Wednesday, September 17, 2014

இரவு மணம்

செவ்வேளையில் மலர்ந்தது அந்திமந்தாரை. ஒரு சொல் சிவந்தும் மறுசொல் பொன்கொண்டும் பின்னொரு சொல் வெண்மை ஒளிர்ந்தும் செறிந்தது







பின்னர் விரிந்தது மணிசிகை. நீலம் கலந்த நச்சுப்புன்னகை. இதழ்ப் பொதியவிழ்த்து தன் விழைவைச் சொல்லி நின்றது.






அதனருகே பொன்னணிந்து விரிந்தது பூவரசு.




சாளரத்தில் வெண்சிறகுமடக்கி வந்தமர்ந்தது பிரம்மகமலத்தின் பித்தெழுந்த நறுமணம். பச்சை உதிர மணம். இளநீர் வெண்மையின் குளிர்மணம்.







வில்லெழுந்து காற்றைக் கீறி வந்து தைத்த அம்பைப்போல் நிசாகந்தியின் வாசம். சிவந்து முனைகொண்டு வெம்மைஎழுந்து விம்மி உடைந்த கட்டியின் புதுச்சீழ் மணம். உடல்கலந்த குங்கிலியப் புகைமணம்


ஒளி கொண்டு சுடராயின வாழையிலைப்பரப்புகள். தாழைமடல் நீட்சிகள். பகன்றை பேரிலைகள். பாலைப் பூங்குலைகள் [ஏழிலம்பாலை]


கைநீட்டி அழைத்தது சம்பங்கி மணம். காதல் நிறைந்த கைகள். மோகம் மீதூறி நாகமென நெளியும் கைகள்



அஞ்சி பின் சலித்து மெல்லச் சிலிர்த்து ஓரிதழ் பிரித்தது மனோரஞ்சிதம். நாணி தலைகுனிந்து நிலம் நோக்கி தன் குவி விரித்தது.