அன்புள்ள ஜெ
ராதை அறிமுகமான இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு முத்தாய்ப்பு வருகிறது. உண்மையிலே அதுதான் நாவல் தொடங்கும் முதல் அத்தியாயம்.
பருவமடைந்த அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். யமுனை கரைமேல் அவளுக்குப்பிடித்தமான மரக்கிளையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் தேர்ந்தெடுப்பது நீலக்கடம்பை
உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது? அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே
கொஞ்சம் கூட யோசிக்காமல் ராதை போய் அந்த மலர்கடம்பின் கிளையைத்தான் ஒடித்துக்கொள்கிறாள். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொள்கிறாள். அந்தமரம் அவளுக்கு அன்னையாகவும் தோழியாகவும் இருக்கிறது. ஒரு நிரந்தரமான தோழி என்று சொல்லலாம்
ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.
அந்த மரத்தின் கீழே நின்றபோதுதான் அவ்வழியாகப்போகும் படகைப் பார்க்கிறாள். அதிலே கண்ணன் அன்று பிறந்த சின்னக்குழந்தையாகப் போகிறான். அவனுடைய கால்களை மட்டும் காண்கிறாள்
அதன்பிறகு அவள் கடைசி அத்தியாயத்தில் அவள் அந்த நீலக்கடம்பின் அடியில் தெய்வமாக நின்றிருக்கிறாள். யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள்.
இப்போது சின்ன ராதை இருக்கிறாள். அவளும் அந்த நீலக்கடம்பில் ஏறித்தான் விளையாடுகிறாள். அவளும் யமுனையிலே கண்ணனைப்பார்க்கிறாள். படகு விலகிச்செல்லவில்லை. நெருங்கி வருகிறது. சின்னக்குழந்தை இல்லை, முதிய கண்ணன். கால்தெரியவில்லை. பீலி அணிந்த முடி தெரிகிறது
ஒவ்வொரு வரியையும் ஆயிரம் முறை யோசித்து எழுதியதுபோல இருக்கிறது இந்நாவல் ஜெ