Sunday, September 21, 2014

உடுக்கை ஒலி




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

மருத நிலத்தின் அனைத்து வாழ்வியல் நுட்பங்களும் கவிதைத் தடங்களாய் பதிந்த அற்புத பயணம் நீலம்-33.

கண்ணன் என்பவன் யார்? மனிதனா? மன்னனா? தெய்வமா? பரபிரம்மமா? சச்சிதானந்தமா? என்று காட்டிப்போகும் காட்டில், கண்ணன் பூவாய் மலர்ந்து நினைவில் நீங்காமல் வாசம்செய்யும் பதிவு நீலம்-33.

மகாபரக்கதையில் இனிவரும் கண்ணன், மன்னாய், பாஞ்சாலியின் அண்ணனாய், பார்த்தனின் நண்பனாய், போரில் சாரதியாய், சொல்லில் கீதையாய் எப்படி வளர்ந்து நிற்பான் என்பது இந்த அத்தியாத்தில் இருந்து வெளிவரக்கூடியதாக இருக்கின்றது.   நீலம் முழுவதும் படித்து கண்ணனை அறிந்துக்கொள்ளவில்லை என்றாலும் இந்த ஒரு அத்தியாயம் படித்தால் கண்ணனை அறிந்துக்கொண்டுவிடமுடியும்.

//ஆயிரம் கண்ணன்கள். என் விழியே, என் நெஞ்சே, என் முதிரா மொழியே, நான் காண பெருகிச்செல்லும் கண்ணனெனும் பெருவெள்ளம். காதலிளம் கண்ணன். மங்கையர் மனம் கொண்டு விளையாடும் கண்ணன். குழல்கொண்ட கண்ணன். மனையாளின் கைபற்றி தலை நிமிர்ந்த கண்ணன். அவள் பெற்ற மைந்தரைத் தோள்சுமந்து வழிசெல்லும் கண்ணன். குடிலமைத்து அதில் அவளை குடியமர்த்தும் கண்ணன். அவள் அளித்த புல்லுணவை சுவைத்துண்டு முகம் மலரும் கண்ணன். அவள் உண்ண தன் உணவு குறைத்து உளம் நிறைந்தெழும் கண்ணன். தானுண்டு எழுந்தபின் அவள் உண்டாளா என்று வந்து நோக்கும் கண்ணன். குளித்து ஈரக்குழல்கொண்டு வரும் கண்ணன். அவள் முந்தானை நுனிகொண்டு முகம் துடைத்து சிரிக்கும் கண்ணன். அவள் இல்லா இல்லத்தில் அவள் நினைவால் தனித்திருந்து புன்னகைக்கும் கண்ணன். அவளில்லா குளிரிரவில் அவள் அணிந்த ஆடையொன்றை அணைத்துறங்கும் கண்ணன்.
கண்ணன் முகம் என் கண்முன் மாறக்கண்டேன். காய் சிவந்து கனியாவதுபோல் அவன் கண் கனிந்து ஒளிகொண்டது. என் கைபற்றி அழைத்தான். கொடிவிலக்கி செடிவிலக்கி யமுனைக் கரையருகே என்னை நிறுத்தினான். “நதி ஒன்று. அள்ளி உண்ணும் கைகளோ கோடி கோடி. அவரவர் கையளவே அள்ளுவது விதியாகும்” என்றான்//

சுமார் இருபது ஆண்டுகள் முன்பு கொள்ளிடத்தின்  கிளைவாய்க்காலாகிய ராஜன்வாய்க்கால் கரையில் அப்பாவை சைக்கிளில் வைத்து மிதித்துக்கொண்டு சென்றேன். வாய்க்கால் சிறுசிறு குட்டையாகி குட்டைஎல்லாம் கண்ணீர் ததும்பும்விழிபோல வானம் பார்த்துகிடந்து. அந்த குட்டையில் குளித்து ஈரஉடையுடன் எழுந்துவரும் அக்காவின்  முகத்தில் என் விழிகுத்தி நிற்க நான்மட்டும் சைக்கிள் மிதித்துப்போனேன்.

மனதில் பழம்நினைவு மின்னல் அடித்தது. நண்பன் உடன் பிறந்தவர்கள் பதினொருபேர். முகம் தெரியாத அக்காக்களும் அண்ணன்களும் அவனக்கு உண்டு என்று அவன் சொன்ன பழம்நினைவுதான் அந்த மின்னல். அதை அவன் ரசித்து சொன்னான் என்பதால் என் மனதில் அமிலம்சொட்டியது அந்த கணம். நண்பன் அப்படி இருக்கவில்லை. ஒருவேளை தசரதனுக்குதான் பிறப்பேன் என்று ராமன் என்றும் அடம்பிடிக்கின்ற பேர் வழியோ அறியேன்.  பதினோரு உடன்பிறப்புகளை கரைசேர்க்க அவன்பட்டப்பாடு ராமன்படவில்லை.  அவன் அக்காவை நான் அறிவேன். அந்த அக்காவின் சாயலை 50கி.மீ தொலைவில் உள்ள ராஜன்வாய்க்காலில் அன்று கண்டேன். இது ஒரு காட்சிப்பிழையாக இருக்கலாம். தோற்றப்பிழையாக இருக்கலாம் அந்த கணம் தந்த அதிர்ச்சி அது.

