Tuesday, September 30, 2014

பீலி



அன்புள்ள ஜெ சார்

நீலம் வாசித்து மனம் நெகிழ்ந்துபோன வாசகிகளிலே நானும் ஒருத்தி. அதன் மொழி எனக்கு முதலிலே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பாராயணம் மாதிரி தினமும் கொஞ்சம் வாயால் சொல்லிக்கொண்டே வாசித்தேன். அதிலே உள்ள எதுகைமோனை செய்யுள் வாசிப்பதுமாதிரிஇருந்தது. கொஞ்சம் கொஞ்சமக அந்த மொழிநடை என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. நான் அதிலே கரைந்துபோய்விட்டேன்

கண்ணனை ராதை அவளே உண்டுபண்ணிக்கொண்டாள். அவள் அவனுக்கு அமுதூட்டுகிறாள். பெயர் போடுகிறாள். அவனுடைய மயில்பீலி, புல்லாங்குழல் எல்லாமே அவள் கொடுத்தது. அவள் கொடுத்த மயில்பீலியையும் புல்லாங்குழலையும் ஏந்தி அவன் வந்து அவள் முன்னால் நிற்கிறான்

அவர்கள் முதலில் புல்லாங்குழல் கேட்கும் இடம் மிக உக்கிரமானது. மெதுவாக தோட்டத்தில் மூங்கிலிலே கேட்க ஆரம்பிக்கும் அந்த சங்கீதம் அவளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு பைத்தியமாக அடித்து அப்புறம் விடுதலையை அளிக்கிறது என்பதை வாசித்தபோது மனம் விம்மியது. கடைசியில் அந்த இசையே அவளுக்கு நாதோபாசனையாக ஆனது நிறைவூட்டியது

புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருந்தது நாவல் முழுக்க. ஒரு நாவல் வார்த்தையாக எழுதப்படுவது. அது இப்படி சங்கீதமாக மாறி நாள்கள்கணக்காக மனசுக்குள் ரீங்காரம் போடுவது அற்புதமானதாக இருந்தது

என்பெயர் கூட ராதாதான்

ராதா முருகேஷ்



அன்புடன் அண்ணன் அவர்களுக்கு,
நீங்கள் இன்று குறிபிட்டதை போல, நானும் இருமுறை கனவு கண்டேன்.தெளிவானவை, நிஜத்தை போல.

ஒருமுறை திருமணமாகி கணவனுடன் "உன்னுடன் எப்போதும் உண்மையாக இருப்பேன் " என நினைத்து கொண்டே செல்லும் பெண்ணை போலவும் , மறுமுறை, பாலுட்டும் தாயை போலவும். கலங்கி எழுந்துவிட்டேன். என்னுள் உறைந்த பெண்ணை பதற்றத்துடன் உணர்ந்தபடியே இருந்தேன்.

பிறகு நீலத்தை பதிவிறக்கம் செய்து , சோம்பலான விடுப்பு நாட்களின் பின்மதியத்தில் மட்டுமே வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏனையவர்கள் அடைந்த உணர்வு நிலைகளை படி படியாக உள்வாங்கி கொள்வேன்.

இவ்வினிய அனுபவங்களுக்கு நன்றி ! 

அன்புடன்.