Wednesday, September 24, 2014

மகாபாரதம் கேள்விகள்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் தளத்தில் வெண்முரசு பற்றி பல கேள்விகள் தினமும் வருவதால் அதைப்பற்றி என் வலைப் பூவில் இவ்வாறு எழுதத்தோன்றியது 

ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தைப் பார்த்தால் தினமும் வெண்முரசு பற்றி வரும் கேள்விகள்தான் எத்தனை எத்தனை? அது ஏன் இப்படி? இது ஏன் இப்படி? அங்கே அப்படி? இங்கே ஏன் இப்படி? என்று கேள்வி மேல் கேள்விகள். பாவம் அவரும் தினம் தினம் பதில் சொல்லி அலுத்துவிட்டார்! ஆனாலும் நாம் கேள்வி கேட்பதை நிறுத்திய பாடில்லை! ஏன் கேள்வி இல்லாமல் அந்த நாவலை வாசிக்க முடியாதா? தங்களுக்குத் தெரிந்ததை வைத்து, படித்ததை வைத்து, கேள்விப்பட்டதை வைத்து, யாரோ சென்னதை வைத்து இப்படியாக எத்தனையோ வைத்துகளை வைத்து கேள்விகளைக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஐயா! இது ஜெயமாகன் அவர்களின் மகாபாரதம். உங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை ஏன் ஜெயமோகன் மெனக்கெட்டு எழுதவேண்டும்? அதற்கு அவர் தேவையில்லையே?

ஏற்கனவே தாங்கள் கேட்கும் கேள்விக்கு தங்களின் பதில்களைத் தயாராக வைத்திருப்பவர்கள், ஜெயமோகன் அதே பதிலைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து வித்தியாசமான பதில் வரும்போது ஒன்று ஏமாந்து போகிறார்கள் அல்லது அதிருப்தி அடைகிறார்கள். ஒரு படைப்பை முன் முடிவுகளோ கேள்விகளோ இன்றி வாசிக்க முதலில் கற்கவேண்டும். கேள்விகள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது படைப்பைப் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும். அதைவிடுத்து வியாசரின் மகாபாரதத்தோடு ஒப்பிட்டு கேள்விகள் கேட்கக் கூடாது. ஜெயமோகன் வியாச பாரதத்திற்கு உரையோ விளக்கமோ எழுதவில்லை என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மனம் கேள்விகளால் நிரம்பியுள்ளது.

சிலர் தாங்கள் அதிபுத்திசாலிகள் என்று நிரூபிக்க கேட்கிறார்கள். பலர் தாங்கள் அறியாததால் கேட்கிறார்கள். மேலும் பலர் கேள்விகள் கேட்பது தங்கள் உரிமை என்பதால் கேட்கிறார்கள். அறியாமையால் கேள்விகள் கேட்பாரும் உண்டு. எனவே நமது மனோபாவம் எப்போதும் கேள்விகள் கேட்பதிலேயே இருக்கிறது. சிலர் அவரது புனைவுக்குள் மூக்கை நுழைத்து ஏன் இப்படி மாற்றி எழுதியுள்ளீர்கள் என்கிறார்கள். நீங்கள் எழுத நினைப்பதையெல்லாம் அவரிடம் கேட்டு அவரை ஏன் இம்சிக்கிறீர்கள்? அதற்கு பதிலாக நீங்களே ஒரு மகாபாரதத்தை ஏன் எழுதக்கூடாது? ஐயா! அவரைக் கொஞ்சம் இயல்பாக எழுத விடுங்கள். உங்களின் கேள்விகள் அவரின் எழுத்தாற்றலைத் திசை திருப்பி விடுமோ என்று அஞ்சுகிறேன். எல்லோரின் கேள்விகளையும் திருப்தி செய்வதென்றால் அது ஜெயமோகனின் மகாபாரதமாக இருக்காது. முடிந்தவரை தகவல் பிழைகளை தவிர்ப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே வாசகர்கள் இத்தகைய கேள்விகளை விடுத்து நாவலைப் பற்றி மட்டும் பேசுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.



அன்புடன்
கேசவமணி.


அன்புள்ள கேசவமணி

கேள்விகள் கேட்பதில் எந்த பிழையும் இல்லை. என்னால் முடிந்தவரை பதில் சொல்கிறேன்- கைகளால் முடிந்தவரை. பலசமயம் கைதான் சலிக்கிறது, மனம் சலிப்பதில்லை. மகாபாரதம் பற்றி ஒரு விவாதம் நிகழ்வதைப்போல மகிழ்வானது பிறிதென்ன?