மருதத்திணையின் நாகரீகம் ஊடலும், ஊடல் நிமித்தமும். தலைவி ஊடுவது கணவனின் பரத்தை தனத்ததை கண்டு. மருதநிலத்தில் தனம் விளைவதால் தனம்தேடும்போகும் கணவன் தனத்தில் மூழ்கினானோ என்னவோ? நீலம்-33 எழும்போதே எத்தனை அற்புதமாக எழுந்து மலர்கின்றது.

//நாணமற்றது மருதம். நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது. ஆலென்றும் அரசென்றும் குலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை இழிவு நீரோடும் இடமெல்லாம் வேரோடிச்செல்லல்//

ஊடல் என்றதும் நெஞ்சில் அறையும் ஒரு பெரும் ஊடல் திருநீலகண்டர் மனைவிக்கொண்ட ஊடல். அந்த ஊடல்போல் ஒரு ஜென்மம் முழுவதும் வளர்ந்த ஒரு ஊடல் மண்ணில் இல்லை. அந்த ஊடல் எந்த பாணனாலும் தீர்க்கமுடியாத நெருப்பு ஊடல். அதனால்தான் பாணனுக்கெல்லாம் பெரும் பாணனாகிய நெருப்பாய் நின்றாடும் ஆடல்வல்லான் பொன்மன்றாடும் தில்லை நடராஜனே வந்துதீர்த்து வைத்தான்.
ஆனதங் கேள்வர் அங்கோர்
பரத்தை பாலணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த
ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே
உடனுறைவு இசையாரானார்
தேனலர் கமலப் போதில்
திருவினு முருவின் மிக்கார். –பெரியபுராணம்.


நெஞ்சம் முழுவதும் இனிக்கும் மற்றொ ஊடல். பாடலின் பொருள்மட்டும் நினைவில் தேன் வடிக்கின்றது..  தலைவியின் ஊடலை தணிக்க வந்த பாணனிடம் தலைவி. பாணனே! தலைவனின் விருப்பமாக நீ எதையாவது எனக்கு தெரிவிக்க வந்திருந்தால். இன்று நம் தலைவனுக்கு உடுக்கையின் இடப்புறமாக இருக்கும் எனக்கு எதுவும் நீ சொல்லவேண்டாம். இன்று தலைவனுக்கு உடுக்கையின் வலப்புறம்போல இருக்கும் அந்த பரத்ததையிடம் சென்று சொல்.

என்ன ஒரு உவமை. என்ன ஒரு நயம். உவமையின் வழியாக வெளிப்படும் தலைவியின் அகம்படும்பாடு.  தலைவியன் அகம் ஒசையின்றி அதிர்ந்துக்கொண்டே இருக்கும் பெரும் கொடுமை. ஒலிக்கும் வலப்புறத்தை கண்டுக்கொண்டு நீங்கிப்போகமுடியாத சிறைவாழ்வு. ஒரு மௌனராகம். உலகறியா ஒரு இசை கண்ணீர்.

ராதை உடுக்கையின் இடப்புறமாக ஓசையின்றி அதிர்ந்து்ககொண்டு இருக்க ராதையின் தோழிகள் எல்லாம் உடுக்கையில் வலப்புறமாக ஒலித்துக்கொண்டு இருக்கும் நீலம்-32 நெஞ்சை அள்ளுகின்றது. உடுக்கையில் இடப்புறம் எப்போதாவது அடிவாங்கி அதிர்ந்து அடங்கும் அதிலேயே அணைத்தும் கண்டு அகம் மகிழும்.

உடுக்கையின் இடப்புறமாக இருப்பதே ஒரு பொய்நிறைந்து நிற்கும் அழகுதான். என்றும் இளமையாய் அந்த பாகம் புதிதாகவே விளைந்துநிற்கும். இடப்புறம் இல்லாமல் வலப்பக்கம் ஏது உடுக்கைக்கு. ராதை இருக்கும்வரைதான் ராதையின் தோழிகளும். ராதையும் ராதையின் தோழிகளும் கண்ணனின் வாசிப்பிற்காகத்தான் காத்துக்கிடக்கிறார்கள். பெரும் ஊடலிலும் ராதை தன்நிலை உணர்வது அழகு.

//எளியவள். ஏதுமறியா பேதை. என் விழியறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடட்டும். அங்கு அழியாத பொய்வந்து குடியேறட்டும். இளமையெனும் மாயையில் என்றுமிருக்க அருள்செய்க//

மருதநிலமே கவிதையாகி மலர்ந்து பூக்காடாகி நெஞ்சில் மணக்கின்றது இன்று.

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணி்க்கவேல்.