Thursday, September 18, 2014

திரு






அன்புள்ள ஜெ

கண்ணனை காதலனாகவும் கொலைக்காரனாகவும் மாறிமாறி காட்டிச்செல்லும் இந்த நீலம் நாவலை வாசிக்க ஒரு தனி மனநிலை வேண்டும்.  ராதையின் கண்ணன் தான் கீதையையும் சொன்னான் என்று என்னால் நம்ப முடிந்ததே இல்லை. ஆனால் இந்த எல்லா கதைகளும் அவன் ஒருவனிலேயே ஒன்றாகி இருக்கிறது

கம்சன் அக்ரூகர் கதையை நடைமுறை கதைமாதிரி விரித்து எழுதியிருக்கிறார்கள். நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கெ.எம்.முன்ஷி எழுதியிருக்கிறார். பிரபுபாத சுவாமி [இஸ்கான்] எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் இந்தக்கதையில் உள்ள நடைமுறைக்கு இணங்காத விஷயங்கள்தான் மனதில் நிற்கும்

நீங்கள் எழுதியது அதேகதைதான் ஆனால் கவித்துவமாகவும் சுருக்கமாகவும் எழுதிவிட்டீர்கள். ஆனால் இது நம்பகமாகத் தோன்றுகிறது

நந்தகோபனையும் பிறரையும் அரசர்களாகவும் கம்சனுக்கு கப்பம் கட்டியவர்களாகவும் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே அந்தமாதிரி உறவு இருந்திருந்தால் கம்சன் கண்ணனை கஷ்ட்பட்டு தேடி வந்திருக்கவேண்டம் இல்லையா? அதேபோல குழந்தைகளை அவன் கொன்ற பிறகும் அவனிடம் இவர்கள் நட்பாக இருந்திருக்கவும் வேண்டாம்


நீங்கள் எழுதியதே நம்பகமாக இருக்கிறது. அதோடு

காலத்தை ஆளும் மூச்சு. பெரும்புயலில் கொடித்துணிபோல் நெளிந்தன மலைமுடிகள்   

என்று கண்ணனின் குழலிசையை எழுதியிருந்த பிரம்மாண்டம் மலைக்கவைத்தது. திரு தழுவும் தரு.அற்புதமனா சொல்லாட்சி

மகாதேவன்