ஐயா,
உங்கள் நீலம் மலர்ந்த நாட்களை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்கிறேன்.
அத்தனையும் பகிர்தலுக்கு நன்றி.
"எழுத எழுத உடம்பு சிலிர்த்தது. நறுமணங்களை என்னால் உணரமுடிந்தது. நெஞ்சு
விம்மி உதடுகள் துடித்தன.கடைசியில் கண்ணீர் வழிய தொடங்கியது"
"காதலாகிக் கண்ணீர் மல்கி" எனப் பாடியவர்களும் நீரும் ஒரே அனுபவம் பெற்றீர் போலும்.
யோகம் செய்தீரய்யா. யோகத்தின் பலனை எமக்குத் தருகின்றீர் ஐயா.
பின் குறிப்பு:
நான் கலிஃபோர்னியாவில் இருந்து எழுதிகிறேன். என் மடல்களுக்கு நீர் பதிலளிக்கத் தேவையில்லை. உம் நேரம் பொன்ன்னானது.என் மடல்கள் உம் சிந்தனையக் கலைத்து, நேரத்தை வீணாக்கினால், தெரியப்படுத்தவும். குறைத்து விடுகிறேன்.
உங்கள் நூல்கள் பல வாங்க வேண்டும்.முழுதாய்ப் படிக்க வேண்டும்.எப்போது செய்வேனோ தெரியவில்லை
.நன்றிகள்.
டில்லி துரை
அன்புள்ள டில்லிதுரை
கடிதங்கள் எப்போதுமே உற்சாகமூட்டுபவை
ஜெ
அன்புள்ள ஜெ,
நீலம் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ராதை கிருஷ்ணனின் கால்களை முதலில் பார்க்கும் இடம் வந்தபோது சிலிர்த்தது. இந்த உணர்வுகளும் சரி இந்த இடமும் சரி பக்திநூல்களில் உள்ளவைதான் ஆனால் அவற்றை புதியமொழியில் புதிய அனுபவமாக வாசிக்கையில் அந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது
ஏனென்று யோசித்தேன். பக்தி என்பது ஓர் உண்மையான விஷயம். godliness என்பதை மனிதமனம் உணரும்போது வரும் எழுச்சி அது. அது perennial ஆனால் cliche வார்த்தைகளாகப்போட்டு அதை எந்த அர்த்தமும் இல்லாமலாக்கிவிட்டார்கள். அந்த அனுபவத்தை புதியமொழியிலே வாசிக்ககையில் மீண்டும் அந்த age old அனுபவத்தை அடையமுடிகிறது.
நன்றி