அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது-என்னும் திருக்குறள் வானில் இருந்து துளியாக விழுந்து நீலம்-35ல் விரிந்து பெரும் நீலவாக விரிவதைக்காண்கின்றேன். இப்படிக்காண்பதற்கு விசும்பின் துளி என்று திருக்குறளுக்கு நீங்கள் சொன்ன விளக்கமும் இன்றைய நீலமும்.
// வானம் உருகிச் சொட்டிய துளி
நீலக்குருவி
காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது//
ராதை என்னும் புல்லில் அந்த விசும்பு விழுந்து, அந்த புல்லையும் விசும்பாக்கியது. ராதையும் தெய்வமாள்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கின்றார். பக்தன் வண்டு இறைவன் மலர்நிறைந்தத்தேன். இறைத்தேனை உண்டு உண்டு பக்தன் மலர்ந்து, மலர்த்தேனாகிவிடுகின்றான் அதன்பின்பு இறைவன் வண்டு பக்தன் மலர்த்தேன். பர்னசாபுரி பித்தி என்னும் ராதை வெறும் வண்டு, கண்ணனை உண்டு உண்டு, கண்ணனால் உண்டாகி அவள் தேன்நிறைந்த மலராகிவிட்டாள் கண்ணன் வண்ணடாகிவிட்டான்.
//வெண்தாமரைக்குளம் என வானம் பூத்திருக்கக் கண்டேன். “என்ன இது மாயம்?” என்று சிணுங்கினேன். “உன் மனமறியாத மாயமா?” என்றான். உளம்பொங்கி உடலழிந்தேன். என் விழி துளித்து வழியக்கண்டேன்.இதழ்கடித்து என்னை வென்றேன். ஏதும் உரைக்காமல் வீணே நின்றேன்//
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தருக்கு அருள்வழிங்கி நின்ற அன்று, கண்ணீருடன் ஏதுமின்றி வெறுமையானேன் என்கின்றார். கண்ணனும் இங்கு உன் கலம்நிறைந்தபின்னர் என்னில் ஏதும் எஞ்சாது ராதை என்கிறான்.
//விண்நோக்கி நின்றாய். வேறெதுவும் வேண்டாய். உன் கலம் நிறைந்தபின்னர் என்னில் ஏதும் எஞ்சாதுராதை//
விண்நோக்கி நிற்கும் தவம் என்பது எத்தனை இழப்புகள் நிறைந்தது. அத்தனை இழப்புகளையும் சரிசெய்யும் தவம் கனியும் காலத்தில் இறைவன் வெறுமையாகின்றான். தவம் கொடுமையா? தவம் கனிந்தபின்பு இறைவன் வெறுமையாகிபோகும் நிலை கொடுமையா? ஒன்றாவன் உருவில் இரண்டானவன் என்னும் நிலை. சிற்றின்பத்தை ஏன் பேரின்பம் என்கிறார்கள் என்பதை ஜெவின் நீலம் மலரவைத்துக்காட்டுகின்றது.
பணிவதே பணியென்று பணித்தாய் நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்து உவப்பேன் என்கின்றது கந்தகுருகவசம்
மனிதரும் தேவரும் மாயமுநிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக்கோமளமே என்கின்றது அபிராமி அந்தாதி
கண்ணன் பணிகின்றான், 16வகை பணிவிடைகள் செய்கின்றான், பக்தியால் நிறைகின்றான் அதன்பின்பு
“ஏத்தவிடு ஏத்திவிடு மூலமந்திரம் ஏத்திவிடு
மூலமது ஏத்துபவர்க்கு கால பயம் இல்லையடா” என்பதைபோல் “ராதை” என்னும் மூலமந்திரம் ஏத்தி நிற்கின்றான் கண்ணன்.
இறைவன்தான் பக்தன். பக்தன் எல்லாம் இறைவன். பெரிது பெரிது பக்தனின் இதயம் பெரிது.
கண்ணனே பக்தனாய்! ராதை கொடுத்துவைத்தவள்.
ஆன்மா ஒரு பறவை, பறவையால் ஆன நீலம்-35. ஆன்மசரணாலயம்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்