கேள்விகள் பல தளங்களில் எழுவது இயல்பே. இரு காரணங்கள். ஒன்று மூலமகாபாரதம் - வியாசபாரதம்- முழுமையாக வாசித்தவர்கள் மிகமிகமிகக் குறைவு. ஐம்பதாண்டுக்காலமாக அது இங்கே கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பல ஆண்டுக்காலம் கொண்டு அதை வாசிப்பதும் பெரியவேலை. மேலதிகமாக சம்ஸ்கிருத சொற்களையும் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதும் கடினம்.

அத்துடன் மகாபாரதத்தை புரிந்துகொள்ள உதவக்கூடிய வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியம், குட்டிருகிருஷ்ண மாராரின் பாரதபரியடனம் போன்ற வழிகாட்டி நூல்களும் தமிழில் இல்லை.

ஆகவே பெரும்பாலும் மகாபாரதத்தின் சுருக்கமான வடிவங்களை வாசித்தும், கதாகாலட்சேபம் தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றை வாசித்தும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மகாபாரதத்தை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த மகாபாரதம் ஓர் ஒற்றைக்கதை.

மகாபாரதம் என்பது ஒரு பிரதி [text] அல்ல என்பதையும் அது ஒரு பிரதித்தொகுதி [collective text] என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. முரண்பாடுகளும் விடுபடல்களும் கொண்டது அது. பல இடைச்செருகல்கள், விரிவாக்கங்கள், வெட்டுகள் , திரித்தல்கள் கடந்து நம் கைக்கு வந்தது.

அத்துடன் நாம் அதிகம் அறிந்த மகாபாரத வடிவம் பக்திப்பிரச்சாரகர்களின் மொழியில் பிறந்தது. அதற்கான இடைச்செருகல்களும் விளக்கங்களும் கொண்டது. மோனியர் விலியம்ஸ் முதல் அம்பேத்கர் வரை மகாபாரதத்தை ஆய்வுசெய்த அனைவருமே அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்


இந்த அறிதல் இல்லாமையால் அறிந்ததில் ஓர் உறுதிப்பாடு உருவாகிறது. அந்த உறுதிப்பாட்டை வெண்முரசு போன்ற நூல்கள் அசைக்கின்றன. அந்த சலனமும் ஒரு வாசிப்பனுபவமே. நாமறிந்ததை சரிபார்ப்பதும்,  மறுபரிசீலனை செய்வதும் ஒரு வகை வாசிப்புதான்.

அத்துடன் விழுமியங்களை மறு ஆக்கம் செய்யும் நோக்கம் இந்த நூலுக்கு உண்டு. இது மகாபாரதம் அல்ல, மகாபாரதத்தை மறுஆக்கம்செய்யும் நாவல். இந்தக்காலத்துக்கான மகாபாரதம். நவீன இலக்கிய வடிவம். நவீனச்செவ்வியலின் அழகியல் கொண்டது.

மரபான விழுமியங்களும் மரபான அழகியலும் கொண்டஒரு வாசகனுக்கு அதிர்ச்சி, ஒவ்வாமை முதல் வியப்பும் திகைப்பும் வரை பலவகை எதிர்வினைகள் உருவாகலாம். அதுவும் இந்த வாசிப்பின் ஒரு பகுதியே.

வாசிப்புகள் என்னை வழிநடத்துவதில்லை. இருபதாண்டுக்கால மகாபாரத வாசிப்பு எனக்குண்டு. பிழைகள் கண்டிப்பாக நிகழலாம். ஆனால் அதைப்பற்றி எவர் என்னிடம் சொல்லமுடியும் என்றும் இத்தனை ஆண்டுகளில் அறிந்திருக்கிறேன்

தன்னிச்சையான ஒரு பெருக்காகவே இதுவரை இந்நாவல் வரிசை செல்கிறது. ஆனால் அதில் ஒரு பெரிய திட்டவரைபடமும் உருவாகி வருவதைக் காண்கிறேன். என்னுடைய இலக்கு அதை எய்துவதே. வாசகர்கள் அனைவரும் முழுமையாக உள்வாங்குவார்கள், கூடவருவார்கள் என்ற நம்பிக்கை ஏதும் எனக்கில்லை. வருபவர்களுடன் செல்வதுதான் என் பயணம்

ஜெ