அன்புள்ள ஜெ சார்
நீலம் வாசித்துமுடித்த மனநிலை. உடனே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன் .ஆனால் எழுதியாகவேண்டும் என்று தோன்றியது. நீங்கள் வெளியிடும் கடிதங்களெல்லாமே நன்றாக உள்ளன. அவர்களெல்லாம் உங்கள் படைப்புகளிலே ஊறித்திளைத்தவர்கள் மாதிரி இருக்கிறார்கள். நான் அவ்வளவாக வாசித்தவள் இல்லை. அனால் உங்கள் எல்லா நாவல்கலையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரமும் கொற்றவையும் கஷ்டமக இருந்தன. வெண்முரசு ஆரம்பத்திலே கஷ்டமாக இருந்தது. அதன்பிறகு பழகிவிட்டது. ஆனால் நீலம் அப்படியே என்னை மனசுக்குள் புகுந்து கனவுக்குள்ளே வாழச்செய்துவிட்டது. ஒன்றரை மாச்மாக எங்கிருக்கிறேன் என்றே தெரியாமல் இருந்தேன்
நீங்கள் சொல்லியிருந்தீர்கள் .பெண்களுக்கு பிரேமை நிலை கிடையாது என்று. அது கொஞ்சம் கூட உண்மை இல்லை. பெண்களுக்கு அந்தப்பிரேமை நிலையை வெளிக்காட்ட இடம் இல்லை. அது ஒரு ரகசியமாகவே அவர்களுடைய மனசுக்குள் இருக்கும். குழந்தைகள் வளர்க்கவேண்டும். அதோடு எந்த மனைவியும் இந்த பிரேமைநிலையை கணவனிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அவள் பர்சானபுரியின் பிச்சியாக இருக்கவேண்டும்.
என்னைப்பொறுத்தவரை நான் இங்கே சென்னையிலே ஒரு சின்ன அபார்ட்மெண்டிலே வாழ்பவள். எனக்குள்ள உலகமும் வேலை வீடு எலக்டிரிக் ரயில் என்று மிகவும் சின்னதுதான். அனால நான் வாழ்வது இங்கே இல்லை. அங்கே பறவைகளும் மலர்களும் கண்ணனும் குழலோசையும் உண்டு. ஒரு சின்ன மழைபோதும். நான் பரவசத்திலேயே போய்விடுவேன். நீங்கள் வெளியிட்டிருந்த படங்களை பார்த்தபோதெல்லாம் நான் அப்படி கனவுக்குள் போய்விட்டேன்.
நான் ராதை இருக்கும் நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். உள்ளுக்குள். அனால் வெளியே கட்டுப்பெட்டியான பெண். கல்யாணமாகியது. குழந்தைகள் [இரண்டு பெண்] பிறந்தார்கள். எல்லாமே சரிதான். ஆனால் மனசுக்குள் ராதையிடம் கண்ணன் மட்டும் தான் பேசமுடியும்
கண்ணனை நான் கண்கூடாகக் கண்டு வாழ்ந்து கொண்டிருந்ததுபோல இருந்தது நீலம் வாசிக்கும்போது. வண்ணம் சார். நன்றிகள்
வி