அன்புள்ள ஜெ
நீலம் முடிவிலே வரும் ஒரு வரியை வாசித்து உணர்ச்சிவசப்பட்டேன்
பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.
ராதை ஒரு சாமானியப்பெண். யாதவர்களில் அவள் அப்பா பெரிய அரசர் இல்லை. வீட்டுவேலைசெய்து மாட்டுக்கு தண்ணீர்காட்டி பால்கறந்து வாழ்ந்தவள். அவளை வட இந்தியாவிலே ராதாராணி என்றுதான் சொல்வார்கள். மதுராவில் ராதா ராணி என்ற வார்த்தை மட்டும்தான் காதில் விழும்
நான் பலதடவை போயிருக்கிறேன். ஒருமுறை என் மாமியார் ஏன் ராணி என்று சொல்கிறார்கள், சத்யபாமையும் ருக்மிணியும்தானே ராணிகள் என்று கேட்டார் அங்குள்ல கைடு ‘கிருஷ்ணனுடைய மானசராணி ராதைதான்’ என்றார். அது ஆசைநாயகி என்ற அர்த்தம் வருவது மாதிரி இருந்தது
நீலம் வாசித்தபோது ராதை வளர்ந்துகொண்டே போனாள். அவள் காலை கண்ணன் எடுத்து மார்பிலே சூடும் இடத்திலே அவள் கடவுள் ஆகிவிட்டாள். அவள் முன் அவளுக்காக கிருஷ்ணன் குழலூதும்போது அதுவரை ராதை என்றும் பிச்சி என்றும் சொல்லிவந்த நீங்களே ராதை அரசி என்று சொல்லிவிட்டீர்கள்
கிருஷ்ணனை ஜெயித்தவளுக்கு வேறு ஒன்றுமே ஜெயிப்பதற்கு இல்லை. அவள் உலகத்தையே ஆளும் அரசிதான் என்று நினைத்துக்கொண்டேன்
நன்றிசார். நீலம் ஒரு பெரிய கனவு. சீக்கிரம் வெளியே வந்துவிடமுடியாது
எழில்