Friday, September 19, 2014

நீலம் -சுரேஷ்,சாமிநாதன்,சேஷகிரி,சரண்





அன்புள்ள ஜெ,

நீலம் இன்றைய பகுதியை மிக நெருக்கமாக உணர்ந்தேன். நண்பர்கள் பலர் முன்னரே சொல்லியிருந்தாலும் இன்று தான் நானும் இதை சத்தமாக படித்துப்பார்த்தேன். இன்னும் மிக நெருக்கமாக இருக்கிறது. தமிழின் முழுச்சுவையையும் உணர இது மிக நல்ல உபாயமாக இருக்கிறது. இப்பொது இரவில் மீண்டும் யாருக்கோ சொல்வது போல படித்து ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த அத்யாயத்தில் ஆயர் குலத்து ஆசிரியன் அக்ரூரன் சொல்லின் வழியாக துலங்கிவரும் கண்ணன் முழுமையாக ஆட்கொள்கிரான்.

அன்புடன்

சுரேஷ் பாபு


அன்புள்ள ஜெ

இன்றைய நீலம் வாசித்து மனக்கொந்தளிப்பும் பிறகு ஒரு நிறைவும் கிடைத்தது. ரத்தத்தில் குளித்து நடந்துசெல்லும் கிருஷ்ணனின் படத்தைப்பார்த்த பதற்றம் கொஞ்சம் அடங்கியது. கண்ணன் கைக்குழந்தையாக வந்து கொல்வதாக நீங்கள் எழுதியிருப்பது கவிதையாக இருந்தது

சாமிநாதன்


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தத்தடவையும் பின் தங்கி  விட்டேன்.ஒவ்வொரு முறையும் நீலத்தை படித்து முடித்தவுடன்  எனது உணர்வை /கருத்தை எழுத  முயல்வதற்கு  முன்பாகவே நமது நண்பர்கள் அதை அணு  அணுவாக ரசித்து எழுதி விடுகிறார்கள்.இன்று வந்துள்ள பகுதியில் ராதையையும்,என்னையும் தவிர (ராதையை விட ஒரு படி மேல்)கண்ணனை வேறு யார் அறிவார் என்பதை படித்து மிகவும் ரசித்ததை எழுத நினைத்தேன்.

அவனைப்பெற்ற தாயறிவாளோ, தந்தையும் அறிவானோ? உற்ற தாயும் உகந்த தந்தையும்தான் அறிவாரோ? ஆயர்குலம் அறியாது, அவனைச்சூழும் கோபியர் குழாம் அறியாது. ஆம், ஆயர் மடமாது அவள் ஒருத்தி அறிவாள். அரைக்கணம் ஒழியாது அவனை நினைத்திருந்தோர் நானும் அவளும் மட்டுமே. அவளறியாத ஒன்றை நானறிவேன் என்பதனால் அணுவிடை அவளை விஞ்சினேன். " 

அதற்குள் நண்பர் ஸ்ரீனிவாசன் அதை எழுதிவிட்டார்.சரி குவலயாபீடம் என்ற யானையை கம்சனாகவே  உருவகித்து எழுதியிருந்ததை பற்றி  எழுதலாம் என்றால் அதை நண்பர் சண்முகம் உடன் விரிவாக நன்றாக எழுதிவிட்டார்.இதற்கு மேல் நண்பர்கள் சீனு,சுவாமி,அருணாச்சலம்,
ராமராஜன்மாணிக்கவேல் இருக்கவே இருக்கிறார்கள்.எனவே எனக்கு இங்கு இடமில்லை.

அன்புடன்,

அ.சேஷகிரி.


அன்புள்ள ஜெமோ

இன்றைய அத்தியாயத்தில் அந்த ஆயிரம் குழந்தைகளின் ஆவிகளும் கம்சன் மேல் ஏறிவிளையாடுவது கிளாஸ். ஒரு கிளாஸிக்கல் நாவலில்தான் இந்தமாதிரியான நெரேஷன் சாத்தியம். இது இல்லாமல் என்ன பெரிய இலக்கியம் என்று வாசிக்கும்போது தோன்றிவிடுகிறது

சரண்