Wednesday, September 24, 2014

நீலக்குருவி



ஜெ

நீலம் 35  வாசித்தபோது எட்டு நாயகிபாவங்களும் முடிந்துவிட்டதே ஆனால் முழுமை அமையவில்லையே என்று யோசித்தேன்.இன்றைய பகுதியில் எட்டாவது பாவம் வளர்ச்சி அடைந்தபோது சந்தோஷமாக இருந்தது. இன்றைய அத்தியாயத்தை எல்லா வகையிலும் ஒரு கிளாஸிக்கல் முடிவு என்று சொல்லலாம். ஒன்றாகி இணையும் இரு உடல்கள். அதன்வழியாக பரஸ்பர ஞானம் கொள்ளும் இரு ஆன்மாக்கள்.

அதிலும் அந்த இருவகை போகங்கள். ஒருபக்கம் உண்ணும் சிங்கம். இன்னொருபக்கம் நக்கும் பசு. ஒன்று இரண்டு பெரும்பசிகள். அன்னத்தைக் கண்டடைந்த அன்ன உருவங்கள். அன்னத்தினூடே ஆழத்தை அறிகிறது அன்னம். அன்னத்தை அறியும் இரு வழிகள் என்று சொல்லலாமோஅன்னத்தை உண்டு அழிக்கிறது ஒன்று. அன்னத்தை பெற்று உண்டுபண்ணுகிறது இன்னொன்று.

ஆனால் நடுவே கண்விழித்து இரண்டையும் பார்த்துக்கொண்டிருக்கிறதே இன்னொன்று அதற்குத்தான் மேலும் தேவைப்படுகிறது. விண்ணுதித்த போதே தானுதித்த மண் அவள் இல்லையாஉண்பதும் உண்ணப்படுவதுமாய் நடிக்கும் இதுவறிந்த எதுவும் தானறிந்ததில்லை என்று அவளுக்குத்தெரிகிறது. அந்த சக்திக்கூத்துக்குப்பிறகு அவள் மட்டுமே இருக்கும் தனியுலகில் அவன் கூட இல்லாமல் அவள் சென்றுவிடுகிறதும் அதனால்தான் என்று நினைத்தேன். அதோடு திரும்பவும் லௌகீகம் இருக்கிறது என்றும் அங்கே மீண்டும் செல்லவேண்டும் என்றும் சொல்கிறாள்.

ஆண்பெண்ணாகி பெண் ஆணாகி ஆடும் கூத்து அதற்குப்பிறகு. முன்னுடலில் திமிலெழுந்த எருது. பின்னுடலில் முலைகனத்த பசு. நீங்கள் சொல்லியிருக்கும் ரிக்வேதத்திலே வரும் வரி என்று நினைக்கிறேன். தேடிப்பார்க்கவேண்டும். அதன்பின்னர் மீட்பே இல்லை. அவள் பலது ஆகி ஆடும் ஒரு லீலைதான் அவளுக்குத் தேவை. ராசலீலை அதுதான்

மீண்டும் மீண்டும் படித்தேன். இனி இது இல்லை என்று நினைத்தபோது மனசு கனத்தது. ஆனால் ஆரம்பம் முதல் திரும்பவும் வாசிக்கமுடியும். ஒப்பிட்டால் மழைப்பாடல் இதைவிட மூன்றுமடங்கு. ஆனால் இதை வாசிக்க அதைவிட அதிக நேரம் தேவை. இதற்குள்ளே போகும் வழிகள் சுற்றிச்சுற்றி கிடக்கின்றன

ஆமாம். மேலே நீலமும் கீழே பொன்னும் உள்ள அந்தக் குருவி உள்ளதாநான் நேரில் பார்த்திருக்கிறேனா என்று நினைவில்லை. இங்கே நான் இருக்கிற நகரத்தில் காக்கா மட்டும்தான்


சுவாமி