Thursday, September 25, 2014

சரவணன் சாவித்ரி சுகுமார்-கடிதங்கள்




அன்புள்ள ஜெ,

நீலம் முடிவுக்கு வரப்போகிறது என்று மனசுக்குத்தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்கிற மனநிலை இல்லாமலேயே இருந்தேன். தித்திப்பு முடியக்கூடாது என்று நினைக்கும் குழந்தைமாதிரி. கடந்த ஒரு மாசமாக ஒவ்வொருநாளும் நாலைந்துமுறை சந்தம் இழையோடுகிற உரைநடையை வாசித்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கைச்சிக்கல்கள் கிடையாது. தத்துவம் கிடையாது. பூடகமாக இருந்தாலும் அது எனக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஒரே கொண்டாட்டம். நிலவும் பூக்களும் இசையும் காதலும் காமமும் எல்லாம் கலந்து ஒரு போதை

இனிமேல் நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? மீண்டும் பழைய வெண்முரசு ஸ்டைலுக்கு திரும்பிப்போகப்போகிறீர்களா? அதற்கு நம்ம மனசு செட் ஆகுமா ஒன்றும் தெரியவிலலை பார்ப்போம்


சரவணன்


அன்புள்ள ஜெ சார்

கடந்த சில வாரங்களாகவே வேறெங்கோ இருந்தேன். நீலம் வாசித்த அனுபவம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய இலக்கிய அனுபவம். மனம் மயக்கும் அனுபவம். சின்ன வயதில் திடீரென்று ஹிந்துஸ்தானி சங்கீதம் அறிமுகம் ஆகியது. கல்லூரி முதலாண்டில். ஒரு இரண்டு வருடம் வேறு நினைப்பே இல்லாமல் இருந்தேன். அந்த நாட்களை நினைவூட்டியது. இப்போது குழந்தைகள் குடும்பம் என்று ஆகிவிட்டாலும் அந்த நாளின் பசுமையை மறக்கவே முடியாது. அந்த நாள்கள் திரும்ப வந்ததுபோல இருந்தது

சாவித்ரி சிவராம்


அன்புள்ள ஜெ

நீலம் வாசித்தேன். முடியவில்லை. ஆனால் என் மனசில் முடிந்துவிட்டது. உடனே திரும்பப்போய் ஆரம்பம் முதல் வாசிக்கிறேன். நீலமணியை குழந்தையாக பார்த்த ராதையை வாசிக்கும்போது பகீரென்கிறது. ஒருமாசம்தான் அதுக்குள் ரொம்பதூரம் வந்துவிட்டதுமாதிரி இருக்கிறது

ஏன் நீலம் மனசை இப்படி கவர்ந்தது என்று யோசிக்கிறேன். அதில் contemporary யாக ஒன்றுமே இல்லை. எல்லாமே perennial விஷயங்கள். அதனால் ஒரு beyond time அனுபவம் கிடைத்தது. அந்தப்பரவசத்துக்குச் சமானமாக ஒன்றுமே கிடையாது

நன்றி

சுகுமார்