Saturday, September 27, 2014

யோகம் இரண்டு
அன்புள்ள ஜெ


நீலம் உங்கள் படைப்புகளிலேயே தனிச்சிறப்பானது. கொற்றவையில் ஒரு மெல்லிய தாளம் உடைய மொழிநடையை கைக்கொண்டிருந்தீர்கள். தூயதமிழ்நடையும்கூட. அது இதிலே உச்சம் கொண்டுவிட்டது. நடை என்று சொல்லமுடியாது. நடனம் என்றுதான் சொல்லவேண்டும்

அந்தநடை இதற்குத் தேவையாகிறது. அந்த நடை இல்லாமல் இந்நாவலை யோசிக்கவே முடியாது. எனென்றால் இந்நாவல் நடைமுறைசார்ந்தஉலகிலேயே இல்லை.நடைமுறை விஷயங்கள் கொஞ்சம் வந்தாலே கீழே இறங்கியிருக்கும். இதில் ராதையின் பகுதி மனசுக்குள்ளேயே நடக்கிறது. ஒரு நினைவு மாதிரி. கம்சன் பகுதி அதோடு ஒட்டாத யதார்த்தமாக இருக்கக் கூடாது. ஆகவெ அதை வெவ்வேறு குரல்கள் சொல்வது மாதிரி அமைத்திருக்கிறீர்கள். இரண்டுக்குமே சந்தம் உள்ள நடை கைகொடுக்கிறது. நடப்பதை பார்ப்பதுமாதிரியான யதார்த்தவாதம் இல்லாமல் சொல்லிக்கேட்பதுமாதிரி அல்லது மனசுக்குள் தாளத்துடன் மொழி ஓடுவதுமாதிரி நாவலை உணரமுடிந்தது.

அதோடு மிகச்செறிவான மொழி. அலங்காரத்துக்காக ஒரு வரிகூட எழுதப்படாமல் சந்தத்தை கையாள்வது பெரிய சவால். அது நிகழ்கிறது.நூற்றுக்கணக்கான வரிகளை நான் குறித்துவைத்தேன். பலவரிகள் ஒட்டுமொத்த ஆன்மீகத் தேடுதலையே சொல்லக்கூடியவையாக இருந்தன

நாவலின் கட்டிட அமைப்பை நான் இப்படி உருவகம் பண்ணிக்கொண்டேன். சரியாக இருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். ஒரு ஓட்டம் ஹட்யோகம் அல்லது அகோரமார்க்கம் போன்ற ஒரு வழி. இன்னொன்று பக்தி உபாசனா மார்க்கம். முதல் வழிக்கு கம்சன். இரண்டாவதுக்கு ராதை. இது இருவருமே முக்தி அடைந்ததைப்பற்றித்தான் பேசுகிறது. ஆனால் பரிபூரணம் அடைந்து பிரம்மம் ஆனவள் ராதைதான்

கிருஷ்ணனின் பிறப்பும் சரி, கம்சன் செய்யும் கொலையும் சரி குறியீடுகளாகவுமே வாசிக்கக்கூடியவை. ‘யோகத்திலே முதலில் செய்யவேண்டியது கொலை. சொந்தக் குடும்பத்தையும் குழந்தைகளையும் கொலைசெய்யவேண்டும். உறவினர்களை கொலைசெய்யவேண்டும். மொத்த உலகையும் கொலை செய்யவேண்டும். அந்த ரத்தம் வழியாகத்தான் நாம் விடுதலை அடையமுடியும்’ என்று என் குருநதர் சொல்லுவார். அதுதான் குழந்தைக்கொலை. அதைத்தான் கம்சன் செய்கிறார். ஆனால் ஒரு சின்னப்பறவை மிஞ்ச்விடுகிறது

அதன் முதல் அத்தியாயம் சொல்லெழுதல் என்று இருக்கிரது. மனசுக்குள் முதல் சொல் எழுவது முக்கியம். அதுதான் தொடக்கம். அந்த முதல்சொல்லை மூலமந்திரம் என்பார்கள். திலகவதி அருணகிரிக்குச் சொன்னதுமாதிரியான சொல் அது. அடுத்து பொருளவிழ்தல். அடுத்து அனலெழுதல்.

பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக! - என்று வசுதேவர் நடனமாடுகிறார். அந்த அத்தியாயமே மூலாதாரக் கனல் எழுவதுமாதிரி இருக்கிறது. ரத்தம் தீயாக மாறுவதுமாதிரி. ‘இதன் வலக்கையில் அனல்குறி உள்ளது’ என்று யோகமாயை பற்றி சொல்லப்படுகிறது. அதுதான் குறியீடு.

செழுங்குருதி,சுழலாழி,பாலாழி என்று மூன்று அத்தியாயங்கள். அனல் கண் திறழ்ந்தபிறகு வரும் நிலைகள்.
‘அதற்குமேலே ஐந்து கோட்டைகளை இடிக்கவேண்டும்’ என்று என் ஆசிரியர் சொல்வார். ‘மூலாதாரம் முதல் ஐந்து சுழிமுனைகள். மூலாதாரம் பூதனை. பூமி. அன்னம். மண். அடுத்து காற்று அதாவது பிராணன்.

அதுக்கப்பால் நீர்.அதற்குப்பிறகு ஆலகால விஷம் எழும் நெருப்பு. அதுதான் காளியன். அதன்மீது நின்று ஆடுகிறது பெரிய யோகக்குறியீடு. அதன் பிறகு வானம்.அதுதான் ஆக்ஞை. அதை தாமரையாகவும் சக்கரமாகவும் அந்த அத்தியாயம் சொல்கிற்து. சொல்லாயிரம்,பொருள் ஒன்று, ஒன்றே அது என தலைப்புகளே அந்த வளர்சியை சுட்டிக்காட்டுகின்றன. அதுதான் கடைசியில் முடி,கொடி என்று நிறைவடைகிறது.

அதேமாதிரி ராதையின் பிரேமையின் வளர்ச்சியும் பல யோகஅடையாளங்கள் வழியாகவே செல்கிறது.இந்த கட்டிடமே நிறையவிஷயங்களைச் சொல்கிறது. நான் இனிமேல்தான் முழுசாக வாசிக்கவேண்டும். புத்தகமாக புரட்டிப்புரட்டிவாசித்தால்தான் சரிவர வாசிக்கமுடியும்

மீனாட்சி சுந்தரம்