இனிய ஜெயம்.
நேற்றைய குலைதலும், இன்றைய குமிழ்தலும், நீலத்தின் சிகரமுனை அத்யாயங்கள். இத்தனை அத்யாயங்கள் ஐவகை நிலமாக, அதன் இசையாக, பல்வேறு பாவங்களாக காத்திருந்த ராதை கொண்டிருந்த அத்தனை துயரையும் நீல நீர்ப்பரப்பின் நீலக் கண்ணன்கள் புள்ளியிலும் புள்ளியாக சிறுத்துப் போகச் செய்துவிட்டார்கள் .
ராதை கொண்டிருந்த உச்ச பாவனை உனக்காக நான் என்பது. ஆனால் கண்ணனோ அவளை அவளது ஆளுமையை புள்ளியாக சுருக்கி கண்ணன் வாழ்ந்து கடக்கும் ஆழியில் ஒரு சிறிய துளியாக அவளை மாற்றிக் காட்டுகிறான்.
அவள் சிதையருகே நின்றெரியும் தனியன், அவள் நினைவை உச்சரித்து உயிர் நீக்கும் துணைவன்.
ராதை முற்றிலும் தோற்றுவிட்டாள். இனி பாவனைகள் ஏதும் மீதம் இல்லை வெறும் உடல் அவள். அவள் உடல் வேண்டுவதுதான் என்ன?
இங்கே மீண்டும் பீஷ்மர். பீஷ்மர் சற்றே முன் நகர்ந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? அவர் பீஷ்மராக இருந்திருக்க மாட்டார். சபதமிட்டபோது கூட அவர் பீஷ்மர் அல்ல. இங்கு தன் ஆண்மை முன் மண்டி இடும் பேரெழிலை, தன் அகம் துளித் துளியாய் கடைந்து கண்ட பேரழகின் ஸ்தூலத்தை அந்த இயற்கையின் ஏக்கத்தை கடை சிரிப்பால் இகழும்போதே அவர் பீஷ்மர் ஆகிறார்.
பாவம் பீஷ்மர். பாவம் அம்பை.
ஆனால் நீல வண்ணக் கண்ணன். ராதை முன் மண்டியிட்டு அவள் காலடியில் சிரம் பணிகிறான். அவள் பாதத்தை தன் நெஞ்சில் ஏந்தி மொழிகிறான் '' நீ நின்றாடும் பீடம் நான்''.
காமத்தின் அத்தனை பாவங்களும், தன்முனைப்பும் கடந்து பெண்மை எனும் பேராற்றல் முன் ஆண்மை சரணடைய வேண்டிய ஒரு பெருங்காரணம் ஒன்றுண்டு, பிரபஞ்சத்தை நிகழ்த்திய, அவ்வாற்றலை பெண்மைக்கு நல்கிய பெருங்காரணம்.
ஆதி அந்தமிலா அறியகுண நாதனும் சரணடையவேண்டிய ஆதிகாரணம்.
மீட்சி கண்டவள் ராதையா? கண்ணனா ?
இனிய ஜெயம் என் வரையில் நீலம் இங்கு நிறைவு எய்தி விட்டது.