எப்படியோ அதிலே பரத்தமையை ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு அம்சம் உண்டு. கண்ணன் லீலையிலும் அது உண்டு. கண்டிதை, விப்ரலப்தை பாவங்களை அஷ்டநாயிகா பாவத்தில் ஆடும்போதும் அந்த நியாயப்படுத்தல் வந்துவிடும். ’கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ?’ என்றுதானே பாடுகிறார்கள். அந்த இடத்தை உணர்ச்சிகரமாகவும் ஆன்மிகமாகவும் புதிய ஒளியில் விளக்கி கொண்டுசென்றிருக்கிறீர்கள். கொந்தளிப்பதுபோன்ற மொழியில் முற்றிலும் வேரு இடங்களுக்கு கிருஷ்ணன் வழியாக போய்வந்த நிறைவு

சண்முகம்