Friday, September 26, 2014

குருதிப்பேருரு




ஜெ

ராதையின் கதை முடிவடைந்தபோதே நாவல் முடிந்துவிட்டது என்ற எண்ணம் வரத்தொடங்கிவிட்டது. கம்சன் மோட்சம் அடைந்த பிறகு முக்கியமான கதைப்பகுதி ஒன்று இருக்கிறது என்றே தோன்ற்வில்லை. இன்று ஒரு வகையில் நாவல் மங்கலம் பாடிவிடும் என்று நினைத்தேன். ஆனால் இன்றைய அத்தியாயத்தை வாசித்தபோதுதான் அடாடா நாவல் இப்படித்தானே முடியமுடியும் என்று நினைத்தேன்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த ‘ரத்தம்’ வந்துகொண்டே இருக்கிறது. கிருஷ்ணன் ரத்தத்தில் பிறந்தான் ரத்த ஆற்றிலே நீந்தி வளர்ந்தான்.அவன் காலுதைத்து கிளம்பச்செய்த அறச்சக்கரம் ரத்தத்தின் தடம் உடையதுதான். அதைத்தான் நந்தன் பார்க்கிறான். அதைப்பார்த்தபிறகுதான் இவன் கம்சனைக் கொல்வான் என்று நந்தன் நினைக்கிறான். அக்ரூரர் பார்ப்பதும் அந்த ரத்தவெள்ளம் தானே?

கிருஷ்ணன் இப்படித்தான் செய்யமுடியும். கீதையில் அவன் சொன்னதே இதுதானே.“கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.” என்ற வரி கீதையின் சாங்கிய யோகத்தின் சாராம்ஸம் தானே.

கண்ணனென அங்கே நின்றது
காலமென வந்த ஒன்று.

இருமுனையும் மின்னும் கூர்வாள்.
யுகமழித்து யுகம் படைக்கும் யோகம்.
உதிர நதியிலெழும் பெருங்கலம்.
ஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்.

என்ற வரியைப்போல கண்ணனை விளக்கமாகச் சொல்ல அதிகம்பேரால் முடிந்தது இல்லை.

ராதைக்கு கண்ணன் காட்டியது மலர் முகம். வசுதேவருக்கு வைர முகம்.  ’மென்மலர் வைரமென்றானது’. கிருஷ்ணன் என்ற வைரத்திலே மலரின் ஒளியை ஜெயதேவர் கண்டதுதான் ராதாகிருஷ்ணன். மகாபாரதக் கிருஷ்ணன் வைரவாள் மட்டும்தான்

இரண்டு கிருஷ்ணர்களையும் ஆரம்பம் முதலே கச்சிதமாக இரண்டு கதையோட்டங்களாக பின்னிக் கொண்டுவந்து. அதிலுள்ள அமைப்பும் அழகானது. ரத்தத்தில் நனைந்த வைரவாள் மாதிரியான கிருஷ்ணனை ‘எல்லாரும்’ பார்க்கிறார்கள். ஆயர்கள், சூதர்கள், இடைச்சி, பாட்டிகள், அக்ரூரர், யசோதை, ரோகிணி,நந்தன் என்று பலருடைய பார்வை. எல்லாரும் ஏதோ ஒருவகையில் கிருஷ்ணனில் உள்ள அந்த கூர்மையான வாளைத்தான் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆனால் ராதை மட்டும்தான் மலரை கண்டுபிடிக்கிறாள். அவள் வாளைப்பார்க்கவே இல்லை. அத்தனைபேர் பார்த்த வாளைவிட அவள் பார்த்த மலர் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணன் இன்றைய தீர்ப்பை அளிக்கும்போது திகைப்பு ஏற்படுகிறது அவன்

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

என்று சொன்னவன் என்பதை மறந்து அழகான சின்னப்பையனாக மட்டுமே பார்க்கிறோம். இந்தத் திகைப்பே நீலத்தின் வெற்றிதான். நீலன் என்று பெயரிடாமல் நீலம் என்று பெயரிட்டதை இப்போதுதான் புரிந்துகொள்கிறேன். அவன் பெரிய புதிர். கண்ணுக்கு மலர். கைதொட்டுப்பார்த்தால் வாள். வாழ்க்கை முழுக்க அப்படித்தான். முப்பதாண்டுக்கலாமாக நான் கிருஷ்ண உபாசகன். நான் அறிந்தது அப்படித்தான்

ஆசிகள் ஜெ

சுவாமி