Saturday, September 27, 2014

வியாசனும் ஔவையும்





அன்புள்ள முத்தையா 

அட்சரம் பிசகாமல் அவ்வை பாடலை மேற்கோள் காட்டியிருப்பதால் பீஷ்மர் அவ்வையை மேற்கோள் காட்டுவதாய் வாசகன் புரிந்துகொள்ள இடமிருக்கிறது. அவ்வைக்கு முன்னரே நீதிநூல்களில் இக்கருத்து இடம்பெற்றிருந்துஅதைத்தான் பீஷ்மர் சொல்வதாய் இருந்தால் கூட அவ்வையின் சொற்களால் அதை சொல்லியிருக்க வேண்டாம். பீஷ்மருக்கும் அவ்வைக்கும் இடையிலான பன்னெடுங்கால இடைவெளியை ஜெயமோகன் நன்கறிவார். 

வியாசமனம் என்றபேரில் நீங்கள் எழுதிவரும் கட்டுரைத்தொடர் முதற்கனலை தமிழ்ச்சூழலில் வைத்துப்புரிந்துகொள்வதற்கான மிகச்சிறப்பான ஒரு வழிகாட்டி. அதற்காக நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

அவ்வை மட்டுமல்ல மேலும் பல  பிற்காலத் தமிழ்க்கவிஞர்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன கணியன்பூங்குன்றன் வரை. பிற்காலப் புராணங்களில் இருந்தும் வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன

நீங்கள் சொன்னதுபோல யதார்த்தவாத நோக்கிலும்சரி, வரலாற்று நோக்கிலும் சரி இது பிழையானதே. ஆகவேதான் அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. ஔவையார், கணியன்பூங்குன்றன் வரிகளுக்குச் சமானமான வரிகள் முன்னரே இருந்தவைதான். ஆனாலும் அப்படியே எடுத்தாள்வதற்கு அழகியல்ரீதியான ஒரு காரணம் உண்டு. ஏற்கனவே ர.சு.நல்லபெருமாள் அவர்களின் மகளான சிவா சக்திவேல் அமெரிக்காவிலிருந்து அழைத்து இதைப்பற்றிக் கேட்டார்.

சம்ஸ்கிருத காவியமரபில் அப்படி சில மூலநூல்களை, மூலவரிகளை எடுத்தாள்வது ஓர் அழகாக மட்டுமல்லாது அவசியமாகவும் கருதப்படுகிறது. அதாவது நன்கறியப்பட்ட வரிகளை. அது மணிமிடைப்பவளம் என்னும் அழகு கொண்டது. தமிழிலும் கம்பன் அவருக்கு முந்தைய குறள் வரிகளை எடுத்தாண்டிருக்கிறார். குறளின் வரிகள் ராமாயணத்தின் காலத்தைச் சேர்ந்தவையா என்ற வினா அங்கே இல்லை.சடையப்ப வள்ளலின் மூதாதையர் ராமனுக்கு  மணிமுடி எடுத்துக்கொடுத்த்து போன்ற ஒரு காவியசுதந்திரம் அது

முதற்கனல் அதன் கட்டமைப்புக்குள் நவீன நாவலின் யதார்த்த்தையும் கூடவே காவிய அழகியலையும் கொண்டுள்ளது. ஆகவேதான் இந்த அம்சம் உள்ளே நுழைந்துள்ளது


ஜெ

http://marabinmaindanmuthiah.blogspot.in/