தினமும் உங்களுடன் உடனே சொல்வதற்கு பல உண்டு.
சில நாட்களாக எதைச் சொல்வது, எதை விடுவது என்ற எண்ணத்திலேயே எழுதாமல் விட்டு விடும்
மடல்கள் பல.
இங்கே கோடை நிறைகிறது. மரங்கள் இலையுதிர்க்க ஆடுகின்றன.
காற்றில் நடுக்கங்களும் குளிர் மழையும். இத்தனை பசுமை, செழுமை, வண்ணங்கள்,
என்றிருந்த நிலம் மாறிக் கொண்டிருக்கிறது.
இன்றும் நேற்றும் நீலம் வாசித்துத் தாளவில்லை.
“எத்தனை நாள் காத்திருந்தாய், இறுதிப் பற்றும்
அழிவதற்கு?”
“ஒவ்வொன்றாய் உதிர்க்காமல் நீந்திக் கடக்கலாகாது
இல்லாதிருத்தலில் பெருங்கடலை”
“இதுவே விதியென்றும், இனியொன்றும்
இல்லையென்றும், தடமேதும் எஞ்சாமல் தனிமையை உடலணிந்து”
“இறுதிப்பறவை
எழுந்து சென்ற சிறகடிப்பை நெடுநேரம் தன்னில் நெடுமூச்செறிந்து வைத்திருந்தது நதி.”
வாழ்விருந்த சுவடெல்லாம் வீண்கனவாய் மறைய...”
“இங்கொரு நதி இருந்தது. அதில் கோடிமுகம்கொண்டு உயிர் வாழ்ந்தது. கணந்தோறும் நிழல்மாறியது. அதன்
குளிரொளிமீது வானிறங்கியிருந்தது. பெரும்பாழ்நிலம்.”
இருந்த நதியையும்
கோடிமுக உயிரையும் குளிரொளியையும் இந்தப் பாழ்நிலம் பார்த்துக் கற்பனையில் கூடக்
காண முடியுமா? என்ன? எல்லாம் அழிகிறதா, எதுவும் எஞ்சாமல் போய் விடுகிறதா?
அவ்வளவுதானா வாழ்க்கை, அதற்குள்தானா இத்தனை ஆடல்?
இதில் இருந்து
என்னை மீட்டெடுத்துக் கொள்ளவும் உங்களைத்தான் வாசிக்க வேண்டும்.
நிறைந்த அருள்
உங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும்.
அன்புடன்
ரவிச்சந்திரிகா