அன்புள்ள ஜெ
வெண்முரசு ஆரம்பித்தநாள் முதல் தொடர்ந்து வாசித்துவருகிறேன். முதற்கனல் கூர்மை. மழைப்பாடல் பிரம்மாண்டம். வண்ணக்கடல் ஆழம். ஆனால் நீலம் பல படி மேல். இது ஒரு கனவு. கனவிலே எல்லாமே உண்டு. முடிந்துவிட்டதா என்று நினைத்து திரும்ப நினைவிலே ஓட்டிப்பார்த்தேன். எங்கோ பழைய காலம் மாதிரி மனதிலே நிற்கிறது. மனசால் பிடிக்கவே முடியவில்லை. என்ன இது என்று நினைத்துப்பார்த்தேன். ராதையை காற்றுவந்து தொட்டு எழுப்பும் அந்த இடம்.
ஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே என்று காற்று அவளை அழைக்கிறது. அந்த அழைப்பு கடைசி அத்தியாயத்திலேதான் அர்த்தமுள்ளதாக ஆகிறது. அவனுக்கு அவன் ஜெயித்த ராஜ்ஜியம் மணந்த அரசியர் ஒன்றுமே வேண்டாம். அவளுடைய பிரேமை மட்டுமே போதும் என்றுதானே வந்தான்.
ராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக! என்று காற்று சொல்கிறது. அப்படி பிரேமையின் திருவடிவமாக அன்னை அந்த யமுனைக்கரையிலே நிற்கிறாள். கிருஷ்ண பகவான் வந்து அவளுக்கு நாதோபாசனை செய்தார் என்றால் அது அவளுடைய பிரேமைக்காகத்தானே?
மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம். என்று அவன் கால்களை அவள் பார்த்ததைச் சொல்கிறது கதை
காற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின
என்று அவள் முன்னால் ப்க்தன் மாதிரி கண்ணன் நின்றிருப்பதைப்போல ராதாமாதவ உபாசனைக்கு சிறந்த உதாரணம் வேறு ஏதும் இல்லை.
நீலம் மொத்த நாவலையும் எங்கோ கொண்டுபோய்விட்டது. எப்படி மீண்டும் ஆரம்பிப்பீர்கள் என்றே தெரியவில்லை
சத்யநாராயணன்